உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக பிரசாந்த் பூஷன் ட்விட்டர் மூலம் தெரிவித்த கருத்து குறித்து, ‘இது கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை’ என்ற ரீதியில் மட்டுமே பெரும்பாலான ஊடகங்கள் அணுகுகின்றன. அவருடைய இரண்டு ட்வீட்கள் குறித்துக் குறிப்பிட்டு, அவருக்கு ஆதரவாக வாதாடும் ஊடகங்கள், பூஷனின் முதலாவது ட்வீட்டின் இரண்டாவது பகுதி குறித்து வசதியாக மறந்தோ மறைத்தோவிடுவதுதான் வேதனையான உண்மை.
ட்வீட்டின் முதல் பகுதியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே முகக்கவசம் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்கை ஓட்டிச் செல்கிறார் (rides) என்று பூஷன் குறிப்பிட்டதே முதல் பொய். அந்தப் புகைப்படத்தில் நின்றுகொண்டிருக்கும் பைக்கின் மீதுதான் நீதிபதி அமர்ந்திருக்கிறார் என்பதுகூடவா அவர் கண்ணுக்குத் தெரியவில்லை! இதே ட்வீட்டின் இரண்டாம் பாகத்தில் மனதறிந்து இன்னொரு பொய்யை அவர் சொல்லியிருக்கிறார். அதை உச்ச நீதிமன்றம் அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறது. அதாவது, நாட்டின் குடிமக்கள் தங்களுக்கான நீதியைப் பெற முடியாதபடி உச்ச நீதிமன்றத்தை லாக்டவுனில் முடக்கி வைத்துவிட்டுத்தான் தலைமை நீதிபதி போப்டே இப்படி பைக் ஓட்டிக்கொண்டிருக்கிறாராம்!
உச்ச நீதிமன்றம் அப்படியெல்லாம் இயங்காமல் முடக்கப்படவில்லை என்பதையும், மார்ச் ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு ஆகஸ்ட் 4 வரையில் 879 அமர்வுகளின் மூலம் 12,748 வழக்குகளை விசாரித்ததையும், 686 ரிட் பெட்டிஷன்களைக் கையில் எடுத்தது என்பதையும் பிரசாந்த் பூஷன் அறியாமலா இருந்திருப்பார்? இதற்கெல்லாம் உச்சமாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவை ‘டிடி’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்து, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பூஷன் வெளியிட்ட ஒரு ட்வீட்டுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில், அவர் கைதாகும் நிலை உருவானபோது இதே உச்ச நீதிமன்றத்தை, இதே ஊரடங்கின்போது அணுகித்தான் தனக்கு ஆதரவான உத்தரவைப் பெற்று, கைதாவதிலிருந்து தப்பினார் பிரசாந்த் பூஷன். அவர் சொல்வதுபோல் உச்ச நீதிமன்றத்தைத் தலைமை நீதிபதி போப்டே முடக்கிவைத்திருந்தால், குஜராத்தின் ராஜ்கோட்டில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கைதாகி, பூஷன் சிறையில் இருக்க வேண்டிவந்திருக்கலாம்.
நீதித் துறையோ, நீதிபதிகளின் செயல்பாடோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்று யாரும் சொல்லவில்லை. ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கு முன்பு, அந்தக் குற்றச்சாட்டில் உள்நோக்கமோ பொய்யோ இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம். இந்த வழக்கறிஞருக்கு ஆதரவாக வாதாடுபவர்கள் யாராக இருந்தாலும், முழு உண்மைகளை முன்வைத்து வாதாடுவதுதான் அவர்களின் மனசாட்சிக்குச் செய்கிற நியாயமாக இருக்க முடியும்.
- பிரதீப், மின்னஞ்சல் வழியாக...