சிறப்புக் கட்டுரைகள்

கேரளத்தில் கம்பனைப் பாடுபவர்

அ.கா.பெருமாள்

கலை, இலக்கிய விமர்சகரான வெங்கட்சாமிநாதன் 80-களில் கேரளத்தில் நடந்த தோல்பாவைக் கூத்து நிகழ்வைப் பார்த்துவிட்டு, என்னிடம் நீங்களும் அதைப் பார்க்க வேண்டும் என வற்புறுத்தினார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றைப்பாலம், புதுசேரி என இரண்டு கிராமங்களில் நான் அந்தக் கூத்தைப் பார்த்த பிறகு, அவர் வற்புறுத்தியதன் காரணம் புரிந்தது. அவர் கேரளத் தோல்பாவைக் கூத்து தொடர்பாக ஆண்டி சுப்பிரமணியம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையையும் அனுப்பித் தந்தார்.

தமிழகத்திலிருந்து சென்றது

தென்னிந்தியப் பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் நிகழ்த்துதல் தரத்தைத் தொடர்ந்து காப்பாற்றுவது கேரளத்தில்தான். அங்கே நிகழும் தோல்பாவைக் கூத்தின் கலைவடிவம் தமிழகத்திலிருந்து சென்றது என்பதும் அங்கே கூத்து நிகழ்ச்சியில் கம்பனின் பாடல்கள் பாடப்படுகின்றன என்பதும் தமிழ் கலை, இலக்கிய ஆர்வலர்களும் விமர்சகர்களும் பெரும்பாலும் அறியாத விஷயம். கேரளத் தோல்பாவைக் கூத்து தொடர்பாக தமிழில் 3 ஆங்கிலத்தில் 5 என எட்டுக் கட்டுரைகளும் சங்கீத நாடக அகாடமி வெளியிட்ட நூல் ஒன்றும் ஸ்டுவேர்டு பிளாக்பேர்ன் எழுதிய நூல் ஒன்றும் ஆக இரண்டு நூல்கள் வந்துள்ளன. இவை தவிர, கேரள நாட்டார் வழக்காற்றியலாளர்கள் எழுதியவையும் உள்ளன. இந்தக் கட்டுரைகள், நூல்கள் எல்லாமே கேரளத் தோல்பாவைக் கூத்தைத் தமிழ் மண்ணுடன் இணைத்துத்தான் பேசுகின்றன.

தமிழகத்தில் பனுவல் இல்லை

தென்னிந்திய மொழிகளில் தோல்பாவைக் கூத்து நிகழ்த்துவதற்கென்ற எழுத்து வடிவ ராமாயணப் பனுவல் இல்லாதது தமிழுக்கு மட்டும்தான். ஆந்திர தோல்பாவைக் கூத்துக்கு ரங்கநாத ராமாயணம், கர்நாடக தோல்பாவைக் கூத்துக்கு சிக்கதேவ உடையார் ராமாயணம் கேரளக் கூத்துக்குக் கம்பராமாயண ஆடல்பற்று எனப் பனுவல்கள் உள்ளன. தமிழகத் தோல்பாவைக் கூத்தில் வட்டாரரீதியான ஒரு ராமாயணக் கதையே நிகழ்த்தப்படுகிறது. இதில் சில காட்சிகள் ஆந்திர மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்தவை. மயிராவணன் கதை தமிழ் மரபிலிருந்து உருவானதல்ல. இந்தக் கதைகளும் வாய்மொழி வடிவில்தான் உள்ளன.

கிருஷ்ணன்குட்டிப் புலவர்

தமிழகத்து நாட்டார் நிகழ்த்துக்கலைகளில் ஆந்திரக் கலைஞர்களின் செல்வாக்கு இருப்பது போலத்தான் கேரளத் தோல்பாவைக் கூத்தில் தமிழரின் செல்வாக்கு இருப்பதும். 80-களில் கேரளம் திரிசூரில் நடந்த நாடக விழாவுக்குத் தமிழகத் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் கலைமாமணி பரமசிவ ராவை அழைத்துச் சென்றபோது, கேரளத் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் கிருஷ்ணன்குட்டிப் புலவரைச் சந்தித்தேன். அவர் உன்னதமான கலைஞர். சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர் (1980) தாஷ்கண்ட் கலை விழாவுக்குச் சென்றவர் (1979) பாலக்காடு கூத்தறா கலைஞர் மரபில் வந்தவர். மரபுவழி நுட்பங்களை அறிந்தவர். அவர் அந்தக் கலையை வேள்விபோல் நடத்தினார்.

கிருஷ்ணன்குட்டிப் புலவர் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குத் தோல்பாவைக் கூத்து சென்றது என்பதை உறுதியாகச் சொன்னார். ஆரம்ப காலத்திலேயே இதுபற்றி ஆராய்ந்த ஆண்டி சுப்பிரமணியமும் இதைச் சான்றுகள் வழி விளக்கியிருக்கிறார். தோல்பாவைக் கூத்தை ஆராய்ந்த ஜீ.வேணு, ஸ்டுவேர்டு பிளாக்பேர்ன், சி.ரவீந்திரன், ராஜ கோபால் என எல்லோரும் இதை ஒப்புக்கொள்கின்றனர். கேரள நாடக ஆசிரியர் ஜீ.சங்கரப்பிள்ளை இதை முழுதுமாக ஏற்றுக்கொள்கிறார்.

பிளாக்பேர்ன் கருத்து

தமிழகத்திலிருந்து தோல்பாவைக் கூத்துக் கலையைக் கேரளத்துக்குக் கொண்டுசென்றவர்கள் பிராமணர்கள் என்றும், தமிழ் கணிகர்களுடன் சென்ற பல்வேறு சாதியினர் என்றும் இருவேறு கருத்துக்களை விரிவாக ஆராய்ந்துள்ளார் ஸ்டுவேர்டு பிளாக் பேர்ன். ஆக்ஸ்போர்டு வெளியிடாக வந்துள்ள (1997) Rama Stories and shadow puppets (ராமர் கதையும் நிழல் பாவைக் கூத்தும்) என்ற நூலில் பிளாக்பேர்ன் பிராமணர் அல்லாத சாதியினர் கம்பனையும் தோல்பாவைக் கூத்தையும் கேரளத்துக்குக் கொண்டுசென்றனர் என்கிறார்.

கோயில் கலை

கேரளத்தில் இப்போது நாயர், மன்றாடியார், செட்டியார் என எல்லா சாதியினரும் இக்கலையை நிகழ்த்துகின்றனர் என்றாலும், கலை நிகழ்த்துதலின் மொழிநடையை “தமிழ் செட்டி பாஷை” எனக் கூறுகின்றனர். கேரளக் கதகளியின் பாதிப்பு தோல்பாவைக் கூத்தில் உண்டு. இதைப் பாவைக் கதகளி என்றும் சொல்கின்றனர்.

கேரளம், பாலக்காடு மாவட்டத்திலும் அதை அடுத்த பகுதிகளிலும் உள்ள பகவதி, காளி கோயில்களில் தோல்பாவைக்கூத்து நிகழ்கிறது. இக்கூத்தின் பாடுபொருள் ராமாயணக் கதை. பின்னணி இசைக் கருவிகள் செண்டை, சேக்கிலைத் தாளம், சங்கு ஆகியன. ஏழப்பறை, ஜால்ராவும் உண்டு. கோயிலில் கூத்து நடத்த கூத்து மாடம் உண்டு. சாக்கையர் கூத்து கோயிலின் உள்பகுதியில் நடக்கும்போது, பாவைக் கூத்து கோயிலின் வெளியே நடக்கிறது. ஆரம்ப காலத்திலிருந்தே எல்லா இன மக்களும் இதைப் பார்த்தார்கள் என்பதற்கு இது சான்று. இதனால், இதை வேத்தியல் வகையில் அடக்குகின்றனர்.

பார்வையாளர்

இக்கலை நிகழ்வுக்குப் பார்வையாளர் மிகக் குறைவாகவே வருகின்றனர். தென்னிந்தியாவில் பிற மாநிலங்களில் நிகழும் பாவைக் கூத்து நிகழ்வில் பார்வையாளர்களின் எண்ணிக் கையை வைத்துத்தான் நிகழ்ச்சி சிறப்பாக அமையும் என்னும் பொதுப் பண்பு கேரளப் பாவைக் கூத்துக்குக் கிடையாது. இங்கே பகவதி அல்லது காளி பார்வையாளராக இருக்கிறாள். தாருகன் வதை முடிந்த பின், காளி பார்ப்பதற்காக ராமாயணம் நடத்தப்பட்டது என்பது ஐதீகம்.

80-களில் இக்கூத்தை முழுமையாகப் பதிவுசெய்த பிளாக்பேர்ன் “இக்கூத்தை நான் பதிவு செய்தபோது பார்வை யாளர்கள் இல்லாத கூத்து இது என்பது சரியல்ல என்று உணர்ந்தேன். கலை நிகழும் கோயில் பொறுப்பாளர்கள் கூத்தை நேரடியாகக் காணாவிட்டாலும் அதன் தரத்தை அறிந்தவர்களாக இருந்ததைக் கண்டேன். இந்தப் புரவலர்களும் நல்ல பார்வையாளர்கள். இந்திய நிகழ்த்துக்கலைகளின் பொதுவான பண்பை இங்கு ஒப்பிட முடியாது” என்கிறார்.

சடங்குக் கூறுகள்

பிற மாநிலத் தோல்பாவைக் கூத்து நிகழ்வுகளிலிருந்து கேரளத் தோல்பாவைக் கூத்து வேறுபடுவது இதன் சடங்குக் கூறுகளின் சிறப்பால்தான். கூத்து ஆரம்பமாகு முன்பு கோயில் வெளிச்சப்பாடு (சாமியாடி) சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு கோயிலை வலம் வருவார். “இங்கு நடக்கப்போகும் கம்ப நாடகத் தர்மத்துக்கு (கம்பராமாயணக் கூத்து) யாதொரு குறையும் வராமல் கீழ்வழக்கப்படி (முன்னோர் மரபின் படி) நடத்த வேண்டும் அதற்கு முன்பும் பின்பும் சகாயித்துக்கொள்ளுகின்றேன்” என்பார்.

தெய்வத்தினிடம் வேண்டுதலுக்காகவும் பாவைக் கூத்து நடத்தப்படும். ஒருவகையில் இது படையல் பொருள் போன்றது. கேரளம் தவிர்த்த பிற மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வு இல்லை. இப்படியாக நேர்ச்சை செய்பவரைக் கூத்துப் பாத்திரப் பாவை வாழ்த்தும். இதுவும் சடங்குக் கூறுகளில் ஒன்றாகக் கருதப்படும். வயதான மலையாளிகள் இப்போதும் இந்தக் கூத்தை வழிபாட்டுக் கம்பக்கூத்து என்றுதான் சொல்கிறார்கள். இதன் மொத்த அமைப்பும் குலையாமல் மரபைச் சார்ந்து நிகழ்த்தப்படுவதற்கு இதன் சடங்குக் கூறுகள் முக்கியக் காரணம். இக்கூத்தின் அரங்க விளக்கு தீபம்கூட காளியின் கருவறை விளக்கிலிருந்து பொருத்தப்படும் நடைமுறை இன்றும் தொடர்கிறது.

தமிழரின் கூத்து

தமிழகத்திலிருந்து கேரளத்துக்குக் குடிபெயர்ந்தவர்களால் கொண்டுசெல்லப்பட்டது கேரளத் தோல்பாவைக் கூத்து என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. தமிழகத்தில் இப்போது தோல்பாவைக் கூத்தை மராட்டியர்கள் நடத்தினாலும் ஒருகாலத்தில் தமிழர்களே இதை நடத்தியிருக்க வேண்டும். தமிழரிடமிருந்து இக்கலையைக் கற்று மராட்டியர் நடத்தி யிருக்கலாம். தமிழகத்தில் பூர்வீகமாய் தோல்பாவைக் கூத்து நடத்தியவர்கள் பாலக்காடு கணவாய் வழி சென்ற தமிழ் வணிகர்களுடன் சென்றிருக்க வேண்டும். இக்கலையைச் சின்னத்தம்பிப் புலவர் என்பவர் கொண்டுசென்றார் என்பது மரபு வழிச் செய்தி. ஆரம்பத்தில் இக்கலையை நடத்தியவர்கள் செட்டி சமூகத்தினர் என்று கூறுகின்றார்.

கூத்து குடிபெயர்ந்த காலம்

கி.பி.18-ம் நூற்றாண்டில் வடகேரளத்தில் பாவைக் கூத்து நடத்தப்பட்டிருக்கிறது. இதே நூற்றாண்டினரான மலையாளக் கவிஞர் துஞ்சன் நம்பியார் சோஷாயாத்ரா என்ற நூலில் இக்கலையைக் குறிப்பிடுகிறார். பாலக்காடு பகுதியில் வாழும் பிராமணர்கள் தமிழகத்திலிருந்து குடியேறியவர்கள் என்பதற்கான கதையுண்டு. இதனுடன் பாவைக்கூத்து சென்றதற்கான காரணத்தையும் சேர்த்துச் சொல்லுகின்றனர். பாலக்காடு பகுதியை ஆண்ட சேகரவர்மா என்ற சிற்றரசன் பழங்குடி பெண் ஒருத்தியை விரும்பி மணம் செய்துகொண்டார். இதனால் மாறுபாடு கொண்ட பாலக்காடு நம்பூதிரிகள் கோயில் பணியைச் செய்ய மாட்டோம் எனக் கூறித் தென் கேரளத்துக்குக் குடிபெயர்ந்தனர். அதனால் சேகரவர்மன் தஞ்சை மாவட்டத்துத் தமிழ் பிராமணர்கள் சிலரைப் பாலக்காடு பகுதியில் குடியேற்றினான். அப்போது பிராமணர் அல்லாத சமூகத்தினர் சிலரும் சென்றனர். அவர்களுடன் தோல்பாவைக் கூத்துக் கலையும் கம்பராமாயணமும் சென்றன. இது 15-ம் நூற்றாண்டு நிகழ்வு.

ஆடல்பற்று

கேரளத் தோல்பாவைக் கூத்து நிகழ்வை நெறிப்படுத்துவது ஆடல்பற்று என்ற பனுவல். ஆடல்பற்று என்பதை Shooting Script என்று கூறுகிறார் ஆண்டி சுப்பிரமணியம். கேரளத் தோல்பாவைக் கூத்தில் நிகழ்ச்சி அமைப்பில் எதாவது மாற்றம் செய்ய விரும்பினால் சோதிடம் / பிரசன்னம் பார்த்த பின் முடிவுசெய்கிறார்கள். தமிழகத் தோல்பாவைக் கூத்தில் ராமாயணம் மையப்பொருளாக இருந்தாலும், அத்து மீறிய ஆபாசச் சொற்களும் மூலக் கதைக்குத் தொடர்பற்ற உரையாடல்களும்தான் கூத்து நிகழ்வு என்றாகிவிட்டது. இதற்கென்ற ஆடல்பற்று இல்லாதது ஒரு காரணம்.

கம்பனின் பாடல்கள்

கேரளத் தோல்பாவைக் கூத்தில் கம்பனின் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் பாடப்படுகின்றன. கதை விளக்கம் தமிழிலும் மலையாளத்திலும் கலந்து வருகிறது.

கூத்து நிகழ்வின் ஆரம்பத்தில் ஒருபாவை “உலகிலே ராமாயணம் பல உண்டு” சம்பு ராமாயணம், மகா நாடகம், வால்மீகி ராமாயணம், அத்யந்த ராமாயணம் எனப் பல. இதிலே கம்ப ராமாயணம் 12,000 பாடல்களைக் கொண்ட ஒரு தமிழ்க் காவியமாக்கும் என்று கூறும். அடுத்த பாவை சரி சரி அந்தக் கம்பனின் பாடல்களைப் பாடுவோம் எனக் கூறும். கிருஷ்ணன்குட்டிப் புலவரிடம் கம்பனின் பாடல்கள் அடங்கிய 292 ஓலைச்சுவடிகள் இருந்ததை ஆண்டி பார்த்திருக்கிறார். இவை 1848 அல்லது 1908-ல் பிரதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது ஊகம்.

கம்பனின் 2,300 பாடல்களும், இவற்றுக்கு விளக்கமும் உள்ளன. பிளாக்பேர்ன், இச்சுவடிகளில் 70 விழுக்காடு கம்பனின் மூலப் பாடல்கள் என்றும் 20 அளவில் கம்பனைத் தழுவிய புதிய பாடல்கள் என்றும் 10 விழுக்காடு கம்பனின் வரிகள் அடங்கிய வேறு பாடல்கள் என்றும் வரையறை செய்கிறார். கேரளப் பாவைக் கூத்து நிகழ்ச்சியில் கதைப் போக்குக்கேற்பவே கம்பனின் பாடல்கள் பாடப்படுகின்றன. சூர்ப்பனகையின் மகன் சம்புகுமாரன் கதையை நிகழ்த்தும்போது ராம லட்சுமணர்கள் கோதாவரி ஆற்றைக் கண்ட நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது, அப்போது

“புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி

அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவி

சவியறத் தெளிந்து தண்ணென்ற ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்

கவிஎனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்”

என்ற பாடல் பாடப்படுகிறது. இதுபோலவே கதைப் போக்குக்கு ஏற்ப வேறு பாடல்களும் பாடப்படுகின்றன. 21 நாட்கள் கூத்து நிகழ்ச்சியில் மட்டுமே எல்லாப் பாடல்களும் பாடப்படுகின்றன. சில இடங்களில் தமிழ் உரைநடை வடிவமும் வருகிறது.

“அரக்கன் சேனையை நெருடிய சிலை ராமன் தோள்வலி கூறுவோர்க்கு நாடிய பொருள் நற்பலன் உண்டாகும். அரக்கன் சேனை இழந்தது சொன்னால் ராவணாதி ராட்சதாதிகள் ஆன துஷ்டன்மார்கள் இந்தச் சேனைகள் எல்லாம் தம் தரத்தினிடத்தில் உண்டாகிய கோதண்டம் இது’’. நீண்டு கொண்டே இவ்வசனம் போகும்.

80-களில் திரிச்சூரில் கிருஷ்ணன்குட்டிப் புலவரை நான் சந்தித்தபோது தமிழகத்தில் இந்தக் கம்ப நாடகத் தோல்பாவைக் கூத்து பற்றித் தெரியாது என்றேன். அவர் பாலக்காடு மலையாளத்தில் ‘‘... கம்பனை எரித்தால் எப்படி இந்தக் கூத்தை மதித்து அடையாளம் காண முடியும்” என்றார்.

அ.கா.பெருமாள்,

நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

SCROLL FOR NEXT