குடும்பம் என்பது வெறும் ரத்த உறவுகளை மட்டும் உள்ளடக்கியது அல்ல; அன்பும் அக்கறையும் தோழமையுணர்வும் ஒன்றுகூடினால், ரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் குடும்பத்தை விஸ்தரிக்கலாம். இதை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய வெகு சிலரில் ஒருவர் பேராசிரியர் சி.பூரணம். தோழமை உறவுகளை உள்ளடக்கிய பெருங்குடும்பம் ஒன்றின் தலைவராக இருந்த பூரணம், கரோனா தொற்றுக்குள்ளாகி செப்டம்பர் 24 அன்று மறைந்தார். மூத்த பத்திரிகையாளரும் மார்க்சியச் சிந்தனையாளரும் ‘கம்யூனிஸம்: நேற்று, இன்று, நாளை’ உள்ளிட்ட மார்க்சியம் தொடர்பான முக்கியமான நூல்களை எழுதியிருப்பவருமான இரா.ஜவஹருடைய மனைவி இவர்.
தோழமைப் பெருங்குடும்பம்
ஜவஹர் – பூரணம் தம்பதியரின் வீடு இளைஞர்கள் பலரும் எப்போதும் வந்து செல்லும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அல்லது புதிய பயணத் திட்டத்தில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பும் இளைஞர்கள் எவரேனும் எப்போதும் ஜவஹரைச் சூழ்ந்திருப்பார்கள். இளைஞர்களுடன் உரையாடுவது அவருடைய அன்றாடங்களில் ஒன்று. அப்படி வருபவர்களுக்கு வயிறார உணவும், தேவைப்பட்டால் உறைவிடமும் வழங்கக் கூடியதாகவே அவர்களுடைய வீடு இருந்தது.
ஆர்.நல்லகண்ணு, ஜி,ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், சி.மகேந்திரன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் தொடங்கி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வரையிலான அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு சின்னக் குத்தூசி, நக்கீரன் கோபால், காமராஜ் உள்ளடக்கி ஜவஹர் வீட்டுக்கு அவரோடு உரையாட வரும் பிரபலங்களையும், இந்த இளைஞர்களையும் ஒன்றுபோல் உபசரிக்கும் வீடாகவே அந்த வீடு இருந்தது. ஜவஹரை ‘அப்பா’ என்றும், பூரணத்தை ‘அம்மா’ என்றும் அழைத்தவர்கள் வெறும் பணத்துக்கான ஓட்டத்தைத் தாண்டிய வாழ்க்கை ஒன்று இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டும் தம்பதியாகவே அவர்கள் இருவரையும் கண்டார்கள். இந்தத் தம்பதியுடன் தொடர்புடைய ஒவ்வொரு இளைஞரின் எல்லா சுக துக்க நிகழ்விலும் முன்னே நிற்பவர்களாகவும், கூப்பிடும் முன் உதவிக்கு ஓடி வருபவர்களாகவும் ஜவஹர் – பூரணம் தம்பதி இருந்தார்கள்.
ஜவஹரைப் போல் பூரணம் கருத்தியல் சார்பு, அரசியல் பின்னணியிலிருந்து வளர்ந்து வந்தவர் அல்ல; சராசரி நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். ஆனால் குடும்பம், வீடு, வாழ்க்கையை விசாலமாகப் பார்க்கும் பார்வையை அவர் இயல்பிலேயே கொண்டிருந்தார்; பரந்த சிந்தனையில் தன் இணையருடன் ஒன்றுபட்டிருந்தார். நண்பர்கள் முன்முயற்சியில் 1982-ல் ஜவஹர் – பூரணம் திருமணம் நடைபெற்றபோது, ஜவஹர் ஓர் அச்சகத் தொழிலாளியாக இருந்தார்; பூரணம் சென்னை ராணி மேரிக் கல்லூரியில் பேராசிரியையாக இருந்தார். சாதி மட்டுமல்லாமல் வர்க்க வேறுபாட்டையும் கடந்தே அந்தத் திருமண பந்தம் தொடங்கியது. பிற்பாடு அதுதான் எத்தனையோ சாதி மறுப்பு, காதல் திருமணங்களுக்கு முன்னிற்கும் தம்பதியாக அவர்கள் திகழ வழிவகுத்தது. படிப்படியாக ஒரு பத்திரிகையாளராக உருவெடுத்த ஜவஹர் ‘தினமணி’, ‘ஜூனியர் போஸ்ட்’, ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ என்று பல முன்னணிப் பத்திரிகைகளிலும் பணியாற்றியவர் என்றாலும், கருத்தியல் சார்ந்த முரண்பாடுகள் எழும்போது பணியை விட்டு விலகிவிடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தவர். ஜவஹர், எப்போதும் தான் பெறும் ஊதியத்தை முழுமையாக மனைவியிடம் கொடுத்து தன் அன்றாடச் செலவுக்கு அவரிடமிருந்து பணம் வாங்கிக்கொள்ளும் வழக்கத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்.
எழுத்திலும் இணையர்
பூரணமும் எழுத்துப் பணிக்கு வெளியில் இருந்தவர் அல்ல. பணி ஓய்வுக்குப் பிறகு பொருளாதாரம், புள்ளியியல் தொடர்பாக நான்கு நூல்களை அவர் எழுதினார். தமிழ் வழி பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட இந்த நூல்களுள், பொருளியல் தொடர்பான சொற்களுக்காக பூரணம் தொகுத்த அகராதி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தன்னுடைய எழுத்துப் பணிக்குப் பெரும் பலமாக விளங்கிய பூரணத்துக்கு, ஜவஹர் அவருடைய எழுத்துப் பணியில் முக்கியமான நூலாகக் கருதும் ‘கம்யூனிஸம்: நேற்று, இன்று, நாளை’ நூலைச் சமர்ப்பித்தார் என்றால், பூரணம் இந்த நான்கு நூல்களையும் எழுதியதற்கு ஜவஹர் முக்கியமான உந்துசக்தி என்று தன் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
தோழமையும் சமத்துவமும் உண்மையில் பொது வாழ்க்கையில் அல்ல; தனி வாழ்க்கையிலேயே தொடங்குகின்றன!
- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in