சிறப்புக் கட்டுரைகள்

மிருகங்களின் கலாச்சார மொழி

முனைவர் இரா.திருநாவுக்கரசு

சமகாலக் கன்னட இலக்கிய உலகின் முன்னோடியான எம்.எம்.கல்புர்கி ‘அடையாளம்’ தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். மூத்த இலக்கியவாதி, ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என்று பல சிறப்புகளைப் பெற்ற கல்புர்கியின் படுகொலை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் அடுத்த குறி யார் என்பதைச் சில அமைப்பினர் பகிரங்கமாகவே சொல்லியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது யாரோ ஒரு தனி நபருக்கு நடந்திருக்கும் அநீதி என்ற அளவில் பார்த்தால், நம் கண் முன் நிகழ்ந்துவரும் ஒரு பெரும் கொடூரத்தைக் காண மறுக்கிறோம் என்றே பொருள்.

மிரட்டப்படும் அறிவுஜீவிகள்

கர்நாடகத்தில் மட்டும் நடந்த ஓர் அசம்பாவிதம் என்றும் கூற இயலாதபடி, நாட்டின் பல பகுதிகளில் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மிரட்டப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். அப்படி இவர்கள் செய்த தவறு என்ன? வெளி நாட்டுத் தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அப்பாவி மக்களைக் கொடூரமாகக் கொலை செய்யத் தூண்டினார்களா? இல்லை. சிலரது நம்பிக்கைகளை ஏற்க மறுத்துள்ளனர்… அவ்வளவுதான். அதற்கா இவ்வளவு பெரிய தண்டனை என்று யாரும் கேட்கப்போவதில்லை. ஏனெனில், நம்பிக்கை என்பது இன்று நம்முடைய புதிய அரசியல் கோட்பாடு. இந்தப் புதிய கோட்பாட்டை, கொள்கையை ஏற்க மறுத்தவர்கள் அனைவருமே எதிரிகள். இந்த உலகில் வாழத் தகுதியற்றவர்கள்.

அதிக காலமில்லை, 50 ஆண்டுகளுக்கு முன்னால்கூட, நமது கலாச்சார அம்சங்கள் அனைத்துமே இதே மண்ணில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அவை அனைத்தும் பெரும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டதோடு, நம்பிக்கை குறித்த புல்லரிப்புகள் எள்ளி நகையாடப்பட்டன. புராணங்கள், ஐதீகங்கள் என வரலாறு என்று சொல்லப்பட்ட அனைத்துமே அடித்து நொறுக்கப்பட்டது. புதிய வரலாற்றை உருவாக்க வேண்டும் என்ற புத்தெழுச்சி நமது கலாச்சார அடையாளமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் மண்ணில் போன தலைமுறை பெரும் பரவசத்தோடு பேசிய அனைத்துமே இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டது. இன்று புதிய கலாச்சார அடையாளத்தை வரையறுக்கப் பலரும் கிளம்பிவிட்டனர். அன்று எவையெல்லாம் விமர்சிக்கப்பட்டனவோ இன்று அவையெல்லாம் புனிதப் பொருட்களாகிவிட்டன. அன்று மத சம்பிரதாயங்களைப் பற்றி பெருமிதத்தோடு பேசியவர்கள் தமிழர்களுக்கு எதிரான தீய சக்திகளாக அறிவிக்கப்பட்டனர். இன்று புராணங்கள், இதிகாசங்கள், ஐதீகங்களைப் புதிய கொள்கைகளாகக் கருதுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் ‘தேசியவாதிகளாக’ உருமாற்றம் பெருகின்றனர். இவர்களின் கோட்பாடுகளுக்கு எதிர்மறையாக யார் பேசினாலும் அவர்களுக்கு எதுவும் நடக்கலாம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிவிட்டது.

விமர்சனம் அவசியம்

இந்த சமூக மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் சில அம்சங்களை கோடிட்டுக் காட்டவேண்டும். பகுத்தறிவு, நாத்திகப் பரப்புரை போன்றவை முழு வீச்சில் தமிழ் மண்ணில் நிகழ்ந்தபோதும் கோயில்கள் இருந்தன; திருவிழாக்கள் சிறப்போடு நடைபெற்றன. அத்தனை மத சம்பிரதாயங்களும் எப்போதும்போலவே நிறைவேற்றப்பட்டன. நாத்திகப் பரப்புரை சில சமயம் எல்லை மீறியபோதும், எதிர் வன்முறைக்கு அவை வழிவகுக்கவில்லை. வரலாற்றை மறு கட்டமைப்பது அவசியமான கொள்கையாக அன்று கருதப்பட்டது. காலனிய ஆட்சியின் கடும் சுரண்டல்களிலிருந்து சற்றே மீண்ட தேசம், பஞ்சத்தின் பிடியில் சிக்கி உருக்குலைந்த மக்கள் திரள், ஜனநாயகப் பாதை என்னும் உயரிய விழுமியத்தைக் கையில் எடுத்தபோது, விமர்சனம் என்பது அத்தியாவசியமானது என்ற எளிய உண்மையை நன்றாகவே புரிந்துகொண்டிருந்தது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

வரலாற்றை மறுஆய்வு செய்வது அவசியமான ஜனநாயகப் பணி என்று உரத்துச் சொன்னது இதே மக்கள் கூட்டம்தான். இன்று ஒவ்வொரு சமூகக் கூட்டமும் தங்களது வரலாற்றைத் தாங்கள் மட்டுமே மீட்டுருவாக்கம் செய்வோம் என்று தெளிவாகவே சொல்லிவிட்டன. இங்கு ஆய்வுகள் அவசியமில்லாதவை. ஆய்வுகளுக்கு என்று உருவாக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கித்தரும் ஆய்வுகள் திடுக்கிடச் செய்யும் அளவுக்குத் தரம் தாழ்ந்திருப்பது தற்செயல் அல்ல. வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய விடுக்கப்பட்ட அறைகூவலை கொச்சைப்படுத்துவதற்காக, மலினப்படுத்துவதற்காக வரலாற்றை எவ்விதமான ஆய்வு நோக்கமும் இன்றிச் சகிக்க முடியாத உயர்வு நவிற்சியில் மட்டுமே எழுத முற்பட்டதன் விளைவு, இன்று அடுத்த பரிமாணம் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கிறது.

முதிர்ச்சியற்ற புரிதல்

தங்களது அன்றாட அரசியல் தேவைகளுக்காக வரலாற்றை இழுத்தும், திரித்தும், முறித்தும் எழுதத் தொடங்கியதன் பலனை இன்று சந்திக்க வேண்டியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, இன்று வாழ்க்கைத்தரம் நிச்சயம் மேம்பட்டுதான் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் உயர் கல்வி இன்று பலருக்கும் எட்டும் தொலைவில் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு உயர் கல்விக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் செல்வது கடினம் அல்ல. உலகமயமாதலின் பகட்டான சில அம்சங்களின் முழுப் பலனையும் அனுபவித்துவரும் நமது நடுத்தட்டு வர்க்கம், தங்களது கலாச்சார வேர்கள் பற்றி எதற்காக இப்படி ஒரு பதற்றத்தில் இருக்கிறது என்ற கேள்வி எழுவது நியாயமே. ஆம், தங்களது பண்பாடு, கலாச்சாரக் குறியீடுகள் குறித்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிதானமில்லாமல் இன்று ஒரு தரப்பினர் செயல்படுவதன் பின்புலம் என்ன? தங்களது கலாச்சார வரலாறு மீது எவ்விதமான ஆய்வு நோக்கையும் முற்றாக நிராகரிக்கக் கூடிய நிலை உருவானது எதனால்? ஒரு புறம், உலகம் முழுவதும் சென்று பொருளீட்ட வேண்டும் என்ற முனைப்பு; மறுபுறம் தங்களது பண்பாடு குறித்த தெளிவின்மை அல்லது முதிர்ச்சியற்ற புரிதல். இது எளிய குழப்பம் அல்ல. தாராளமயப் பொருளாதாரமும் உலகமயமாதலும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஏற்படுத்தும் சமூக, கலாச்சாரச் சமச்சீரின்மை. கடந்த 30 ஆண்டுகளாக தாராளவாதப் பொருளாதாரம் உருவாக்கிவிட்ட கலாச்சார நிர்ப்பந்தம் காரணமாக புதிய புதிய கலாச்சார எதிரிகளை இன்றைய ஆதிக்க சக்திகள் அறிவித்தபடியே இருக்கின்றன. இது பொருளாதாரம், கலாச்சாரம் என இருதளங்களிலும் நாம் எதிர்கொண்டாக வேண்டிய சவால்!

- முனைவர். இரா.திருநாவுக்கரசு, உதவிப் பேராசிரியர், சமூகவியல் துறை, ஐதராபாத் பல்கலைக்கழகம்,

தொடர்புக்கு: mvrthiru@gmail.com

SCROLL FOR NEXT