சிறப்புக் கட்டுரைகள்

மின் வாகன யுகம்: தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன?

கே.கே.மகேஷ்

அடுத்த 20 ஆண்டுகள் மின்சார வாகனங்களின் பொற்காலமாக இருக்கப்போகின்றன. பெட்ரோல், டீசல் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களும் மின் வாகனங்களுக்கு மாற ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அரசு ஒத்துழைப்பு?

மின் வாகன யுகம்

காலியாகிக்கொண்டிருக்கும் எரிபொருள் வளம், ஏறிக்கொண்டிருக்கும் எரிபொருட்களின் விலை, மாசுபட்டுக்கொண்டே இருக்கும் சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக உலகளவில் மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் காற்று மாசுபடுதலைக் கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும். பெட்ரோல், டீசல் போன்ற புதுப்பிக்க முடியாத எரிபொருள் பயன்பாட்டிலிருந்து, புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலுக்கு மாறுவதற்கான நல்ல வழிமுறை இது என்பது மேலை நாடுகளில் நிரூபணமாகியிருக்கிறது.

இந்தியாவில் இதற்கான முயற்சிகள் முன்பே தொடங்கிவிட்டன என்றாலும், 2019-20-ல்தான் சொல்லிக்கொள்ளும்படியான விற்பனை பதிவானது. குறிப்பாக, ஸ்கூட்டர் ரக இரு சக்கர வாகன விற்பனையில் பெரிய பாய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில், மின்சார ஸ்கூட்டர்களின் விலை கொஞ்சமே அதிகம் என்பதும், மைலேஜ், பராமரிப்புச் செலவு போன்ற வகையில் மின்சார ஸ்கூட்டர்களே சிக்கனமானவை என்பதுமே இந்தப் பாய்ச்சலுக்குக் காரணம். கூடவே, மின் வாகனங்கள் வாங்கினால் அதற்கான வங்கிக் கடனில் ரூ.1.5 லட்சம் வரையில் வருமானவரித் தளர்வு உண்டு என்றும், ஜிஎஸ்டி வரியும் 12%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்படுகிறது என்றும் கடந்த பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பும் ஒரு காரணம். கரோனாவுக்குப் பிறகு இயல்பாகவே கார் விற்பனை அதிகரித்துள்ள சூழலில், இதில் குறிப்பிடத்தக்க பங்கு மின்சார கார்களுக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால், ‘இந்தியாவில் ஓடும் ஆட்டோக்களை 2023-க்குள்ளும், இரு சக்கர வாகனங்களை 2025-க்குள்ளும், பிற வாகனங்களை 2030-க்குள்ளும் முழுமையாக மின் வாகனங்களாக மாற்ற வேண்டும்’ என்ற நிதி ஆயோக்கின் அறிவிப்பை வைத்துப் பார்த்தால் நிஜமாக இந்த வேகம் போதாது.

டெல்லியைப் பாருங்கள்...

உலகமே மின் வாகனங்களின் பின் போனாலும், இன்னமும்கூட இந்திய மக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்குத் தயங்கவே செய்கிறார்கள். காரணம், பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடுகையில் மின்சார கார்களின் விலை மிகமிக அதிகமாக இருக்கிறது. இன்னொரு தயக்கம், மின் வாகனங்களை வாங்கி வீட்டைச் சுற்றி மட்டுமே ஓட்ட முடியுமா? அலுவலகத்துக்குப் போனால் அங்கே மின்னேற்றம் (சார்ஜ்) செய்ய வேண்டாமா? நெடுஞ்சாலையோர எரிபொருள் நிலையங்களிலும், உணவகங்களிலும் மின்னேற்றி (சார்ஜர்) இல்லையென்றால் வண்டியைத் தள்ளிக்கொண்டா போக முடியும் என்பதும் மக்களின் தயக்கத்துக்கு ஒரு காரணம்.

இதை உணர்ந்து டெல்லி மாநில அரசு மின் வாகனங்களுக்கான புதிய கொள்கையை (2020) வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அம்மாநிலத்தில் மின்சார இரு சக்கர வாகனம் வாங்குவோருக்குத் தலா ரூ.30 ஆயிரத்தை அரசு மானியமாக வழங்கும். கார் வாங்குவோருக்குத் தலா ரூ.1.5 லட்சம் மானியம். அதேபோல வாகனப் பதிவுக் கட்டணம், சாலை வரி போன்றவை முழுமையாக ரத்துசெய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது அம்மாநில அரசு. மராட்டிய அரசோ, இரு சக்கர வாகனத்துக்கு ரூ.15 ஆயிரம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.12 ஆயிரம், கார்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் என்றும் அறிவித்துள்ளது. கூடவே பேருந்து, சரக்கு வாகனங்களுக்கும்கூட சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மின் வாகனங்களின் விற்பனை அதிகரித்ததும், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக டெல்லியிலும் மும்பையிலும் தானாகவே சார்ஜர் போடும் வசதியைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் தங்கும் விடுதி, உணவக உரிமையாளர்கள். ஆக, மின்னேற்றப் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிட்டது

தமிழ்நாடு அரசோ இத்தகைய அறிவிப்பு எதையும் இதுவரையில் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மின்சார வாகனக் கொள்கையில் (2019), மின் வாகன உற்பத்தியாளர்கள், பேட்டரி உற்பத்தியாளர்கள், அது தொடர்பான புதிய முதலீட்டாளர்களுக்கு மட்டுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மின் வாகனங்களை வாங்குவோருக்கென எந்தச் சலுகையும் அறிவிக்கப்படவில்லை. நகரங்கள் மற்றும் பிற இடங்களில் மின் வாகனங்களுக்கான மின்னேற்று வசதிகளை உருவாக்கத் தேவையான கொள்கை ஆதரவு வழங்கப்படும். தமிழ்நாடு மின் வாரியமானது நேரடியாகவோ, தனியார் பங்களிப்புடனோ இதற்கான வசதிகளை மாநிலம் முழுக்க ஏற்படுத்தும். உணவகங்கள், தனியார் வளாகங்கள், திரையரங்குகள் போன்ற அனைத்து வணிகக் கட்டிடங்களிலும் மின்னேற்று வசதியை ஏற்படுத்துவது உறுதிசெய்யப்படும் என்ற அறிவிப்பு இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வளவு ஏன், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் இயக்குவதற்கென 5,595 மின்சாரப் பேருந்துகளை வழங்கியது. அதில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த 525 பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகத்தைக் கொண்டு இயக்குவதா? தனியார் ஊழியர்களைக் கொண்டு இயக்குவதா என்ற குழப்பத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

அரசு செய்ய வேண்டியது

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனப் பயன்பாட்டை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்காதது தொடர்பாக, சகாதேவன் என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஜவஹர் தாக்கல்செய்த அறிக்கையிலும்கூட, மின் வாகனங்களை வாங்க விரும்பும் தனி நபர்களுக்கு எந்தச் சலுகையையும் அறிவிக்கவில்லை தமிழக அரசு. ஏற்கெனவே 2019-ல் வெளியிட்ட கொள்கை அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களையே திரும்பவும் சொல்லியிருந்தது அரசு.

ஆரம்பத்தில் பேட்டரி காலை வாரிவிடுமே என்ற தயக்கம் காரணமாக மக்கள் மின் வாகனங்கள் வாங்கத் தயங்கினார்கள். இப்போது கார் நிறுவனங்கள் பேட்டரிக்கும் மோட்டாருக்கும் 8 ஆண்டுகள் வரையில் வாரண்டி அறிவித்துள்ளன. இடையில் எப்போது பழுதானாலும் அப்படியே மாற்றித்தருகிறோம் என்று சொல்லியிருக்கின்றன. மெக்கானிக்குகள் கிடைக்காமல் போய்விடக் கூடாதே என்று டாடா நிறுவனமானது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் தலா இரண்டு மின்சார கார்களை மாணவர்களுக்கென இலவசமாக வழங்கியிருக்கிறது. ஹுண்டாய் நிறுவனமானது சென்னையிலேயே மின்சார கார்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது. அடுத்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலேயே உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது. பென்ஸைத் தொடர்ந்து, ஆடி, ஜாக்குவார் போன்ற செல்வந்தர்களுக்கான கார் நிறுவனங்களும்கூட அடுத்த மாதம், இந்தியாவில் மின்சார கார்களை அறிமுகப்படுத்த இருக்கின்றன. விலை அதிகம் என்றாலும்கூட வாடிக்கையாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். காரணம், அந்த ரகங்களில் பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடுகையில், மின்சார கார்களின் மைலேஜ் 4 மடங்கு அதிகமாம். இதற்கு மேல் எல்லாம் அரசின் கையில்தான் இருக்கிறது.

உடனடியாக இந்த மூன்று அறிவிப்புகளையேனும் எதிர்பார்க்கிறார்கள் நுகர்வோர்: 1) ஏற்கெனவே இங்கே நடைமுறையில் இருக்கிற அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை விரிவுபடுத்தி, மின் வாகனங்கள் வாங்கினால், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம், கார்களுக்கு ரூ.1.5 லட்சம் மானியம் என்று அறிவிக்கலாம். 2) பதிவுக் கட்டணம், சாலை வரியிலிருந்து முற்றிலும் விலக்கு. 3) தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 5 ஆண்டுகளுக்குச் சுங்கக்கட்டணம் கிடையாது. கடைசி அறிவிப்பு ஒன்று போதும், கடன் வாங்கிக்கூட மக்கள் புதிய வாகனங்களை வாங்கத் தொடங்கிவிடுவார்கள் மக்கள். செய்யுமா அரசு?

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

SCROLL FOR NEXT