சிறப்புக் கட்டுரைகள்

நெருங்குகிறதா பனிக்கரடிகளின் அந்திமக்காலம்?- ஆய்வாளர்கள் அடிக்கும் எச்சரிக்கை மணி!

வெ.சந்திரமோகன்

துருவக் கரடிகள் என்று அழைக்கப்படும் பனிக்கரடிகள் (Polar bears), இந்த நூற்றாண்டின் இறுதியில் அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஆர்க்டிக் பகுதியில் பனிக் கடல் உருகி, பனிப்பாறைகள் குறைந்துவருவதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

டொரன்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் கே.மோல்னர் எனும் ஆய்வாளரின் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக, ‘நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்’ (Nature Climate Change) எனும் ஆய்விதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை மிக முக்கியமான தகவல்களைப் பதிவு செய்திருக்கிறது.

பருவநிலை மாற்றத்தின் விளைவு

அலாஸ்கா முதல் சைபீரியா வரை உள்ள ஆர்க்டிக் பகுதிகளில் 19 வகை பனிக்கரடிகள் வாழ்கின்றன. அமெரிக்கா, கனடா, க்ரீன்லாந்து, நார்வே, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பரவியிருக்கும் ஆர்க்டிக் பகுதிகளில் சுமார் 25,000 பனிக்கரடிகள் வாழ்கின்றன. கடல் பனிப் பாறைகள்தான் பனிக்கரடிகளின் வாழ்விடம். இவற்றுக்குத் தேவையான உணவும் அங்கிருந்துதான் கிடைக்கிறது.

கடல் பனிப் பாறைகளின் ஓட்டைகள் வழியாக மேலே வரும் சீல்களை (கடல் நாய்கள்) வேட்டையாடி உண்பவை பனிக்கரடிகள். இதற்காகப் பல மணி நேரங்கள் இவை காத்திருக்கும். மீன், கடல் பறவைகள் போன்றவற்றை உணவாகக் கொண்டாலும் சீல்களைத்தான் இவை பெருமளவு சார்ந்திருக்கின்றன. பனிக்கரடிகள் பெரும்பாலான நேரங்களில் நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக்கூடியவை என்றாலும், தினமும் சராசரியாக 12,325 கலோரிகளை இவை செலவழிக்கின்றன. இதனால், கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட சீல்களையே இவை நம்பியிருக்கின்றன. சராசரியாக 600 கிலோ எடை கொண்ட பனிக்கரடி ஒரே சமயத்தில் 100 கிலோ வரை சீல்களை உண்ணும் என்று ஆல்பெர்ட்டா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆண்ட்ரூ டெரோச்சர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

உருகும் பனிப் பாறைகள்

பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் பனிப் பாறைகள் உருகிவருகின்றன. பொதுவாகவே, பனிக்காலங்களில் அதிகரிக்கும் ஆர்க்டிக் பனி, இளவேனிற் காலத்திலும் கோடைக்காலங்களிலும் உருகிவிடும். இதனால் பனிப் பரப்பு குறைந்துவிடும். இந்தச் சூழலில், பனிப் பாறைகள் உருகுவது கடந்த பத்தாண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. 1981 முதல் 2010 வரையிலான காலகட்டத்தை ஒப்பிட, கடந்த 10 ஆண்டுகளில் 13 சதவீதப் பனிப் பாறைகள் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகப் பனிக்கரடிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. சீல்களை வேட்டையாட மிகக் குளிர்ச்சியான கடல் நீரில் இறங்கும் பனிக்கரடிகள் மூழ்கி உயிரிழந்த சம்பவங்களையும் ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். நீண்டகாலம் உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்பது, குட்டிகளைக் கவனிக்க முடியாமல் தாய்க் கரடிகள் தடுமாறுவது என்பன போன்ற காரணங்களால் பனிக்கரடிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும், வாழ்விடத்தையும் உணவையும் தேடி கடற்கரையோரத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்துக்கும் பனிக்கரடிகள் ஆளாகின்றன.

சீல்களை உண்பதன் மூலம் தேவையான கொழுப்பு சக்தியைப் பெறும் பனிக்கரடிகள் அவற்றை வைத்தே பல மாதங்களுக்கு உணவில்லாமல் சமாளிக்க முடியும். ஆனால், நிலப் பகுதிகளில் சீல் போன்ற உயிரினங்கள் கிடைக்காது என்பதால் பனிக்கரடிகள் பசியாறுவது சிரமம்.

முதல் முறை உறுதியாகிறது

பனிக்கரடிகள் அழிவின் விளிம்பில் இருப்பதாகப் பல ஆண்டுகளாகவே செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அலாஸ்காவின் தெற்கு போஃபர்ட் கடல் பகுதியில், பனிப் பாறைகள் குறைந்திருக்கும் காலத்தில், பனிக்கரடிகளின் எண்ணிக்கை 25 முதல் 50 சதவீதம் குறைந்திருப்பதாக உயிரியலாளர்கள் ஏற்கெனவே கண்டறிந்திருக்கிறார்கள்.

“கடல் பனிப் பாறைகள் குறைந்துவரும் வேகத்தைப் பார்க்கும்போது இந்த நூற்றாண்டின் மத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பனிக்கரடிகளை நாம் இழந்துவிடுவோம்” என்று ஆண்ட்ரூ டெரோச்சர், 2014 நவம்பரில் தெரிவித்திருந்தார். “பனிப் பாறைகள் இல்லையென்றால் சீல்கள் இல்லை. சீல்கள் இல்லையென்றால் பனிக்கரடிகள் இல்லை” என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், எப்போது, எங்கு, எப்படி இந்த உயிரினம் அழிவைச் சந்திக்கும் என்பது இப்போதுதான் முதல் முறையாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பனிப் பாறைகள் உருகுவது தொடரும்பட்சத்தில், 2040-ம் ஆண்டுவாக்கில் இந்தக் கரடிகளின் இனப்பெருக்கம் தடைப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பசுங்குடில் வாயு உமிழ்வு இப்போது இருக்கும் நிலையிலேயே தொடருமானால், இந்த நூற்றாண்டின் இறுதியில் கனடாவின் குயின் எலிஸபெத் தீவுகளைத் தவிர பிற பகுதிகளில் வசிக்கும் பனிக்கரடிகள் அழிந்துவிடும். பசுங்குடில் வாய்வு உமிழ்வு கட்டுப்படுத்தப்பட்டாலும்கூட, 2080-ம் ஆண்டுவாக்கில் ஆர்க்டிக் பகுதிகளைச் சேர்ந்த பனிக்கரடிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களுக்கும் ஒரு பாடம்

வேட்டை, காடுகள் அழிக்கப்படுவது போன்ற காரணங்களால்தான் பெரும்பாலான உயிரினங்கள் அழிவைச் சந்திக்கின்றன. பனிக்கரடிகளும் அதில் விதிவிலக்கல்ல. எனினும், 1973-ல் கையெழுத்தான சர்வதேச ஒப்பந்தத்தின்படி பனிக்கரடிகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான நாடுகளில் பனிக்கரடிகள் வேட்டைக்காரர்களின் பார்வையிலிருந்து ஓரளவு பாதுகாப்பாகவே இருக்கின்றன. இன்றைய தேதியில் கனடாவில் மட்டும்தான் பனிக்கரடி வேட்டை சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடு அது என்றும் ஒருசிலர் வாதிடுகிறார்கள். இந்தத் தகவல்களுக்கு மத்தியில்தான் இந்த உயிரினத்தின் அழிவை உறுதிசெய்யும் செய்தி வெளியாகியிருக்கிறது.

பனிக்கரடிகளின் வாழிடங்களான பனிப்பாறைகள் காப்பாற்றப்பட்டால்தான் இவற்றால் பிழைத்திருக்க முடியும். பருவநிலை மாற்றம் எனும் உலகளாவிய பிரச்சினையில் தீர்க்கமான முடிவுகளை நோக்கி மனிதகுலம் பயணித்தால்தான், பனிக்கரடிகள் பாதுகாக்கப்படும்.

எல்லாவற்றையும் தாண்டி, பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடிகள் மட்டும்தான் அழிவைச் சந்திக்கும் என்று மனிதர்கள் அலட்சியமாகவும் இருந்துவிட முடியாது!

SCROLL FOR NEXT