சிறப்புக் கட்டுரைகள்

வன்முறைகளால் சிதையும் பன்மைத்துவ‌ பெங்களூரு

இரா.வினோத்

இன்றைய பெங்களூரு நகரத்துக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒன்று, கெம்பே கவுடா காலத்தில் உருவான மரபான கிராமத்தன்மை. மற்றொன்று, பிரிட்டிஷார் உருவாக்கிய நவீன நகரத்தன்மை. பேட்டை (மார்க்கெட்), தண்டு (கண்டோன்மென்ட்) என அழைக்கப்பட்ட இந்த இரண்டும் 1956-ல் ஒன்றாகச் சேர்க்கப்படுவ‌தற்கு முன்பு வரை, வெவ்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள், வெவ்வேறு கலாச்சாரத்துடன், வெவ்வேறு மொழிகளைப் பேசி, அவரவரின் கடவுள்களை வணங்கி, பன்மைச் சமூகமாக வாழ்ந்தனர். அந்த வகையில் இன்றைய பெங்களூருவின் காஸ்மோபாலிட்டன் முகத்துக்கு அதுவே அஸ்திவாரம்.

1800-களில் பிரிட்டிஷார் பெங்களூரு கண்டோன்மென்ட்டை ஒரு கொண்டாட்ட நகரமாகவே கட்டமைத்தார்கள். மெட்ராஸ் மாகாணக் காலனிய அதிகாரிகள் தங்கள் விடுமுறைக் காலத்தையும், ஓய்வுக் காலத்தையும் அமைதியாக‌ அனுபவிப்பத‌ற்காக முறையாகத்‌ திட்டமிட்டு உருவாக்கினார்கள். 1956 மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது பெங்களூரு கண்டோன்மென்ட் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டது. அதுவரை பிரிந்திருந்த பேட்டையும் கண்டோன்மென்ட்டும் இணைந்து பெங்களூரு மாநகராட்சி ஆனது. தலைநகரம் மைசூருவிலிருந்து பெங்களூருவுக்கு மாற்றலானது. நேருவின் ஐந்தாண்டுத் திட்டங்களால் பெங்களூரு தென்னகக் கேந்திரமானது. இந்தியாவின் பிற நகரங்களைக் காட்டிலும் பெங்களூரு மிக வேகமாக வளர்ந்தது.

முளைவிடத் தொடங்கிய கலவரம்

1956-க்குப் பின் கர்நாடகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து பெங்களூருவுக்கு வந்த கன்னடர்கள் அதிர்ச்சியடைந்தனர். கன்னடர்களையும் கன்னடத்தையும் எங்கே எனத் தேடினார்கள். பெங்களூருவுக்கு பிற மொழி பேசும் இவ்வளவு மக்கள் எங்கிருந்து வந்ததனர் என எரிச்சலடைந்தார்கள். குறிப்பாக, பெங்களூரு கண்டோன்மென்ட் பகுதியின் பன்மைத்தன்மையும், மக்களின் மொழி, உடை, கலாச்சாரம், கேளிக்கை, பண்பாடு எல்லாம் கன்னடர்களுக்குப் பிரச்சினையாக இருந்தன. இதனால் எழுச்சி பெற்ற கன்னட அமைப்புகள் 1960-களில் தமிழ் இசைக் கச்சேரி, நாடகம், சினிமா வெளியாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. 1970-களில் பிற ‌மொழி பேசிய நபர்கள் தொடர்ச்சியாகத்‌ தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறின. 1982 கோகாக் கலவரத்தில் கன்னடர்கள் அடக்கிவைத்திருந்த ஆத்திரம் வெளிப்பட்டது. அதன் பிறகு, பெங்களூருவில் சிறுபான்மையினர் மீது, குறிப்பாகத்‌ தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டன. 1986-ல் ‘டெக்கான் ஹெரால்டு’ நாளிதழில் வெளியான சிறுகதையில் முகமது நபி அவமதிக்கப்பட்ட‌தாக முஸ்லிம்கள் கொதித்தனர். இதைக் கண்டித்து பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 11 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1991 காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வெளியான சமயத்தில் பெங்களூரு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் கலவரம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டனர். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

1994-ல் கர்நாடக அரசு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கன்னடச் செய்திகளைத் தொடர்ந்து உருது செய்திகளுக்கு 10 நிமிட நேரம் ஒதுக்கியது. இதற்கு எதிராகக் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டத்தில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெங்களூருவில் மட்டுமல்லாமல் மைசூருவுக்கும் பரவிய இந்தக் கலவரத்தில் 343 பேர் தாக்கப்பட்ட நிலையில், 25 பேர் கொல்லப்பட்டனர். 2000-ல் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டோரைக் கடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. ராஜ்குமார் காட்டில் இருந்த 108 நாட்களும் அச்சத்தின் காரணமாக‌ கர்நாடகத் தமிழர்கள் வீட்டுக்குள்ளே பதுங்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.

சர்வதேச நகரம்

2000-ல் ஐடி நிறுவனங்களின் படையெடுப்பால் இந்தியாவின் சிலிகான் வேலியாக மாறிய பெங்களூருவில், அண்டை மாநிலத்தவர்கள் மட்டுமல்லாமல் வட‌மாநிலத்தவர்களும் வெளிநாட்டினரும் குடியேறத் தொடங்கினர். இதை உணர்ந்த சித்தராமையா போன்றோர் ‘பெங்களூரு கன்னடர்களின் நகரம் மட்டுமல்ல; சர்வதேச நகரம். இங்கு வாழ்வோர் கன்னடத்தைக் கற்று, பண்பாட்டை மதித்து நடக்க வேண்டும்’ என யதார்த்தத்தை உணர்ந்து பேசினார். வன்முறைச் சம்பவங்களால் பெங்களூருவின் நற்பெயர் கெடுவதோடு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதால், அதைத் தடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

இதனால் திருவள்ளுவர் சிலைச் சிக்கல், காவிரிப் பிரச்சினை, ஒகேனேக்கல் விவகாரம், இந்தி எதிர்ப்பு, வடகிழக்கு மாநிலத்தவர் மீதான தாக்குதல், திப்பு ஜெயந்தி பிரச்சினை உள்ளிட்டவற்றை அம்மாநில அரசு கட்டுப்படுத்தியது. இருப்பினும், 2016-ல் காவிரிப் பிரச்சினை கை மீறிப் போனதில் 2 நாட்கள் பெங்களூரு நகரமே பற்றி எரிந்தது. தமிழர்கள் தாக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது சர்வதேசச் செய்தியானது. இந்த வன்முறையை முதன்முதலாகப் பார்த்த ஐடி நிறுவனங்களும் பெரும் தொழிற்சாலைகளும் அமைதியான இடங்களைத் தேடத் தொடங்கின. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சந்திரபாபு நாயுடு பல நிறுவனங்களை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

தற்போதைய கலவரம்

சமூக வலைதளங்களின் தாக்கம் உச்சம் தொட்டிருக்கும் 2020-ல் நிகழ்ந்த கலவரம் பெங்களூருவை மீண்டும் சர்வதேசச் சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது. ஆகஸ்ட் 11 அன்று புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினரான நவீன், முகமது நபிகளைப் பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக் பதிவிட்டதால் முஸ்லிம்கள் கொந்தளித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவந்த ஃபேஸ்புக் மோதல் இம்முறை வீதிக்கு வந்த‌து. இந்தப் பகுதியில் முஸ்லிம்களோடு தமிழர்களும் தலித்துகளும் அதிகமாக வாழ்வதால் பதற்றம் கூடியது. சுதாரிப்பதற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு காடுகொண்டன ஹள்ளி, தேவர்ஜீவன ஹள்ளி, காவல்பைர சந்திரா ஆகிய 3 காவல் நிலையங்களுக்கும், அகண்ட சீனிவாச மூர்த்தி, நவீன் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். ‌நள்ளிரவில் 4 மணி நேரத்துக்கும் நீடித்த வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகளின் வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 60 போலீஸார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாயினர்.

ஏற்கெனவே கரோனா ஊரடங்கால் நொடிந்திருந்த த‌மிழர், தலித்துகளை மட்டுமல்லாமல், அப்பாவி முஸ்லிம்களையும் இந்த வன்முறை மேலும் உருக்குலைத்திருக்கிறது. கலவரத்துக்குக் காரணமான நவீன் பாஜகவைச் சேர்ந்தவர் என காங்கிரஸும், காங்கிரஸைச் சேர்ந்தவர் என பாஜகவும் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றன. அகண்ட சீனிவாச மூர்த்தி தலித் என்பதால், அவரை ஆதரிக்காத காங்கிரஸ், முஸ்லிம்களைக் கண்டிக்காமல் இருக்கிறது என பாஜகவினர் அரசியல் செய்கின்றனர். பெங்களூருவில் இதுவரை நடந்த கலவரங்கள், வன்முறை சம்பவங்கள் ஆகியவற்றை உற்றுக் கவனித்தால், அவை பெங்களூரு கிழக்கு (கண்டோன்மென்ட்) பகுதியை மையமாகக் கொண்டே நடந்திருப்பது தெரிகிறது. இந்த வன்முறைச் சம்பவங்களால் அந்தப் பகுதியில் சுமார் ரூ.500 கோடி அளவிலான அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுதவிர, அரசு மற்றும் தனியாரின் முதலீடுகள், திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கிழக்குப் பகுதிக்கு வராமல்போகின்றன.

வெளியிலிருந்து வருவோருக்கு ஒட்டுமொத்த பெங்களூருவும் பதற்ற பூமியாகத் தெரிகிறது. ரம்மியமும் கொண்டாட்டங்களும் நிரம்பி வழிந்த ஊரில் வன்முறைகள் அதிகரித்து, அதன் ‘உலக வியாபாரச் சந்தை’ எனும் அந்தஸ்தைப் பாழாக்கிவிடுகிறது. இனம், மொழி, மத பேதமில்லாமல் பன்மைத்தன்மையோடும், சமூக நல்லிணக்கத்தோடும் கட்டமைக்கப்பட்ட பெங்களூருவின் அசல் முகமும் சிதைந்துவிடும் அபாயம் நெருங்குகிறது. இந்தச் சூழலில் மொழி, மதச் சிறுபான்மையினர் மீதான வன்முறைகளைத் தவிர்த்து பழைய பெங்களூருவை மீட்டெடுப்பதில் கர்நாடக அரசுக்கும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமான பங்கிருக்கிறது.

- இரா.வினோத், தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

SCROLL FOR NEXT