ஒவ்வொரு வேளை சோற்றிலும் கை வைக்கும்போது மனம் சங்கடப்படுகிறது. மதுவிலக்கு கோரி தி.நகரின் ஒருமுட்டுச் சந்தில் மூலையில் ஒன்பது நாட்களுக்கு மேலாகத்தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். கோஷம் போட்ட கட்சிகள் எல்லாம் அமைதியாகிவிட்டன. ஆனாலும், உண்ணாவிரதம், காவல் துறையினரின் கைது நடவடிக்கை என்று போராட்டத் தீயை அணையவிடாமல் காக்கிறார்கள் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் இளைஞர்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே மதுவுக்கு எதிராக இவர்கள் போராடினாலும் உடலையும் மனதையும் ஒருசேர வருத்தும் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களில் அனுபவம் இல்லை இவர்களுக்கு. மூன்றாம் நாளிலேயே மூன்று பேர் மயங்கிச் சரிந்தார்கள். செந்தில் ஆறுமுகமும், வராகி சித்தரும் மட்டும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். இவர்களின் போராட்டத்துக்குப் பொது மக்களிடமிருந்து எந்தச் சலனம் இல்லை. அந்த வழியாக செல்பவர்கள் சாலையோரம் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து, உச்சு கொட்டிவிட்டு செல்வதுடன் சரி.
எதற்காக இந்த உண்ணாவிரதம்?
“தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்தாலும் அதை உச்சத்துக்குக் கொண்டுபோனது சசிபெருமாள் அய்யாவின் உயிர்த் தியாகம். திமுக தலைவர் கருணாநிதியையே மதுவிலக்கு கோரவைத்தது அந்தத் தியாகம். அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் இணைத்தது அந்தத் தியாகம். திடீரென்று இளங்கோவன் பேச்சை வைத்து மதுவிலக்குப் போராட்டங்கள் திசை திருப்பப்பட்டது. போராட்டங்களும் முடங்கிப்போயின. ஆகவேதான் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறோம். கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஏழு பேர் ஒன்றிணைந்து போயஸ் தோட்டம் நோக்கி ‘மதுக்கடைகளை மூடு’ என்ற கோஷங்களுடன் சென்றோம். எங்களைக் கைதுசெய்து நள்ளிரவு 12 மணிக்கு விடுவித்தது காவல்துறை. தொடர்ந்து விடுவிக்கப்படுவதும் போராடுவதும் கைதுசெய்யப்படுவதும் எனத் தொடர்கிறது. ஆனால், எத்தனை முறை கைதுசெய்து விடுவித்தாலும் போராட்டம் தொடரும்; மீண்டும் கைதாவோம்” என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ.
யார் இந்த இளைஞர்கள்? செந்தில் ஆறுமுகம் மென்பொருள் வல்லுநராக இருந்தவர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுவின் கொடுமைகளைக் கண்டவர் வேலையைத் துறந்துவிட்டு, முழு நேரச் சமூகச் செயல்பாட்டாளராகிவிட்டார். மருந்துக் கடை நடத்திவந்த ஜெய் கணேஷ் போராட்டக் களத்துக்கு வந்ததால் கடையை மூட வேண்டியதாயிற்று. மதுரையில் அரிசி வியாபாரத்திலிருந்த அண்ணாதுரையின் தொழில் முடங்கிக்கிடக்கிறது. பத்திரிகையாளரான சிவஇளங்கோ போராடுவதற்காக வேலையை விட்டுவிட்டார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இழப்பு. ஆனாலும், போராட்டங்கள் தொடர்கின்றன.
மதுவுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று என்ன அவசியம் வந்தது இவர்களுக்கு? நாளுக்கு நாள் மதுவால் மடிந்துகொண்டிருக்கும் மக்களுக்காகதானே போராடுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரல் செல்லரித்துக்கொண்டிருக்கும் தமிழகத்துக்காகதானே போராடுகிறார்கள்? ஆனால், அவர்களின் போராட்டம் கேட்க நாதியில்லாமல் போவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை!
யாராவது உயிரைக் கொடுத்தால்தான் உணர்வு வருமா நமக்கு?
- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in தெளிவோம்…