சிறப்புக் கட்டுரைகள்

பிஹாரில் சூடுபிடிக்கும் டிஜிட்டல் பிரச்சாரம்!

செய்திப்பிரிவு

இந்த ஆண்டு நடைபெறும் பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்குத் தனிச்சிறப்பு உண்டு. கரோனா பெருந்தொற்றால் இந்தியா ஸ்தம்பித்திருக்கும் சூழலில் நடைபெறும் முதல் தேர்தல் அது. பெருந்தொற்றுக்கு நடுவே வழக்கமான தேர்தல் பிரச்சாரங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் முன்னுதாரணமற்ற வகையில் இது முழுக்கவும் டிஜிட்டல், இணையவழிப் பிரச்சாரத்தைச் சார்ந்திருக்கும் தேர்தலாக உருவெடுத்துள்ளது. இது பெரிய குதிரைப் பந்தயம் போன்றதுதான்.

இதில் நிதி ஆதாரங்கள், அரசு நிறுவனங்கள் கையில் இருப்பது, மிகப் பெரிய சமூக ஊடகக் கட்டமைப்பு என்று எல்லோரையும் முந்திக்கொண்டு இருப்பது ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகதான். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களை பிஹாரில் உள்ள பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கியிருக்கிறது. வாக்குச்சாவடி என்ற அளவு வரை மக்களைப் போய்த் தங்கள் தகவல்கள் சேர வேண்டும் என்று இலக்குவைத்து அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மற்ற கட்சிகளைவிட சில மாதங்களுக்கு முன்பே இந்த வேலையைத் தொடங்கிவிட்டார்கள். பெருந்தொற்றுக்கு மத்தியிலும் காணொளி மூலமாக அமித் ஷாவின் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்து அதற்கென்று 10 ஆயிரம் எல்.இ.டி. திரைகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் டிவிகள் என்று களமிறக்கினார்கள்.

இந்த அணிவகுப்பு 40 லட்சத்துக்கும் அதிகமானோரைச் சென்று சேர்ந்ததாக பாஜக சொல்கிறது. பாஜக இப்படி என்றால் காங்கிரஸ் தூரத்தில் அதன் பின்னே ஓடிவருகிறது. ஒட்டுமொத்த பிஹாருக்கும் சுமார் 3,800 வாட்ஸ்அப் குழுக்களை மட்டுமே உருவாக்கியிருக்கிறது. காங்கிரஸின் சமூக ஊடகத் தலைமையகத்தில் கிட்டத்தட்ட 40 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் பாஜகவின் சமூக ஊடகத் தலைமையகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகிறார்களாம். ஆளும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமோ இந்த விஷயத்தில் இன்னும் பலவீனமாக இருக்கிறது. சமீபத்தில், நிதீஷ் குமாரின் இணையவழி அணிவகுப்பொன்று நடந்தது. அதில் நிதீஷ் குமார் நீண்ட உரையை ஆற்றினார். என்றாலும், அந்த அணிவகுப்பு பெரும் தோல்வியைச் சந்தித்திருப்பதாகவே கருதப்படுகிறது.

கரோனா காலகட்டத்தில் நேர்ப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது என்பதால் பிஹார் தேர்தலில் எல்லோரும் தொலைக்காட்சி, இணையம், சமூக ஊடகங்கள் போன்றவற்றையே நம்பியிருக்கிறார்கள். எனினும், பிஹாரில் இணைய வசதி இருப்பது 37%-த்தினரிடம் மட்டுமே; 30% மட்டுமே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறார்கள்!

SCROLL FOR NEXT