கொள்ளைநோய்கள் வெறுமனே மருத்துவ நிகழ்வுகளோ நெருக்கடிகளோ மட்டுமல்ல. அவை சமூகங்கள், நாடுகள் ஆகியவற்றின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்திருப்பவை. பல கொள்ளைநோய்களுக்குப் பின்விளைவாக ஏற்பட்ட மனநல பாதிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.
கோவிட்-19 போன்ற கொள்ளைநோய்களின்போது ஒருவர் எப்படித் தாக்குப் பிடிக்கிறார் என்பது மூன்று காரணிகளைச் சார்ந்தது. தனிநபர் ரீதியிலான, சமூக ரீதியிலான, மருத்துவக் கட்டமைப்பு ரீதியிலான காரணிகள் அவை.
இந்தக் கொள்ளைநோயின் ஆரம்பக் கட்டத்தில் சீனாவில் மருத்துவர் வாங் மற்றும் அவரது சகாக்களும் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதன்படி 53.8% பேர் கரோனாவினால் ஏற்பட்ட உளவியல் தாக்கம் மிதம் என்ற அளவிலிருந்து தீவிரம் என்ற அளவு வரை இருந்தது என்றிருக்கிறார்கள். 16.5% மிகக் கடுமையான பதற்றம் இருந்ததாகக் கூறியிருக்கிறார்கள்.
மனநலம் சார்ந்த பிரச்சினைகள் கீழ்க்கண்ட காரணங்கள் தொடர்பானவையாகும்: எந்த அளவுக்குக் கொள்ளைநோய் பரவியிருக்கிறது, எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, எந்த அளவுக்கு அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது என்பவைதான் அந்தக் காரணிகள்.
தொற்றின் காரணமாக ஏற்படும் மரணங்களின் விகிதம், நல்ல சிகிச்சைகளும் தடுப்பு மருந்துகளும் கிடைப்பது ஆகியவற்றுக்கும் மனநலப் பிரச்சினைகளில் முக்கியப் பங்கு இருக்கிறது.
கொள்ளைநோய் தொடர்பான மன அழுத்தத்தின் அறிகுறிகள்:
1. ஒருவர் தன்னுடைய, தன் குடும்பம், உறவினர், நண்பர்கள் போன்றோருடைய உடல்நலத்தைப் பற்றி அதீதமாகக் கவலைப்படுதல்.
2. தூக்கம் வராமல் சிரமப்படுதல், பசி இழப்பு, களைப்பு.
3. தற்கொலை எண்ணம் உள்ளிட்ட மனச்சோர்வின் அறிகுறிகள்.
4. வீட்டில் தனிமைப்பட்டிருக்கும்போது மது உள்ளிட்ட போதைப்பொருட்களின் மீதான நாட்டம் அதிகரிப்பு.
5. நிராதரவான நிலையின் காரணமாகவும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதாலும் எரிச்சலும் கோபமும் ஏற்படுதல்.
6. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்றவை மோசமாதல்.
7. கிருமிநாசினிகள், முக உறைகள் மற்றும் அடிப்படையான சில மருந்துகள் போன்றவற்றை வாங்கிச் சேமித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே சில சமயம் பதற்றத்தை ஏற்படுத்தும்.
8. புதியதும், அதே நேரத்தில் என்னவென்று கணிக்க முடியாததுமான நோய் நம்மைத் தாக்குமோ என்ற எண்ணம் எதிர்மறையான சிந்தனைகளையும் நடத்தையையும் அதிகரிக்கும்.
கீழ்க்கண்டோரெல்லாம் உளவியல் ரீதியில் மிகவும் பாதிப்புக்குள்ளாகலாம்
1. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் முதியோர்கள் எளிதில் கரோனா தொற்றுக்குள்ளாகக் கூடியவர்கள். இவர்கள் உளவியல் ரீதியில் மிகவும் பாதிப்புக்குள்ளாகலாம்.
2. குழந்தைகள், இளம் பருவத்தினர். ஏனெனில் அவர்களுடைய வழக்கமான அன்றாடம் பாதிப்படைந்திருக்கிறது. மேலும், தங்கள் பெற்றோரின் மனப்பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் வாழ்க்கை முறையில் மாற்றத்தையும் அவர்கள் காண்பதால் அவர்கள் உளவியல் ரீதியில் மிகுந்த பாதிப்படையலாம்.
3. மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள். ஏனெனில், அவர்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கூடவே, அதிக வேலைப் பளு, போதுமான வசதிகள் இன்மை போன்றவற்றாலும் மற்றவர்களுடைய மன அழுத்தத்தை எதிர்கொள்வதாலும் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்புகள் ஏற்படலாம்.
4. ஏற்கெனவே மனநல பாதிப்புகளைக் கொண்டவர்களுக்குக் கொள்ளைநோயின்போது புதிய மனநலப் பாதிப்புகள் ஏற்படலாம். அல்லது அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள அறிகுறிகள் மேலும் தீவிரமடையலாம்.
5. தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள். தங்கள் நிலை குறித்து அவர்களுக்கு நிச்சயமின்மை இருக்கும். குடும்பத்தைக் குறித்தும் நண்பர்களைக் குறித்தும் அவர்களுக்கு அச்சம் இருக்கும்.
தங்கள் தனிமைப்படுத்தல் குறித்து அவர்களுக்குக் குற்றவுணர்வும் மனச்சோர்வும் இருக்கும். இதற்கு முந்தைய சார்ஸ் தொற்றுநோய்ப் பரவலின்போது தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 29% பேருக்கு ‘அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்த’த்திற்கான (Post-traumatic stress disorder- பி.டி.எஸ்.டி.) அறிகுறிகள் இருந்திருக்கின்றன. 31% பேருக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகள் இருந்திருக்கின்றன.
ஒருவரோ, ஒரு குடும்பமோ அவமதிப்புக்கும் ஒதுக்குதலுக்கும் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகும்போது மனநலம் பாதிக்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குச் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருத்தலின் மனநல விளைவுகள் விரிவாக ஆய்வுக்கு உள்ளாக்கப்படவில்லை. ஒன்றுக்கொன்று முரண்படும் இரண்டு கருதுகோள்களை டாக்டர். லுன்ஸ்டாட் பரிசீலிக்கிறார். ஒன்று, ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டோரின் நிலை மோசமாகலாம்; அப்படியாக மேலும் பலர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக்கொள்ளலாம். இரண்டு, அதிக விழிப்புணர்வு காரணமாக மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கலாம், மற்றவர்களுடன் அதிக அளவில் தொடர்பு கொள்ளலாம்.
நமக்கு நாமே உதவி
1. நோய்த் தொற்றைப் பற்றிய சரியான தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்
2. அடிப்படையான அளவில் சுகாதாரத்தைப் பராமரியுங்கள். அதற்காக இடைவிடாமல் கைகழுவிக்கொண்டெல்லாம் இருக்க வேண்டாம். அதுவும் ஒருவகை மனநோயை அதிகரித்துவிடும்.
3. பல்வேறு தரப்புகளிடமிருந்து, குறிப்பாக சமூக ஊடகங்களிடமிருந்து அதிக அளவில் செய்திகளைப் படித்தோ, பார்த்தோ ரொம்பவும் திணித்துக்கொள்ளாதீர்கள். இதனால், களைப்பு, பதற்றம், மன அழுத்தம் போன்ற விளைவுகள் ஏற்படக் கூடும். இந்த விஷயத்தைப் பற்றித் தொடர்ந்து உரையாடலில் ஈடுபடாதீர்கள்.
4. யோகா, இசை, நடை, புத்தக வாசிப்பு, குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல் என்று பல வகைகளிலும் களைப்பாறுங்கள்.
5. மற்றவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் அதே நேரத்தில் மருத்துவத் துறையினர் தங்களின் உடல், மன நலத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டாம்.
6. உடல்ரீதியில் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருத்தல் நல்லது என்றாலும், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடமிருந்து ஒரேயடியாக ஒதுங்கியிருத்தல் நல்லது இல்லை. தொலைத்தொடர்பு வசதிகளைக் கொண்டு அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். உணர்வுரீதியாகத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் நல்லது இல்லை.
7. உங்களால் சமாளிக்க முடியவில்லை என்றால் மற்றவர்களின் உதவியை நாடுவதற்குத் தயங்க வேண்டாம்.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் ஆதரவு தேவை. குழந்தைகளுடன் பேசுங்கள். நிலைமையை அவர்களிடம் எடுத்துக் கூறும்போது தீவிரத்தைக் குறைத்துக் கூற வேண்டாம். ஏனெனில், அவர்களுக்கு வேறு வகைகளிலிருந்தும் தகவல்கள் எப்படியாவது வந்துசேரும். அவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குத் தேவையான எல்லா ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது என்றும் உறுதியளியுங்கள்.
அவர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும்போது உங்கள் பதற்றத்தை அவர்களுக்கும் தொற்றச் செய்யாதீர்கள். அவர்களுக்குத் தேவையில்லாத தகவல்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்துங்கள். ஏனெனில் அந்தத் தகவல்களால அவர்கள் மிரண்டுபோகலாம், அல்லது அந்தத் தகவல்களால் அவர்களுக்குத் தவறான புரிதல் ஏற்படலாம். வீட்டுக்குள்ளே செய்யக்கூடிய விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளை அவர்களுடன் சேர்ந்து திட்டமிடலாம்.
கோவிட்-19 போன்ற பிரச்சினைகள் மனிதர்களிடமிருந்து மோசமானவற்றையோ சிறப்பானவற்றையோ வெளிக்கொண்டுவரலாம் என்று ‘உலக சுகாதார நிறுவன’த்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். இந்த நிலை நம்மிடமுள்ள சிறப்பான பண்புகளை வெளிக்கொண்டுவரும் என்று நம்புவோம்.
-கட்டுரையாளர்கள் மனநல மருத்துவர்கள், தி இந்து, தமிழில்: ஆசை