கடந்த சனிக்கிழமையுடன் (செப்டம்பர் 26), மெக்ஸிகோவின் குரெரோ மாகாணத்தின் அயோத்சினாபா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 43 பேர் காணாமல் போய் ஓராண்டு ஆகிறது. அம்மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிபர் என்ரிக் பீனா நீட்டோவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். எனினும், இச்சம்பவம் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை.
குரெரோ மாகாணத்தில் அதிகார மட்டத்துக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையில் இருக்கும் கூட்டணிதான், இன்றைக்குப் பற்றியெரியும் கேள்வி. போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் செயல்படுவது சந்தேகத்துக்கு இடமில்லாதது. ஒரு கும்பலை அழித்தாலும் மற்றொரு கும்பல் உடனடியாக அதன் இடத்தை நிரப்பிவிடுகிறது.
குரெரோ மாகாணம் ஓபியம் உற்பத்திக்குப் புகழ்பெற்ற பிரதேசங்களில் ஒன்று என்பதில் எந்த ரகசியமும் இல்லை. அத்துடன் கடந்த ஆண்டில் இந்தத் தொழில் செழித்து வளர்ந்தி ருந்தது. மாணவர்கள் கடத்தப்படுவதற்குக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்படும் இகுவாலா மேயர் லூயி அப்ரகாவும் அவரது மனைவியையும் தவிர, மேலும் பல அரசியல் தலைவர்களுக்கும் போதை மருந்துக் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? ஓபியம் பயிரிடுவது இன்றும் தொடர்கிறதா?
இந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து அமெரிக்க போதை மருந்துத் தடுப்புப் பிரிவு, இவ்விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமான மற்றொரு நபர் பற்றி யாரும் பேசுவதில்லை. அயோத்சினாபா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் ஜோஸ் லூயி ஹெர்னாண்டெஸ்தான் அவர். ஆனால், இச்சம்பவத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சாதிக்கிறார் அவர். ஆனால், மேயர் அப்ரகாவின் மனைவி கலந்துகொண்ட நிகழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்காக, மாணவர்களை அனுப்பியதே அவர்தான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
கடந்த ஓராண்டாக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் ஹெர்னாண்டஸ் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தவில்லை. ஆனால், அந்தக் கல்லூரியில் படிக்கும் எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் படிப்பை முடித்து ஆசிரியர் பட்டத்துடன் வெளிவருகிறார்கள்.
மாணவர்களின் பெற்றோர்களுடனான அதிபரின் சந்திப்பின் போது, நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட பதில்கள்தான் அளிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சம்பந்தப்பட் டவர்கள் இப்பதில்களில் திருப்தியடைந்திருப்பார்களா என்று தெரியவில்லை. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான கேள்விகள், பதில்களை எதிர்பார்த்து இன்றும் காத்திருக் கின்றன.
தமிழில்: வெ. சந்திரமோகன்