ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய உத்தர பிரதேசத்தின் மீரத் நகரைச் சேர்ந்த சஞ்சு ராணி வர்மா அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் தனக்கு இவ்வளவு ஊடக வெளிச்சம் கிடைக்கும் என்று.
உத்தர பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலமொன்றின் பெரும்பாலான பெண்களுக்கு வாழ்க்கை என்றால் அது திருமண வாழ்க்கை மட்டும்தான். அதை மீற நினைத்தவர்தான் சஞ்சு. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்துக்கொண்டிருந்தார்.
அவரது தாயார் இறந்த பிறகு அவர் குடும்பத்தினர் அவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்கள். தனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன என்று சஞ்சு பேசிய மொழியை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், வீட்டை விட்டு வெளியேறினார். படிப்பும் பாதியிலேயே நின்றுபோனது. குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி எடுத்துக்கொண்டு, குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தார். 2018-ல் உத்தர பிரதேச அரசுப் பணித் தேர்வாணையத் தேர்வும் எழுதினார். அதன் முடிவு கடந்த வாரம் வெளியானது. சஞ்சு ராணி அந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். வணிக வரி அதிகாரியாக உத்தர பிரதேசத்தில் அவர் பதவியேற்கவுள்ளார். எனினும், தன் கனவுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை; தான் சாதிக்க வேண்டியது இனிதான் அதிகம் இருக்கின்றன என்கிறார் சஞ்சு. ஆம்! அடுத்தது மாவட்ட ஆட்சியர் ஆவதற்காக முயன்றுகொண்டிருக்கிறார் சஞ்சு.