சிறப்புக் கட்டுரைகள்

சௌமித்ர சட்டர்ஜீ: திரையுலகின் ஆலமரம்

செய்திப்பிரிவு

ஒரு தகவல் என்பது அதனளவில் வெறும் மரக்கட்டை போன்றது - ஜிக்ஸா புதிரில் ஒரு துண்டு போன்றது – மற்ற துண்டுகளுடன் சேர்த்தால்தான் அதற்கு உயிர் கிடைக்கும். சௌமித்ர சட்டர்ஜீயின் பிறந்த நாளை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஜனவரி 19, 1935-ல் பிறந்தார் என்பது அவரைப் பற்றி அதிகம் சொல்லாது. ஆனால், அந்தத் தேதியை அவருக்கு கரோனா அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பு அவர் இறுதியாகப் படப்பிடிப்புக்குச் சென்ற அக்டோபர் 1, 2020 என்ற தேதியுடன் வைத்துப் பாருங்கள்; அவர் ஒரு சாதாரண நடிகர் இல்லை என்பதையும் 86 வயதை நெருங்கிக்கொண்டிருந்தபோதும் அவர் தொழில்ரீதியாக இயங்கிக்கொண்டிருந்தார் என்பதையும் உணர்த்தும்.

பெரும்பாலான நடிகர்கள் 86 வயதிலும் நடித்துக்கொண்டிருப்பதில்லை, அல்லது அவர்களுக்கு வாய்ப்புகள் வருவதில்லை. கிளிண்ட் ஈஸ்ட்வுட், கிர்க் டக்ளஸ், கிறிஸ்டோபர் ப்ளம்மர் உள்ளிட்ட ஒருசிலரையும் நினைவுக்கு அவ்வளவு எளிதில் வராத ஒருசிலரையும் ஒதுக்கிவிட்டால் வேறு யாரையுமே சொல்ல முடியாது. இந்தியாவில், தேவ் ஆனந்தின் வடிவத்தில் ஒரு விதிவிலக்கு இருந்தது, 88 வயதில் இறக்கும்வரை அவர் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால், அப்போது அவர் தனது உச்சபட்ச திரைவாழ்வைக் கடந்துவிட்டிருந்தார்.

ஆனால் சட்டர்ஜீ, அவருடைய எண்பதுகளின் இடைப்பகுதியில் கூட, செயலூக்கத்தில் இருந்தது மட்டுமல்லாமல் அவருக்கான தேவை திரையுலகில் நிறைய இருந்தது. ‘அந்தக் கால நடிகர்’ என்பது போன்ற பதங்களெல்லாம் அவருக்கு ஒருபோதும் பொருந்தியதில்லை. நோபல் பரிசு பெற்ற பிறகு எந்த எழுத்தாளரும் உருப்படியாக ஏதும் எழுதியதில்லை என்று எர்னெஸ்ட் ஹெமிங்வே ஒரு முறை குறிப்பிட்டார். அது இந்திய சினிமாவில் தாதாசாஹேப் பால்கே விருதுக்கும் பொருந்தும். அந்த விருதைப் பெற்றவர்களின் படைப்பூக்க மிக்க ஆண்டுகள் கடந்த காலத்தில் வைத்தே பேசப்படும். இது சட்டர்ஜீக்குப் பொருந்தாது. அவருக்கு 2012-ல் அந்த விருது கிடைத்தது, அதற்குப் பிறகு அவர் மேலும் மேலும் தீவிரமாக நடித்துக்கொண்டுதான் இருந்தார். 2019-ல் அவரது நடிப்பில் 15 படங்கள் வெளியாகின. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 2020-ல்கூட கிட்டத்தட்ட அதே அளவில் அவரது படங்கள் வெளியாகின, அல்லது வெளியாவதற்குக் காத்திருக்கின்றன.

சௌமித்ர சட்டர்ஜீயை எப்படி வரையறுப்பது?

சத்யஜித் ராயுடன் 14 படங்களில் பணிபுரிந்திருக்கும் சட்டர்ஜீயை சத்யஜித் ராயின் நடிகர் என்று முத்திரை குத்தினால் அவர் மற்ற இயக்குநர்கள் பலரிடமும் பணிபுரிந்திருக்கிறார் என்றும் சத்யஜித் ராயிடம் பணிபுரிந்த 14 படங்கள் அவருக்குப் புகழ் சேர்த்திருந்தாலும் அவர் தன் வாழ்நாளில் நடித்த 300-க்கும் மேற்பட்ட படங்களில் அது சிறிய சதவீதம்தான் என்றும் அவருடைய ரசிகர்கள் உடனே சுட்டிக்காட்டுவார்கள். ரித்விக் கட்டக் (1960-களில் ஒரு விவாதத்தின்போது அவரைத் தான் குத்தியதாக சட்டர்ஜீ கூறினார்), புத்ததேவ் தாஸ்குப்தா ஆகிய விதிவிலக்குகளைத் தவிர தபன் சின்ஹா, மிருணாள் சென், தருண் மஜூம்தார் உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து இயக்குநர்களுடன் அவர் பணிபுரிந்திருக்கிறார்.

அவரை திரைப்பட நடிகர் என்று முத்திரை குத்தினால், அவர் நாடகங்களிலும் நடித்திருக்கிறார் என்று மக்கள் கூறுவார்கள்.

அவரை ஒரு நடிகர் என்று முத்திரை குத்தினால், அவர் ஒரு ஓவியர், கவிஞர், செயல்பாட்டாளரும்கூட என்று யாராவது சொல்லக்கூடும்.

அவரை ஃபெலுடாவாக அடையாளம் கண்டால், “இல்லையில்லை, அவர் ‘அபு’வாக (சத்யஜித் ராயின் ‘அபுர் சன்சார்’ படத்தின் நாயகன்) இன்னும் பிரபலம்” என்று யாராவது மறுத்துக் கூறுவார்கள்.

அவரை கல்கத்தாகாரராகவோ வங்காளியாகவோ வரையறுத்தால் அவர் உலகளாவிய மனிதர் என்றும் பிரெஞ்சு அரசாங்கத்தால் ‘ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்டு லெட்டர்ஸ்’, ‘லீஜன் ஆஃப் ஹானர்ஸ்’ ஆகிய விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டதை மக்கள் சுட்டிக்காட்டுவார்கள்.

கதாநாயகர் அல்ல நடிகர்

விவாதங்களில் ஈடுபட விரும்பும் வங்காளிகளைப் பொறுத்தவரை ஒரு விஷயம் மட்டும் மறுக்கப்பட முடியாதது, ‘நடிகர்’ என்று சொன்னால் அவர்கள் மனதில் இரண்டு பெயர்கள்தான் நினைவுக்கு வரும்: உத்தம் குமார், சௌமித்ர சட்டர்ஜீ. இருவரும் மாபெரும் ஆளுமைகள். சட்டர்ஜீயைவிட கிட்டத்தட்ட 10 வயது மூத்தவரான உத்தம் குமார் இருவரில் மிகவும் புகழ்பெற்றவர், 1980-ல் 54-வது வயதில் மரணமடைந்தார். அதன் பிறகு, நல்ல வங்க சினிமாவின் தனியொரு ஆளுமையாக சட்டர்ஜீ உருவெடுத்தார்.

வணிகப் படங்களில் நடித்தாலும் ‘நாயகர்’ – அதாவது உயரமான கட்டிடத்திலிருந்து குதித்தாலும் எந்த அடியும் படாதவரும் வெறும் கையைக் கொண்டே ஒரு டஜன் தீயவர்களை அடித்து வீழ்த்தக் கூடியவருமான ‘நாயகர்’ – என்பதைவிட அதிகம் நடிகராகத்தான் சட்டர்ஜீ அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறார்.

இர்ஃபான் கான், ஆயுஷ்மன் குரானா, நவாஸுதீன் சித்திக்கி, ராஜ்குமார் ராவ் என்று கொஞ்சம் சமீபத்தில்தான் பாலிவுட்டில் புதிய காற்றோட்டம் ஏற்பட்டு, வணிகப் பட நடிகர்கள் சண்டைக்காட்சிகள் இல்லாமலேயே மக்கள் கூட்டத்தை ஈர்க்க ஆரம்பித்தார்கள். சட்டர்ஜீ கறுப்பு-வெள்ளை திரைப்படக் காலத்திலிருந்தே இவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்த வடிவமாக இயங்கிவந்தார். திரையுலகில் அவர் 61 ஆண்டுகள் இயங்கியிருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கும்போது – தொண்ணூறுகளில் இருப்பவர் முதல் பதின்பருவத்தினர் வரை - கிட்டத்தட்ட ஒவ்வொரு வங்காளியும் தங்கள் மனதில் தங்களுக்கு உரித்தான சட்டர்ஜீயின் பிம்பத்தை அன்புடன் போற்றிவருகிறார்கள்: கள்ளங்கபடமில்லாத ‘அபு’, ‘சாருலதா’ திரைப்படத்தில் வரும் அழகான ‘அமல்’, துணிச்சல் மிக்க ‘ஃபெலுடா’; ‘கோனி’ திரைப்படத்தில் வரும் உறுதிமிக்க நீச்சல் பயிற்சியாளர்; அடுத்த வீட்டில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்; நட்பார்ந்த தாத்தா என்று பல பிம்பங்கள். அவர் வெறுமனே திரையில் தோற்றமளித்தாலே அது நம்பிக்கையூட்டும் விதத்தில் இருந்தது, திரைப்படப் படைப்பாளிகள், பார்வையாளர்கள் இருவருக்கும்.

அவருடைய மறைவு என்பது ரொம்பவும் வயதான ஒரு மரம் விழுவதைப் போன்றது. மரம் போய்விட்டாலும் அதன் நிழல் எஞ்சியிருக்கிறது. அந்த மரத்தின் தண்டானது அவர் சத்யஜித் ராயுடன் சேர்ந்து செய்த 14 திரைப்படங்கள் என்று கூறினால் அது அவ்வளவாகப் பிழையாக இருக்காது. சத்யஜித் ராய் இல்லையென்றால் சட்டர்ஜீயின் திரைவாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று ஒருவர் யோசித்துப்பார்க்கலாம். அதேபோல், சட்டர்ஜீ இல்லையென்றால் சத்யஜித் ராயின் படங்களின் தரம் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்றும் நாம் கேட்டுக்கொள்ளலாம். அதைக் குறித்து வங்காளிகள் தற்போது விவாதம் செய்யலாம்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

SCROLL FOR NEXT