அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர்கள் முதல் முறை அல்லது இரண்டாம் முறை ஆட்சியில் இருந்துவிட்டுப் பிறகு அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஒபாமா அப்படி இல்லை. அதிபர் பதவியிலிருந்து அவர் ஓய்வுபெற்று மூன்றரை ஆண்டுகள் ஆனாலும் அவர் இன்னும் தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறார். ஒபாமாகேர், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் என்று பலவற்றிலும் ஒபாமாவுக்கு எதிர் வேலைகளை ட்ரம்ப் செய்துவருகிறார்.
ஒபாமா குறித்து அவ்வப்போது ட்ரம்ப் ஏதாவது கொளுத்திப்போட்டுவிடுவதால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய வேலையும் ஒபாமாவுக்குச் சேர்ந்துவிடுகிறது. கூடவே, கரோனா நெருக்கடியை ட்ரம்ப் கையாளும் விதத்துக்காக ஒபாமா அவரைச் சாடிவருகிறார். அது மட்டுமல்ல; அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள், வாஷிங்டனின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒபாமாவின் அலுவலகத்துக்கு வந்து அவரிடம் ஆலோசனைகளைப் பெற்றுச்செல்கிறார்கள்.