சிறப்புக் கட்டுரைகள்

மீட்புக்கான கலைத்திட்டம்: ஊரடங்குக்குப் பிறகான கல்வித் தேவை!

செய்திப்பிரிவு

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸின் பாதிப்பு தற்போது இந்தியாவில் எண்பது லட்சத்தையும், உயிரிழப்பு ஒரு லட்சத்து இருபத்தோராயிரத்தையும் கடந்துவிட்டது. தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு ஏழு லட்சத்தையும், இறப்பு பதினோராயிரங்களையும் தாண்டிவிட்டது.

ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மேற்படிப்பிற்குத் தயாராகும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெருந்தொற்றின் தாக்கம் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தாமலில்லை. தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளைத் திறப்பதில் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி முடிவெடுக்க வேண்டும்.

இச்சூழலில், தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றால் வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான ”வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை” (ஏ.எஸ்.இ.ஆர்.) தரும் புள்ளிவிவரங்கள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியயையும் ஒன்றாகத் தருகின்றன. இவ்வறிக்கையின் படி, இந்தியாவில் 20% கிராமப்புற மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் சென்று சேரவில்லை. குறைந்தபட்சமாக ஆந்திராவில் 35% மாணவர்களுக்கும், ராஜஸ்தானில் 60% மட்டுமே பாடப்புத்தகங்கள் கிடைத்துள்ள நிலையில், அதிகபட்சமாக மேற்கு வங்காளம், நாகாலாந்து மற்றும் அசாமில் 98% மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது சற்றே ஆறுதலளிக்கிறது.

மேலும், மூன்றில் ஒரு கிராமப்புற மாணவர் எந்தக் கற்றல் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை, மூன்றில் இருவருக்குக் கற்றல் பொருட்களோ, செயல்பாடுகளோ பள்ளிகளால் தரப்படவில்லை. ஒட்டுமொத்த பார்வையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்திருந்தாலும், 6 முதல் 10 வயதுள்ள குழந்தைகளில் 5.3% பேர் இந்த ஆண்டு பள்ளியில் சேரவில்லை. இது, 2018ஆம் ஆண்டை விட 3.3% அதிகமாகும். குடும்ப வறுமை காரணமாக இவர்கள் பள்ளியில் சேரவில்லை என்பது கரோனா ஊரடங்கின் கோரப்பிடியை நமக்குக் காட்டுகிறது. இந்நிலையைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

ஆறு மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே அடங்கிக்கிடக்கும் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினருக்கு, எப்பொழுதும் பெற்றோரின் கண்காணிப்பில் இருப்பது போன்ற உணர்வு பெரும் அசவுகரியத்தையும் அயற்சியையும் கொடுக்கலாம்.

தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி அளவில், ஏன் கல்லுரி மாணவர்கள் கூட, இந்த ஊரடங்கில் நீங்கள் எதை இழந்ததாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டால், பெரும்பாலானோர் நண்பர்கள் மற்றும் விளையாட்டு மைதானம் என்றே பதிலளிக்கிறார்கள். நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது படிப்பு, மதிப்பெண்கள் மற்றும் அறிவுசார் செயல்பாடுகளைத் தாண்டி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்களை முதலில் சமூகத்தின் அங்கத்தினர்களாகவும், சக மாணவர்களுடனான தொடர்பையுமே முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்பது விளங்கும். இத்தகைய சிந்தனைதான் தனிமனித வாழ்வில் மனித உறவுகளுக்கான முக்கியத்துவதை அவர்களுக்கு உணர்த்துகிறது.

கல்வி என்பது புத்தகங்கள், கற்பித்தல் முறைகள் இவற்றைத் தாண்டி ஆசிரியர் மாணவர் உறவின் மூலமாகவே வலுப்பெறும் என்பது நிதர்சனம். எனவே, கரொனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மற்றும் நீண்ட ஊரடங்கால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மாறுபட்டச் சூழலை கவனமுடன் சமாளிக்க வேண்டிய கடமை கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசின் சார்பில் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத்திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தாலும், பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை அணுகும் முறையை அவர்களின் மனச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வது அவசியப்படுகிறது.

பொதுவாக நாம் எண்ணுவது, ஊரடங்கு காலத்தில் மாணவர்கள், நன்றாக ஓய்வெடுத்திருப்பார்கள், எனவே, அவர்கள் மீண்டும் பள்ளிக்குப் புத்துணர்வுடன் வருவார்கள் என்பதேயாகும். ஆனால், நாம் புரிந்துகொள்ள வேண்டிய மறுபக்கம் ஒன்று உள்ளது. அதாவது, அனைத்து மாணவர்களுக்கும் ஓய்வுச்சூழல் எல்லோ ருக்கும் ஒன்றுபோல் அமைந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சாரார் உண்மையாகவே நல்ல உணவும் ஓய்வும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்று நல்ல மனநிலையில் இருக்கலாம். ஆனால், மருத்துவர், செவிலியர், காவலர், சுகாதாரப் பணியாளர் உள்ளிட்ட முன் வரிசைப் போராளிகளின் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களின் மனச்சூழல் உறுதியாக வேறுபடும். மேலும், கரோனா பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியிருக்கலாம். இக்குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளின் மனநிலையும் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

எப்பொழுது இயல்பு நிலை திரும்பி பள்ளிகள் வழக்கம்போல் முழுமையாகத் திறக்கப்படும் என்ற முடிவு தெரியாத இந்தச் சூழ்நிலை ”ஒரு உண்மையான சமூகச் சீர்குலைவாகவே” உணரப்படுகிறது. கற்றுக்கொடுப்பதையே நமது கடமையாக எண்ணிக்கொண்டிருக்கும் மூத்தோர் மற்றும் ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன. பள்ளிகளும் ஆசிரியர்களும் கல்விக்கும் மேல் கருணையை ஊட்ட வேண்டியுள்ளதை உணர வேண்டிய சிக்கலான தருணமிது.

ஒவ்வொரு முறை உலகம் இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்கும்போதும், அதன் பின்விளைவுகள் வளரும் தலைமுறையினரை அதிகம் பாதித்துள்ளதை வரலாறு நமக்கு உரைக்கிறது. உதாரணமாக, தமிழகம் சந்தித்த மாபெரும் பேரிடரான 2004ஆம் ஆண்டின் சுனாமி தாக்குதலை எடுத்துக் கொள்வோம். அதன் பின்விளைவுகள் கணிசமாக எண்ணிக்கையில் குழந்தைகளை குடும்பமற்றவர்களாகவும் மனப்பிறழ்வுக்கும் ஆளாக்கியது. அப்போது, அரசும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொண்டன. அவற்றுள் பொருளாதர மீட்பை விட மிகவும் சவால் நிறைந்ததாக விளங்கியது எதுவென்றால், குழந்தைகளின் மனநிலையைச் சமநிலைப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வும் கல்வியும் அளிப்பதேயாகும். என்றாலும், அம்முயற்சிகளின் பலனாக பாதிப்புக்குள்ளான பல குழந்தைகள் இன்று நல்ல நிலையில் உள்ளனர்.

சுனாமி, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஒரு சில குறிப்பிட்ட அளவிலான பகுதிகளை மட்டுமே பாதிக்கும். அவற்றிலிருந்து மீண்டுவர மற்ற அனைவரும் சேர்ந்து பாடுபடலாம். ஆனால், இந்தக் கரோனா நம் அனைவரையுமே ஏதோ ஒரு விதத்தில் மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது. இவ்வாறு பல்வேறு பாதிப்புகளின் காரணங்களால் பள்ளி வயதுக் குழந்தைகள் கற்றல் பற்றிய பதற்றம், இழப்புகள் மற்றும் வறுமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, நேர விரயத்தால் உருவான மனச்சிக்கல் போன்றவை அவர்களின் மனநலத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

இவற்றைச் சமாளித்து, குழந்தைகளை மீட்டெடுக்க பள்ளிகளில் “மீட்புக்கான கலைத்திட்டத்தைக்” கரோனா ஊரடங்கிற்குப் பிந்தைய காலத்தில் பின்பற்ற வேண்டியது நமது கடமையாகும்.

ஊரடங்கிற்குப் பிந்தைய சூழலில், ”பள்ளிகள் இயல்பு வாழ்க்கைக்குக் தொடர்பற்றவையாக குழந்தைகள் மத்தியில் தோன்றும்” என்று கல்வியில் மனநலத்திற்கான பேராசிரியர் பெர்ரி கார்பெண்டர் கூறுகிறார். பாடங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என்ற முறைக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்பொழுது குழந்தைகள் ஊரடங்கிற்கு முன்பு எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில் தங்களைக் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வார்கள் என நம்புகிறார்கள், மேலும் அதையே எதிர்பார்க்கிறார்கள் என்பதே நிதர்சனம். ஆனால், அனைத்துக் குழந்தைகளின் குடும்ப சூழல் ஒரே மாதிரியாகவும், சாதகமாகவும் இருப்பதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதற்கு, பெர்ரி, பின்வரும் ஐந்து நிலை உத்தியைப் பரிந்துரைக்கிறார்.

உறவுகளைப் பலப்படுத்துதல்: கற்பித்தல் என்பது உறவை மையப்படுத்திய செயலாகும். மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள் என்பது நிச்சயமற்றது. எனவே, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை இன்முகத்துடன் வரவேற்று அரவணைப்பது அவசியம். ஆசிரியர்-மாணவர் உறவை மீட்டெடுக்க இது உதவும்.

சமூகத்தின் தன்மை: ஒரு சமூகத்தின் தேவைகளின் அடிப்படையிலேயே கல்வி அமைகிறது என்பதால், ஒவ்வொரு பள்ளியும் தனது சமூகத்தின் தற்போதைய சூழலைப் புரிந்துகொண்டு மாணவர்களை மீண்டும் கல்வி கற்கும் மனநிலைக்குக் கொண்டுவர முயல வேண்டும்.

வெளிப்படையான பாடத்திட்டம்: கல்வியில் ஏற்பட்ட கால விரயம் மற்றும் இடைவெளியை எண்ணி மாணவர்கள் வருந்துவார்கள். அவர்களின் இந்த எண்ணத்தைப் போக்க ஆசிரியர்கள் அவர்களோடு பயணித்து இழந்த காலத்தை ஆக்கபூர்வமான கல்விச் செயல்பாடுகள் மற்றும் வெளிப்படையான பாடத்திட்டங்களாலும் ஈடு செய்ய வேண்டும்.

மேனிலை அறிதிறன்: இந்த நீண்ட இடைவெளி மற்றும் இணைய வழிக் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மாணவர்களின் கற்றல் பாணியை மாற்றியிருக்கலாம். அதனால், அவர்கள் மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் திரும்ப, அவர்களை ஊக்கப்படுத்தி தனது திறன்களைச் சுயபரிசோதனை செய்து மீள்கட்டமைப்பு செய்ய உதவ வேண்டும்.

இடமளித்தல்: நாம் அனைவருமே இச்சூழலை வெல்ல திறத்துடன் துரிதமாகச் செயல்படுகிறோம். இவ்வேளையில், சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தகுந்த இடத்தை அளித்து அவர்களுக்கான வாய்ப்புகளை உறுதிசெய்து அவர்களையும் நம்மோடும் சக மாணவர்களோடும் சேர்ந்து பயணிக்க வைக்கவேண்டியது நமது பொறுப்பாகும்.

இதனால், பள்ளிப் பாடத்திட்டத்தைக் கடந்த, மனித உறவுகளை மீட்டெடுக்கும், மற்றும் ஒருவருக்கான உரிமையைப் பாதுகாக்கும், இந்த எழுதப்படாத கலைத்திட்டம் கரோனா ஊரடங்கிற்குப் பிந்தைய காலத்திற்கான “மீட்புக் கலைத்திட்டமாக” இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும். அரசும் இதில் கவனம் செலுத்தி மாணவர்கள் நலனைக் காக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கிய பின்னர் பள்ளிகளைத் திறப்பதே ஏற்புடையதாக இருக்கும். இதுவே, நமது குழந்தைகளின் மனநலத்தையும் மனவளத்தையும் மீட்டெடுக்க நாம் செய்யும் பேருதவியாக இருக்க முடியும். ’

அரசுப் பள்ளிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கும் இவ்வேளையை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதே கல்வியாளர்கள், பெற்றோர்கள், உளவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆவல்.

- இரா.மு. தமிழ் செல்வன்
உதவிப் பேராசிரியர்,

சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வுப் புலம்,

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.

SCROLL FOR NEXT