முகம்மது ரியாஸ்
நம் சமூகத்தில் திருநபர்களில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். தனியே அலைந்துதிரிந்து, தன் போன்றவர்களைக் கண்டடைந்து, சிறு குழுவாக உருப்பெற்றவர்கள். மக்கள் புழக்கம்தான் அவர்களுக்கான மூலதனம். ஊரடங்குச் சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள்? திருநபர் சமூகச் செயல்பாட்டாளரும், எழுத்தாளரும், திருநபர் கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கிரேஸ் பானுவிடம் பேசினேன்.
இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் திருநபர்கள் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்?
தமிழ்நாட்டில் உத்தேசமாக 5 லட்சம் திருநபர்கள் இருக்கிறார்கள். பெருநகரங்களில் குழுவாக இருக்கிறார்கள். சிறு நகரங்களிலோ நாங்கள் உதிரிகள். கொஞ்சம் பேர் நாட்டுப்புறக் கலை இயக்கங்களில் இருக்கிறார்கள். அலுவலகம் சார்ந்த வேலைக்கு மிகச் சொற்பமான அளவில் கொஞ்சம் பேர் நகர்ந்துள்ளனர். மீதமுள்ள பெரும்பான்மையினரைத்தான் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சாலைகளில் நீங்கள் பார்க்கிறீர்கள். 80 நாட்களாக அனைத்தும் முடங்கியதால் எங்கள் மக்களின் வருமானத்துக்கான வழி முற்றிலும் தடைபட்டுவிட்டது. உணவு கிடைக்கவில்லை.
வாடகை செலுத்த முடியாததால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். திருநபர்களில் சிலருக்கு எச்ஐவி தொற்று இருக்கிறது. அதற்கான மருந்து வாங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்கள். ஏற்கெனவே உடல்ரீதியாக மிக மோசமான நிலையில் இருக்கும் திருநபர்கள், தற்போதைய சூழலில் கரோனா தொற்றுக்கு எளிய இலக்குகளாக உள்ளார்கள். இங்கே இருக்கும் ஒவ்வொரு திருநபரும் நாளை இறந்துவிடுவோம் என்று நினைக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.
கரோனாவுக்கு முன்பும் பின்புமாக திருநபர்களின் நிலை என்ன?
பிச்சையெடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.150 ஈட்ட முடியும். பாலியல் தொழில் மூலம் ரூ.400 வரை ஈட்ட முடியும். அதிலும் கொஞ்சத்தை போலீஸ்காரர்கள் வாங்கிவிடுவார்கள். அவர்களுக்கு இலவசமாகப் பாலியல் சேவை வேறு வழங்க வேண்டும். எனினும், எங்கள் மக்களுக்கு அப்போது மூன்று வேளை உணவு கிடைத்தது. தற்போதைய நிலை அப்படி இல்லை.
கரோனா காலகட்டத்தில் கூடுதல் புறக்கணிப்பை எதிர்கொள்கிறீர்களா?
நிச்சயமாக. ‘திருநபர்கள் கரோனாவைப் பரப்புகிறார்கள், அவர்கள் வந்தால் விரட்டிவிடுங்கள்’ என்று ஹைதராபாதில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் இந்த நெருக்கடி காலகட்டத்தில்தான் பொதுச் சமூகத்துக்குத் தெரியவருகிறது. ஆனால், அந்தத் தொழிலாளர்களும் பொதுச் சமூகத்தின் ஓர் அங்கம்தான். நாங்கள் அப்படி இல்லையே. சமூகத்தால் விலக்கப்பட்டவர்கள். அதனால், இந்தப் பொதுச் சமூகம் எங்கள் நிலை குறித்து விவாதிக்காது.
இந்த 80 நாட்களை எப்படிச் சமாளித்தீர்கள்?
எங்கள் சங்கங்களின் வழியே பிரான்ஸ், இத்தாலி, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள திருநபர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அங்கு கரோனா வேகம் எடுத்து ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டபோதே நாங்கள் சற்று சுதாரித்துவிட்டோம். இந்தியாவில் தேசிய அளவில் ஒன்றிணைந்து இணையம் வழியாகக் கொஞ்சம் நிதி திரட்டினோம். அவை ஆரம்ப நாட்களில் உணவுத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவின. சில தன்னார்வல அமைப்புகள், சில தனிமனிதர்கள் எங்களுக்கு உணவளித்தார்கள். முறைப்படி, அரசு முன்னின்று எங்களுக்கான உதவிகளை வழங்கியிருக்க வேண்டும்.
நாட்டிலே முன் மாதிரியாக, தமிழகத்தில்தான் திருநங்கைகள் நலவாரியம் உருவாக்கப்பட்டது. அது இந்தக் காலகட்டத்தில் உதவவில்லையா?
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் 5 கிலோ அரசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் கொடுத்தார்கள். இரண்டு மாதங்களுக்கு ரூ.1,000 கொடுத்தார்கள். ஆனால், இவை யாவும் திருநபர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கானவை. யதார்த்தத்தில் இங்கே திருநபர்கள் அடையாளமற்றவர்கள். அனைவரும் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டவர்கள். பெரும்பாலானோரிடம் இந்தியக் குடிநபர் என்று நிரூபிப்பதற்கான எந்த ஆவணங்களும் கிடையாது. இந்நிலையில், ஆவணத்தைக் காண்பித்தால்தான் உதவிகள் வழங்கப்படும் என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயல். தமிழ்நாடு பரவாயில்லை. பிற மாநிலங்களில் நிலைமை ரொம்ப மோசம்.
தேசிய அளவில் திருநபர் உரிமை சார்ந்து மத்திய, மாநில அரசுகள் எத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றன?
தமிழ்நாட்டில் திருநங்கைகள் நலவாரியம் சமூக நல அமைச்சகத்தின் கீழ் உள்ளது. அதற்கான திட்டங்களை வகுப்பவர்கள் பிற துறைகளில் இருக்கும் உயர் அதிகாரிகள். எனில், எங்களை யார் அங்கு பிரதிநிதித்துவப்படுத்துவது? 11 திருநபர்கள் அங்கு உறுப்பினர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அதேபோல், எங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் அரசு கவனம் செலுத்துவதில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை.
ஒரு சமூகமாகத் திருநபர்களிடையே ஏதேனும் பிரச்சினைகள் நிலவுகின்றனவா?
பொதுச் சமூகத்தில் எந்த அளவுக்குச் சாதிய வன்மம் நிலவுகிறதோ அதே அளவில் எங்கள் சமூகத்துக்குள்ளும் சாதி, மத ஏற்றத்தாழ்வுகள் உண்டு. பிராமணத் திருநபர், தலித் திருநபர் இங்கும் உண்டு. தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் சாதி பார்க்கப்படுகிறது. இது தவிர, நிறப் பாகுபாடும் உண்டு. உங்களுக்குத் தோல் கொஞ்சம் மினுக்கமாக இருந்தால் நீங்கள் ‘ஹை கிளாஸ்’ திருநபர்.
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in