தமிழ்நாட்டின் மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து அமைப்பு அரசுப் போக்குவரத்துக் கழகம்தான். தினமும் 2 கோடி மக்கள் அன்றாட வேலைகளுக்காகச் சென்றுவந்த அரசுப் பேருந்துகள் மட்டும் அல்ல; தனியார் பேருந்துகளும் சேர்த்து இப்போது முடங்கிக் கிடக்கின்றன. பேருந்துகளை இயக்குவதானது போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டிருப்போர் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல; இது எப்படி வெகுமக்கள் சார்ந்த விஷயம் என்பதைப் பேசுகிறார் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மாநில பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார்.
பொதுப் போக்குவரத்து அதிகமான கிருமித் தொற்றுக்கு வழிவகுக்கும் என்று கருதித்தானே அரசு அதை நிறுத்துகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது?
நீங்கள் முதலில் தமிழ்நாட்டில் பேருந்துப் போக்குவரத்து எந்த அளவுக்குப் பொருளாதாரத்துடனும் வெகுமக்கள் வாழ்க்கையுடனும் இணைந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாடு முழுக்க இன்றைக்கு சுமார் 35 அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் இருந்தாலும், சிறப்பாகச் செயல்படும் போக்குவரத்துக் கழகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் என்று எந்தெந்த மாநிலங்களை வளர்ச்சியடைந்த மாநிலங்களாகச் சொல்கிறார்களோ, அந்த மாநிலங்கள் எல்லாம் பேருந்துப் போக்குவரத்திலும் சிறப்பான இடத்தில் இருப்பவை. அதேபோல, பேருந்துப் போக்குவரத்தில் மிகவும் பின்தங்கிய இடத்தில் இருக்கிற உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியிலும் பின்தங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மொத்தம் 22 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இருக்கின்றன. அதில் 12 ஆயிரம் பேருந்துகள் நகர்ப் பேருந்துகள். 10 ஆயிரம் பேருந்துகள் புறநகர்ப் பேருந்துகள். தமிழ்நாட்டில் மட்டும் தினசரி 2.10 கோடிப் பேர் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்.
தனியார் பேருந்துகளையும் எடுத்துக்கொண்டால், இந்திய ரயில்களில் ஒரு நாளில் பயணிப்போரின் மொத்த எண்ணிக்கையைத் தமிழ்நாடு பேருந்துப் போக்குவரத்து எட்டிப்பிடித்துவிடும். இவ்வளவு பேர் பயணிக்கிறார்களே, இவ்வளவு பேரும் யார் என்று நினைக்கிறீர்கள்? வெகுமக்கள். கீழ்நடுத்தர வர்க்கமும் ஏழைகளும்தான் பேருந்துப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள். குறைந்தது இருசக்கர வாகனம்கூட இல்லாதவர்கள் அல்லது இருந்தாலும் அதற்கு பெட்ரோல் போட்டுக் கட்டுப்படியாகாது என்று எண்ணுகிற சாதாரண ஏழை, எளிய மக்கள்தான் அரசுப் பேருந்துகளின் வாடிக்கையாளர்கள். அவர்களைக் கடுமையான பாதிப்பில் தள்ளியிருக்கிறது பேருந்துகள் முடக்க நடவடிக்கை. தமிழகத்தில் தினமும் 2.10 கோடிப் பேர் பேருந்தில் பயணிக்கிறார்கள் என்றால், அதில் 1.60 கோடிப் பேர் நகர்ப் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். சென்னை மாநகரில் மடடும் 3 ஆயிரம் டவுன் பஸ்களில், தினமும் அதிகபட்சமாக 40 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கடைகள், சிறு நிறுவனங்களில் வேலை பார்க்கிற பெரும்பாலானவர்கள் பேருந்துகள் மூலம் வேலைக்கு வருபவர்கள்தான். நீங்கள் தொழிலகங்களைத் திறக்கச் சொல்லிவிட்டு, பேருந்துகளை இயக்காதபோது, தொழிலகங்களையும் அது பாதிக்கிறது; தொழிலாளர்களையும் அது பாதிக்கிறது.
கிருமித் தொற்றைக் குறைப்பதற்காகத்தானே அரசு இந்நடவடிக்கை என்று சொல்கிறது?
மக்களின் உயிர் மீது உங்களுக்கு உள்ள அக்கறை அவர்களுக்கு இருக்காதா? நீங்கள் பேருந்துகளை இயக்காதபோது நடப்பது என்ன? இன்னும் நெருக்கமாக யாரோடாவது இருசக்கர வாகனத்தில் அவர்கள் பயணிக்க வேண்டும்; மேலும், கூடுதல் பணம் செலவழிக்க வேண்டும்.
ஏற்கெனவே ஊரடங்கைத் தளர்த்தி அரசுப் பேருந்துகளை இயக்க ஆணையிட்ட தமிழக அரசு அந்த முடிவைத் திரும்பப் பெறக் காரணம் என்ன?
தமிழகத்தில் ஜூன் 1 முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ‘60% பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும், ஒவ்வொரு நடை முடிந்ததும் அரசுப் பேருந்தைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், பேருந்துகளில் பயணிகள் ஏறும் முன்பு உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தல், கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றெல்லாம் அரசு சொன்னது. ஆனால், முதல் நாள் மட்டுமே இந்த நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அடுத்த நாளிலிருந்து வெறுமனே 10% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கூட்டம் அதிகமாக இருந்ததால் மற்ற பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இது தவறு என்று எங்களைப் போன்ற சங்கங்கள் சுட்டிக்காட்டியும்கூட, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கேட்கவில்லை. விளைவாக, ஊழியர்கள் தொற்றுக்கு ஆளானார்கள். அரசு பயந்துகொண்டு பேருந்துகளை நிறுத்திவிட்டது.
ஏற்கெனவே போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிலையில், கரோனாவை எதிர்கொள்ள புதிய நடைமுறைகளுடன் பேருந்துகளை எப்படி இயக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?
தமிழ்நாடு அரசு துணிச்சலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். அதுவும் எல்லாப் பேருந்துகளையும் இயக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவுக்கேனும் பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முடியும். பயணிகளுக்குக் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா; முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என்று பரிசோதித்து வண்டியில் ஏற்றினால் போதும்; மக்களுக்கும் அவர்கள் உயிர் மீது அக்கறை இருக்கிறது. நடை முடிந்ததும் கிருமிநாசினி கொண்டு பேருந்துகளைச் சுத்தப்படுத்தலாம். ஓட்டுநர் – நடத்துநர் பாதுகாப்புக்கான வசதிகளைச் செய்து தரலாம். தொற்று மிக அதிகமுள்ள மஹாராஷ்டிரம், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களிலேயே பேருந்துகள் ஓடுகின்றன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அடுத்து, பொதுப் போக்குவரத்து என்பது ஒரு சேவை. நீங்கள் இந்தப் பக்கம் நஷ்டம் என்று குறிப்பிடுவது அந்தப் பக்கம் மக்களுக்கு லாபம் என்பதை யோசிக்க வேண்டும். மேலை நாடுகளில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க அரசு ஏராளமான மானியங்களையும் நல்கைகளையும் வழங்குகின்றன.
தனியாரே பொதுப் போக்குவரத்தை இயக்கினாலும் மானியம் உண்டு. இங்கே அரசுப் பேருந்துகள் ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி நஷ்டத்தைச் சந்திக்கின்றன. எனவே, அரசு ஆண்டுதோறும் ரூ.4,000 கோடியைப் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்க வேண்டும். அது அரசுப் பேருந்தில் ஏறுகிற ஒவ்வொரு முறையும் ஒரு பயணிக்கு அரசு ரூ.4 மானியம் தருவதற்குச் சமம். இதைச் செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். இல்லை என்றால், நஷ்டக்கணக்கை ஏற்றிக்கொண்டே போய் கடைசியில் தனியாரிடம் தாரைவார்க்கிற அநியாயம்தான் நடக்கும். எல்லாவற்றுக்கும் மேல் பேருந்துப் போக்குவரத்தை முடக்குவது என்பது மக்களில் அடித்தட்டினர் மீதான தாக்குதல். நீங்கள் கார்களை, ஆட்டோக்களை, மோட்டார் சைக்கிள்களை அனுமதிக்கிறீர்கள்; பேருந்துகளை மட்டும் முடக்குகிறீர்கள் என்றால், அது பாரபட்சமான நடவடிக்கைதான். அமிதாப் பச்சன் எந்தப் பேருந்தில் பயணித்துத் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்? மக்களை நம்புங்கள், அவர்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது, அவர்கள் உயிர் மீது அக்கறை இருக்கிறது. கிருமியின் பெயரால் மக்களின் பிழைப்பை நொறுக்கிவிடாதீர்கள்.
- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in