சிறப்புக் கட்டுரைகள்

சர்வாதிகாரிகளை வீழ்த்த சரியான ஆயுதம்: பகடி!

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை விமர்சிப்பவர்கள், பிற நாடுகளின் ஜனநாயக ஆதரவு இயக்கங்களிலிருந்து ஏதேனும் கொஞ்சம் கற்றுக்கொள்ள முடியுமா? சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்கொள்ளும் அளவுக்குப் போதுமான அனுபவம் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இல்லை. ஆனால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதுபோன்ற போராட்டங்களில் அனுபவம் மிக்கவர்கள்.

இவ்விஷயத்தில் மிக முக்கியமான பாடமாக ‘நகைச்சுவை கலந்த செயற்பாட்டுத்தன்மை’யை (laughtivism) நாம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, அதிகாரத்தைப் பரிகாசம் செய்வது.

புன்னகையும் புரட்சியும்

சர்வாதிகாரிகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது முக்கியமானதுதான். எனினும், சில சமயம் நயமான நகைச்சுவை உணர்வே அவர்களை நிலைகுலைய வைத்துவிடும். ஒரு தலைவரை நோக்கி முஷ்டியை உயர்த்துவதைவிடவும், கேலிக்குரியவராக அவரைச் சித்தரிப்பதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியும்.

“ஒவ்வொரு நகைச்சுவைத் துணுக்கும் ஒரு குட்டிப் புரட்சி” என்று 1945-ம் ஆண்டில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதியிருந்தார். ட்ரம்ப்புக்கு எதிரான நேரடித் தாக்குதல்கள் எப்போதும் பலனளித்துவிடவில்லை என்று அமெரிக்காவின் முற்போக்குவாதிகள் இப்போது உணர்ந்திருக்கிறார்கள். அவர் மீதான பதவிநீக்கத் தீர்மான விசாரணை, தேர்தலில் அவருக்கு ஆதாயத்தைத் தந்திருப்பதாகவே தெரிகிறது.

பெரும்பாலான அமெரிக்கர்கள், ட்ரம்ப் ஒரு இனவெறியர் என்பதை ஒப்புக்கொண்டாலும் அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கூறியிருப்பதாக, குன்னிபியாக் பல்கலைக்கழகம் நடத்தியிருக்கும் கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது. அதிபராகப் பதவியேற்றது முதல் இதுவரை 20 ஆயிரம் முறை தவறான தகவல்களை ட்ரம்ப் சொல்லியிருப்பதாகப் பத்திரிகையாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதேபோல, இதுவரை 26 முறை பாலியல் புகார்களும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் அவர் டெஃப்லான் பூசப்பட்ட வஸ்து மாதிரி இருக்கிறார். அதாவது, அவர் மீதான புகார்கள் எதுவும் அவர் மீது ஒட்டுவதே இல்லை!

சர்வாதிகாரிகளின் ஈகோ

ட்ரம்ப்பைக் கேலி செய்யும் வகையில், ‘பேபி ட்ரம்ப்’ பலூன்களும், சனிக்கிழமை இரவு நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியும், அவர் தொடர்பான மீம்ஸும், நகைச்சுவைத் துணுக்குகளும் அமெரிக்காவில் ஏராளம். எனினும், ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் அதையும் தாண்டி பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்களைப் பற்றி எழுதி வந்தவன் எனும் முறையில், ட்ரம்ப்புக்கு எதிராகக் குரல் எழுப்பும் அமெரிக்கர்கள் வெளிநாடுகளிலிருந்து ஒரு பாடத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று சொல்வேன்.

சர்வாதிகாரிகள் என்பவர்கள் பயங்கரமான ஈகோ கொண்ட பகட்டான உயிரினங்கள். குறிப்பாக, கேலிக்கு ஆளாகக்கூடியவர்கள். வலிமை வாய்ந்தவர்களாகத் தோற்றமளித்தாலும், கூர்மையான ஊசி முன் இருக்கும் பலூன் போன்றவர்கள். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னரே, அதன் ஆட்சியாளர்கள் குறித்து ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் பரவியிருந்தன. ஓர் உதாரணம்: ஒரு ரகசியப் போலீஸ்காரர் சக போலீஸ்காரரிடம், “அரசு நிர்வாகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்பார். பதற்றத்துடன் அடுத்தவர் பதில் சொல்வார்: “நீ என்ன நினைக்கிறாயோ அதைத்தான் காம்ரேட்.” கேள்வி கேட்டவர் உடனே கைவிலங்கை வெளியில் எடுத்தபடியே சொல்வார், “அப்படியென்றால், உன்னைக் கைது செய்வது எனது கடமை!”

நகைச்சுவைத் துணுக்குகள் ஒரு ஜனநாயகப் போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்யுமா? நான் அப்படி நினைக்கவில்லை. நகைச்சுவை கலந்த செயற்பாட்டுத் தன்மைக்கான வெற்றிகரமான உதாரணமாக, செர்பியாவில் ஸ்லோபோடான் மிலோசெவிக் ஆட்சிக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட வழிமுறையைச் சொல்லலாம். ஸ்லோபோடான் மிலோசெவிக் இனப் படுகொலையை நிகழ்த்தியவர். அது நகைச்சுவைக்கான விஷயம் இல்லைதான். எனினும், அவரது ஆட்சியைக் கவிழ்க்க மாணவர்களின் நகைச்சுவை உணர்வு உதவியது.

ஒரு பீப்பாயின் மீது அவரது படத்தை ஒட்டிய மாணவர்கள், அங்கு வருவோர் செல்வோரிடம் ஒரு பேஸ்பால் மட்டையைக் கொடுத்து அதை அடிக்கச் சொன்னார்கள். இதையடுத்து, அவரது படம் ஒட்டப்பட்ட பீப்பாய்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட செய்திகள் படத்துடன் வெளியிடப்பட்டன. அந்தப் படங்களே அவரை வலிமை குன்றியவராகவும், கேலிக்குரியவராகவும் மாற்றின. 2000-ம் ஆண்டில் ஸ்லோபோடான் மிலோசெவிக் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, போர்க் குற்ற விசாரணைக்காக சர்வதேசத் தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

கார்ட்டூனிஸ்ட்டுகளின் பலம்

அமெரிக்காவிலும் இதுபோன்ற சாதுரியமான நகைச்சுவையின் சக்தியை நாம் பார்த்திருக்கிறோம். 19-ம் நூற்றாண்டில் ‘பாஸ் ட்வீட்’ என்று அழைக்கப்பட்ட அரசியல் தலைவரான வில்லியம் எம்.ட்வீட்டையும், டாம்மேனி ஹால் எனும் அரசியல் நிறுவனத்தையும் விமர்சித்தவர்களில் தாமஸ் நாஸ்ட் எனும் கார்ட்டூனிஸ்ட் முக்கியமானவர். செனட்டராக இருந்த ஜோசப் மெக்கார்த்தியின் அரசியல் பழிவாங்கும் தன்மையை விமர்சித்து, ‘மெக்கார்த்தியிஸம்’ எனும் பதத்தை உருவாக்கியவரும் ஹெர்ல்ப்லாக் எனும் கார்ட்டூனிஸ்ட் தான். (இன்றைக்கு அருகிவரும் இனமாகிவிட்ட கார்ட்டூனிஸ்ட்டுகள், கட்டுரையாளர்களை விடவும் கூர்மையான அரசியல், சமூக விமர்சகர்களாக இருக்கிறார்கள். இதை என் இதழாசிரியர்களிடம் சொல்லி விடாதீர்கள்!)

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஜொனாதன் ஷாபிரோ, அந்நாட்டின் அதிபராக இருந்த ஜேகப் ஜூமாவை வறுத்தெடுத்து வந்தார். 2018-ல் ஜேகப் ஜூமா பதவி விலகியதற்கு ஜொனாதனின் கார்ட்டூன்களும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதே ஆண்டில், மலேசியப் பிரதமராக இருந்த நஜீப் ரஸாக் பதவியிழந்ததற்கும் ஜூல்கில்ஃப்ளீ அன்வர் ஹேக் எனும் கார்ட்டூனிஸ்ட்டின் கார்ட்டூன்கள்தான் காரணம். வழக்குகள், தாக்குதல்கள் என எல்லாவற்றுக்கும் மத்தியில் இதைச் செய்துகாட்டினார் அவர்.

அதுதான் நகைச்சுவையின் சக்தி. ஆம், சர்வாதிகாரிகள் கிண்டல்களுக்கு அஞ்சுபவர்கள். இந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஏழு கார்ட்டூனிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் வழக்கு விசாரணை, உயிருக்கு அச்சுறுத்தல் என மிரட்டலுக்குள்ளாவதாகவும் பத்திரிகையாளர்களைக் காக்கும் கமிட்டி (சிபிஜே) கூறியிருக்கிறது.

விஷமும் விஷமமும்

ரஷ்யாவில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காகப் போராடிவரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி, அதற்குத் தனது பகடியைத்தான் பயன்படுத்திவருகிறார். ‘நோவிசோக்’ எனும் விஷம் மூலம் அவரைக் கொல்ல ரஷ்ய அதிகாரிகள் முயற்சி செய்ததாகக் கருதப்படுகிறது. தற்போது ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், தானே விஷத்தை உட்கொண்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறிவருவது குறித்து நகைச்சுவையாகப் பதிலளித்திருக்கிறார்.

“என் சமையலறையில் நோவிசோக்கை வேக வைத்தேன். விமானத்தில் அதைச் சத்தமில்லாமல் உறிஞ்சிக் குடித்தேன். கோமாவில் விழுந்தேன்” என்று இன்ஸ்டாகிராமில் அவர் எழுதியிருக்கிறார். மேலும், “எனது சாதுரியமான திட்டத்தின் இறுதி இலக்கு, ஓம்ஸ்க் (ரஷ்ய நகரம்) மருத்துவமனையில் இறந்துபோவதுதான். அங்குள்ள சவக்கிடங்கில் எனது மரணத்துக்கான காரணமாக, ‘இவர் தேவையான நாட்கள் வாழ்ந்துவிட்டார்’ என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதின் என்னை விஞ்சிவிட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விமர்சகர்களின் விரக்தி

ட்ரம்ப்பின் விமர்சகர்களிடம் போதிய அழுத்தம் இல்லை என்று விரக்தியடைந்திருக்கிறேன். வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள் சர்வாதிகாரிகளுக்கு எப்படிச் சவால் விடுகிறார்கள் என்பதிலிருந்தும், சர்வாதிகாரத் தலைவர்களின் பாசாங்குத்தனத்தை எப்படித் துல்லியமாகப் பகடி செய்கிறார்கள் என்பதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்வது பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

மேலும், ட்ரம்ப் மீதான கூர்மையான விமர்சனங்கள், யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்காத வாக்காளர்களுக்கு சில சமயம் மிகக் கடுமையானவையாகவும், மிகைப்படுத்தப்பட்டவையாகவும் தெரிகின்றன. இதுவும் என்னை விரக்திக்குள்ளாக்குகிறது. என்னைப் போன்றவர்களின் முன்வைக்கும் வாதங்கள் புறந்தள்ளப்படுவதற்குக் காரணம் அவை மிகத் தீவிரமானவை என்பதுதான்.

கிட்டத்தட்ட இதே நிலைதான் பல நாடுகளிலும். அரசியலற்றவர்களாக இருக்கும் சாமானியர்கள், ஜனநாயகத்துக்கு ஆதரவான தலைவர்களிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். அவர்கள் தீவிரத்தன்மை கொண்டவர்கள் என்றும், மத உணர்வுகள் இல்லாதவர்கள் அல்லது அதிகம் படித்த மேட்டுக்குடியினர் என்றும் சாமானியர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஒரு நகைச்சுவைத் துணுக்கை அவர்கள் பாராட்டவே செய்கிறார்கள். ஆக, அவர்களை வெல்ல நகைச்சுவை ஒரு வழி.

சர்வாதிகாரிகளின் துர்சொப்பனங்கள்

“மக்களின் கேலிச் சிரிப்புதான் சர்வாதிகாரிகளின் துர்சொப்பனங்கள்” என்று எழுதினார் லியூ ஜியாபோ. சீன அரசை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட லியூ, சிறையில் இருந்தபடியே 2010-ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர். ஜனநாயகத்தைக் கோரும் அவரது கட்டுரைகள் புகழ்பெற்றவை. அதேசமயம், சர்வாதிகார ஆட்சியாளர்களை மதிப்பிழக்கச் செய்ய, நகைச்சுவையும் அவசியம் என்று வாதிடுபவர் அவர்.

இன்னும் சில விஷயங்களை லியூ கோடிட்டுக் காட்டியிருந்தார். பிளவுற்றுக் கிடக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அவை பொருத்தமாக இருக்கலாம். “ஒரு சர்வாதிகாரியைப் பகடி செய்வது நாட்டுக்கு நல்லது. ஏனெனில் அது மென்மையான முறையிலும், குறைந்த வன்முறையுடனும் அவரது வீழ்ச்சிக்கும், ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுக்கும்” என்று கூறியிருக்கும் லியூ, “ஒரு ராட்சனை ஒப்பிட ஒரு கோமாளி ஆபத்து குறைந்தவன்தான்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நிகோலஸ் கிறிஸ்டோஃப்,

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன் | நன்றி: ‘தி நியூயார்க் டைம்ஸ்’

SCROLL FOR NEXT