சிறப்புக் கட்டுரைகள்

இணையகளம்: கமலா ஹாரிஸும் கருப்புச் சிறுமியும்

செய்திப்பிரிவு

பெண் துணை அதிபர் என்பது இனிமேலும் கற்பனைக் கதாபாத்திரம் அல்ல என்ற புதியதொரு பரிணாமத்தைச் சமீபத்திய தேர்தலின் மூலம் அடைந்துள்ளது அமெரிக்கா. கறுப்பினத்தைச் சார்ந்த பெண், ஆசிய வம்சாவளிப் பெண், தமிழ்நாட்டுப் பின்னணி என்று கமலா ஹாரிஸ் தொடர்பில் நிறையச் செய்திகள் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கவனம் ஈர்க்கும் இன்னொரு விஷயமும் உண்டு.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் நன்றி தெரிவித்து கமலா ஹாரிஸ் ஆற்றிய உரையில் இப்படிக் குறிபிட்டார், “இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம்; ஆனால் கடைசிப் பெண்ணாக நான் இருக்கப்போவதில்லை. இந்த நிகழ்வை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னஞ்சிறு பெண்ணுக்கும், வாய்ப்புகள் நிறைந்த உலகம் இது என்பதை இந்த வெற்றி உணர்த்தியிருக்கும்!”

கமலா ஹாரிஸின் உணர்வுமிக்க இந்த வரிகளுக்கேற்ப ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்தது. நிழலாக ஒரு சிறுமி முன்நடந்து செல்ல, அச்சிறுமியின் நிழலை கமலா ஹாரிஸ் பின்தொடர்வதான படம் அது. யார் இந்தச் சிறுமி? நண்பர் மீன்ஸ் தன் பதிவில் பகிர்கிறார்.

“பாகுபாடுகள் கூடாது என்று சட்டம் சொல்லும்போதிலும், ‘நுழைவுத் தேர்வு’ எனும் முறைமையைத் தடைக்கான உத்தியாகக் கையாண்டு, கறுப்பின மாணவர்களை வெளித்தள்ளும் வேலையைச் சில பள்ளிகள் கையாண்டன. தேர்வில் வென்று இத்தடையை உடைத்து உள்ளே நுழைந்தாள் ஒரு கறுப்பினச் சிறுமி. இனப்பாகுபாடு கொண்ட வெள்ளையினத்தவரின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தாயும் பின்தொடர, புத்தகத்தை ஏந்தியபடி சென்ற சிறுமியின் படமே அது.

பள்ளியிலும் அவமதிப்புகள், பாகுபாடுகள் தொடர்ந்தன. ஆயினும் எந்தத் தடையும் சிறுமியின் பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிற்பாடு எந்தப் பள்ளி அச்சிறுமியை வேண்டாம் என்று ஒதுக்கியதோ, அந்தப் பள்ளியிலேயே அவளுக்குச் சிலையும் நிறுவப்பட்டது. அச்சிறுமியின் பெயர் ரூபி பிரிட்ஜஸ். அவள்தான் கமலா ஹாரிஸின் முன் செல்லும் சிறுமி. எல்லாத் தடைகளையும் உடைத்து முன்னேறும் குறியீடு!”

SCROLL FOR NEXT