ஒருமுறை ஈரானிய இயக்குனர் மக்மல்பஃபைச் சந்தித்தபோது நான் அவரிடம் “இந்தியப் படங்கள் ஏதாவது பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். “இந்தியப் படங்கள் என்றால் வண்ண வண்ணமாக உடையணிந்து, கூட்டமாக ஆடுகிற படங்களைக் கேட்கி றீர்களா?” என்று கேட்டார். எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. “நல்ல இந்தியப் படங்கள்” என்று திரும்பக் கேட்டேன். “அப்படிப்பட்ட படங்களை இந்தியாவில் எடுக்கிறீர்களா?” என்று புன்னகைத்தார். “நான் பார்த்த ஒரே இந்தியப் படம் ‘பதேர் பாஞ்சாலி’. அதைவிடவும் சிறந்த படங்கள் இருக்கின்றனவா? அதுமட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் நான் எனது புதிய படத்தைத் தொடங்கும் முன் ‘பதேர் பாஞ்சாலி’யைப் பார்ப்பேன். அதைப் பார்த்ததும் எனக்கு புதிய உத்வேகம் வந்துவிடும்” என்று சொன்னார். “‘பதேர் பாஞ்சாலி’ ஏன் உங்களைக் கவர்கிறது?” என்று கேட்டேன். அதில் இருக்கும் உண்மையும் எளிமையும் எனக்குப் பெரிய உந்து தலாக இருக்கிறது. முக்கியமாக, இந்தியாவின் ஆன்மா அந்த சினிமாவில் இருக்கிறது” என்று சொன்னார்.
இந்தியாவின் ஆன்மா
‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது’ என்ற காந்தியின் மேற்கோள் என் நினைவுக்கு வந்தது. உலகின் முக்கியமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான மக்மல்பஃப், ஆன்மாவைப் பதிவு செய்த ஒரு திரைப்படமாக ‘பதேர் பாஞ்சாலி’யை ஏன் கருதினார்? காரணம் எளிமையானது. அந்தப் படத்தில் இயல்பான ஒரு கிராமம் இருந்தது. இயல்பான கிராமம் என்பது இயல்பான மனிதர்களால் ஆனது. ஓர் இந்தியக் குடும்பத்தில் வயதானவர்களும் குழந்தைகளும் மிக முக்கியமான அங்கத்தினர்கள்.
‘பதேர் பாஞ்சாலி’யில் துர்கா, அப்பு என்கிற இரண்டு அப்பாவிக் குழந்தைகள் இருந்தார்கள். அவர்களின் விளை யாட்டுக்கள் இருந்தன. கதை சொல்லும் ஒரு பாட்டி இருந்தார். குழந்தைகள் மற்றும் ஒரு பாட்டியின் இயல் பான பங்களிப்பு என்பது இந்திய சினிமாவில் இது தான் முதன்முறை என்றுகூடச் சொல்லலாம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ரே நகரத்தில் வளர்ந்தவர். கிராம வாழ்க்கைபற்றி அவர் எதுவுமே நேரடியாக அறிந்தி ருக்கவில்லை. அவர் அறிந்த கிராமங்களெல்லாம் சாந்தி நிகேதனில் அவர் ஓவியம் பயிலும்போது சக ஓவியர் களின் ஓவியங்கள் வழியே காட்சிகளாகப் பார்த்த கிராமங்கள்தான். மேலும், அவர் எடுத்துக்கொண்ட விபூதி பூஷனின் நாவலும் கிராமத்தின் இயல்புடன் இருந்தது.
திரைப்படங்களை வரைந்தவர்
ரே ஒரு ஓவியர் என்பதால், காட்சிகள் வழியாகவே அவரது சினிமாவையும் எழுதினார். உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசோவா, ரேயின் படங்களைப் பற்றிச் சொல்லும்போது திரைப்படங்களை எடுத்தார் என்று சொல்லவில்லை. ‘திரைப்படங்களை வரைந்தார்' என்று சொன்னார். நாவலைத் திரைப்படமாக எடுக்கலாம் என்று முடிவுசெய்ததும் திரைக்கதையை எழுதுவதற்கு முன், ரே அந்த நாவலின் அற்புதமான கணங்களைப் படங்களாக வரைந்தார். தான் வரைந்த படங்களை வைத்துக்கொண்டுதான் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல ஆரம்பித்தார்.
கல்லூரி நாட்களில் நான் ‘பதேர் பாஞ்சாலி’ படத்தைப் பார்ப்பதற்கு முன், படத்துக்காக அவர் வரைந்திருந்த மூன்று ஓவியங்களைத்தான் பார்த்தேன். ஒன்று, பாட்டியும் சிறுமியும் கையைப் பிடித்துக்கொண்டு தூரத்தில் இருக்கிற கிராமத்தை நோக்கி ஒரு ஒற்றையடிப்பாதையில் நடந்துசெல்கிற ஓவியம். இரண்டாவது, புகை கக்கி வரும் ரயிலின் முன்னால் கூந்தலும் உடையும் பறக்க ஒரு சிறுமி நிற்கிற ஓவியம். மூன்றாவது, வெண்மையான நாணல் செடிகளுக்கு நடுவே இரண்டு குழந்தைகள் ஓடுகிற காட்சி. படம் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலைக் கொடுத்த இந்த மூன்று ஓவியங்களும் அதே தன்மை மாறாமல் காட்சிகளாகியிருப்பதைப் பார்க்கும்போது, காட்சியின் மீது அவருக்கிருந்த ஆளுமை ஆச்சரியமாக இருந்தது.
கொல்கத்தாவுக்கு அருகில் இருந்த போரல் என்கிற கிராமத்தில்தான் ‘பதேர் பாஞ்சாலி’யை அவர் எடுத்தார். இதில் சில நடிகர்கள் தவிர, மற்ற அனைவரும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்கள்தான். 60 வருடங்களுக்கு முன்பு, நடிப்பதைத் தொழில்முறையாகக் கொள்ளாத கிராமத்து மனிதர்களை நடிகர்களாக்குகிற வழக்கத்தை இந்திய சினிமாவில் ஆரம்பித்து வைத்தவர்களில் ரே முக்கியமானவர். அதோடு, திரைப்படம் என்பது முழுமையான காட்சி மொழி என்பதையும் அது வெறுமனே கதை சொல்வதற்கான ஊடகம் மட்டுமல்ல என்பதையும் ரே தனது படங்களின் வழியே நிறுவினார். உரையாடல் இல்லாமல் கதை சொல்வதையே ஓர் ஓவி யராக அவர் பெரிதும் விரும்பினார். மழை வருவதற்கு முன் குளத்தின் மேல் நீந்தும் பூச்சிகள், தட்டான்கள், திருடிய நகையைக் குளத்தில் எறிந்ததும் ரகசியம்போல மூடிக்கொள்ளும் நீர்ப்பாசி என ஒரு கிராமத்தின் தன்மையைக் கதையுடன் சேர்ந்த காட்சிப் படிமங்கள் வழியே பதிவுசெய்தார்.
மனித ஆவணம்
“ஒரு படத்தின் ஒரே ஒரு சட்டகத்தைப் பார்த்தால் போதும் அது என்ன விதமான படம் என்று என்னால் சொல்லிவிட முடியும்” என்று ரே ஒரு நேர்காணலில் சொன்னார். அதற்கு உதாரணமாக அவரது படத்தையே சொல்லலாம். ‘பதேர் பாஞ்சாலி’ பாதி எடுக்கப்பட்ட நிலையில் பணம் இல்லாமல் படப்பிடிப்பு நின்றது. அப்போது படத்தின் நிழற்படங்களைப் பார்வையிட்ட நியூயார்க்கின் நவீன ஓவியக் கண்காட்சியகத்தைச் சேர்ந்த மன்ரே வீலர் என்பவர் ஆச்சரியமடைந்தார். “இந்த நிழற்படங்களை எங்கள் கண்காட்சிக்கு அனுப்ப முடியுமா?” என்று கேட்டார். படத்தில் இருந்த இயல் (காம்போசிஷன்), ஒளியமைப்பு, மற்றும் இயல்பான கிராமத்து முகங்கள் என நிழற்படங்களே படத்தின் இயல்பைச் சொல்லின.
சட்டை அணியாத அப்புவைப் பள்ளிக்கு அனுப்புவதற் காக அக்காவும் அம்மாவும் அவனைத் தயார்செய்கிற ஒரு நிழற்படம் ஒரு கிராமத்துக் குடும்பத்தின் அன்பைச் சொல்லப் போதுமானதாக இருந்தது. அந்தப் படத்தில் பம்பரத்தில் ஆரம்பித்து கூட்டாஞ்சோறு வரை கிராமத்துக் குழந்தைகளின் விளையாட்டுக்கள் இருந்தன. தங்கள் வறுமையை மீறி மழையில் நனைந்து ஆடுகிற குழந்தைகளின் கொண்டாட்டம் இருந்தது. இதையெல்லாம் கடந்து எளிய மனிதர்களின் அற்புதமான வாழ்க்கை இருந்தது. இதனால் ‘கான்’ திரைப்பட விழாவில் ‘சிறந்த மனித ஆவணம்’ என்று பாராட்டப்பட்டு அறிமுக இயக்குநருக்கான விருதும் கிடைத்தது.
தனது 36 படங்களில் ஒன்றிரண்டு தவிர, மற்ற அனைத்தையும் இலக்கியங்களிலிருந்தே உருவாக்கினார். அவரது கடைசிப் படமான ‘அகாந்தக்’ படப்பிடிப்பு நடக்கும் போது அவர் இரண்டு மாரடைப்புகளைக் கடந்திருந்தார் என்றாலும், சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு படத்தை இயக்கினார். அருகில் இதய மருத்துவர்கள் இருந்தார்கள். அரங்கத்துக்கு வெளியில் சகல முன்னேற்பாடுகளுடன் அவசரச்சிகிச்சை ஊர்தி நின்று கொண்டிருந்தது. ஓவியர், திரைப்பட விமர்சகர், சிறுகதை ஆசிரியர், குழந்தைகள் இலக்கியம் எழுதியவர், (இவரது கதையிலிருந்தே ‘E.T’ என்கிற படத்தை ஹாலி வுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது) கட்டுரையாளர், திரைக்கதை ஆசிரி யர், இசைக் கலைஞர் எனப் பல கலைகளிலும் தனக் கிருந்த புலமையை முழுவதுமாகத் திரைப்படத்தில் பயன் படுத்தினார். திரைப்படத்துக்கான உலகின் சிறந்த விருதுகள் அனைத்தையும் பெற்றவர். இறுதியில், வாழ்நாள் சாதனையாக ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியரும் இவர்தான்.
எளியதே அழகு
படத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, அதை உருவாக்கிய விதத்திலும் எளிமையைப் பின்பற்றினார். முதல் படத்துக்குத் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்றதும் தன் மனைவியின் நகைகளை அடகு வைத்தும் தனது ஓவியப் புத்தகங்களையும் இசைத்தட்டுகளையும் விற்றுப் படம் எடுத்தார். ஏறத்தாழ இரண்டரை வருடத் துக்கும் மேலாக நடந்த படப்பிடிப்பில் பெரும்பாலும் இயற்கை ஒளியையும், இயல்பான வீடுகளையும் பயன்படுத்தினார். மிகக் குறைவான படப்பிடிப்புக் குழுவுடன் வேலைசெய்தார்.
விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு, கிடைத்த உபகரணங்களைக் கொண்டு வேலை நாட்கள் போக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் படப்பிடிப்பை நடத்தி னார். எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் தன் உடமை களைப் பணயம் வைத்து ஒரு சினிமாவை எடுத்தார். “ஒரு நல்ல சினிமாவுக்கான கதையை வாழ்க்கை யிலிருந்துதான் எடுக்க முடியும். அது படம் எடுப்பவரின் ஆன்மாவிலிருந்து முழுமையாக வெளிப்பட வேண்டும்” என்றும் நம்பினார். கதாபாத்திரங்களின் எளிமையும் அப்பாவித்தனமும் உண்மையும் அதனைக் காட்சி மொழியாகப் பதிவுசெய்த நேர்த்தியும் ரேயை இன்றும் உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வைத்திருக் கிறது. ஏனெனில், அவர் முழுமையான இந்திய இயக்குந ராக இருந்தார். இந்தியத் தன்மையைப் பதிவுசெய்தார்.
‘பதேர் பாஞ்சாலி’ வெளியாகி 60 வருடங்கள் கடந்து விட்டன. திரைப்படத்துக்கான உலகளாவிய வணிக சாத்தியங்களும், சகல தொழில்நுட்ப வசதிகளும் பெருகி விட்டன. இந்திய சினிமா என்பது, உலகில் அதிகத் திரைப்படங்கள் எடுக்கும் கேளிக்கைத் துறையாக வளர்ந்திருக்கிறது. எண்ணிக்கையில் அதிகம் இருந் தாலும் நாம் எடுக்கும் படங்களில் இந்தியாவின் ஆன்மா இருக்கிறதா? கேள்விக்கான பதிலைத் தீவிரமாக யோசித் துப் பார்க்கலாம். விடை கிடைக்கவில்லையெனில் ‘பதேர் பாஞ்சாலி’யை இன்னொருமுறை பார்க்கலாம்.
செழியன், திரைப்பட ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: chezhian6@gmail.com