சிறப்புக் கட்டுரைகள்

என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்?

க.திருநாவுக்கரசு

இதற்கு முன்னர் இரண்டு முறை (1977 மற்றும் 1989-ல்) நடந்ததைப் போல, ஊழல் மற்றும் காங்கிரஸுக்கு எதிரான மக்கள் மனநிலையின் பலன் பெருமளவுக்கு பா.ஜ.க-வுக்கு சாதகமாகவே போயிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, சுமார் 15 முதல் 20 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பஞ்சாபில் நான்கு இடங்களைப் மட்டுமே பெற்றது.

பஞ்சாப் ஆறுதல்; ஹரியானா ஏமாற்றம்

பஞ்சாபில் அகாலி தளமும், காங்கிரஸும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்த நிலையில் இவற் றுக்கு மாற்றாக வந்த ஆ.ஆ.க. மக்களைப் பெருமளவு கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை. அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் ஆ.ஆ.க. இங்கு ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு வளர வாய்ப்புகள் இருக்கின்றன. தொடக்கத்தில் பஞ்சாபில் தங் களுக்கு இத்தகைய வாய்ப்பு இருப் பதை உணர்ந்திராத ஆ.ஆ.க. இங்கு அதிகத் தீவிரம் காட்டவில்லை.

இல்லாவிடில் வெற்றி வாய்ப்பு கள் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். டெல்லிக்கு அடுத்த படியாக ஆ.ஆ.க. நம்பியிருந்தது ஹரியானா வைத்தான். சந்தர்ப்பவாதப் போக்குடன் பிற்போக்கான காப் பஞ்சாயத்துகளுக்குக்கூட, தங்களுடன் இணைந்து பணியாற்றும் படி அழைப்பு விடுத்திருந்தும் தோல்வி தான் மிச்சியது.

டெல்லி போச்சு

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆ.ஆ.க-வுக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் நாடாளு மன்றத் தேர்தலில் தங்களது வாக்கு மோடிக்கே என்று தெரிவித்திருந்தனர். அத்தகைய வர்களின் சதவீதம் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்து வந்ததைப் பார்க்க முடிந்தது. காங்கிரஸுக்கு எதிராக மகாராஷ் டிரத்தில் வீசியிருக்கும் சூறாவளி முழுமையாகவே பா.ஜ.க. - சிவசேனா கூட்டணிக்கு சாதகமாகப் போய்விட்டதையே மீரா சன்யால், மேதா பட்கரின் தோல்வி காட்டுகிறது.

எதிர்பார்ப்பும் நடந்ததும்

டெல்லியில் ஆ.ஆ.க. பெரும் வெற்றி பெற்றபோது அகில இந்திய அளவில் அது சுமார் 40 முதல் 50 இடங்கள் வரை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸின் ஊழலை, ஆ.ஆ.க. கடுமையாகத் தாக்கியபோது பெரும் ஆதரவை வழங்கிய ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள், ஆ.ஆ.க-வின் எதிர்ப்பு பா.ஜ.க., மோடி, அம்பானி என்று விரிவடைந்தபோது ஆ.ஆ.க-வின் சிறு தவறுகளைக்கூட ஊதிப் பெரிதாக்கிக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆ.ஆ.க. பெற்ற வெற்றியில் தொலைக்காட்சி ஊடகங் களுக்கு முக்கியப் பங்கு இருந்ததைப் போலவே இப்போது ஆ.ஆ.க-வின் செல்வாக்கு சரிந்திருப் பதிலும் அவற்றுக்குப் பங்கிருக்கிறது.

செய்ய வேண்டியது

ஆகவே, அமைப்பு ரீதியாகத் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்வதும் வலிமைப்படுத்திக் கொள்வதும் அக்கட்சி உடனடியாக செய்ய வேண்டிய வேலைகள். பிரபலமானவர்களைக் கொண்டே கட்சியை வளர்த்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அத்துடன் பிற கட்சிகளைப் போல சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுப்பதை (காப் பஞ்சாயத்து, முஸ்லிம்கள் கொஞ்சம் வகுப்புவாதத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற ஷாஷியா இல்மியின் பேச்சு) ஆ.ஆ.க. முற்றிலுமாகக் கைவிடுவது மிகவும் அவசியம். இந்தக் கட்சி மிகவும் வித்தியாசமான, நேர்மையான கட்சி என்று பலரும் இன்னமும் நம்புகின்றனர். அதுவே அதன் பலம். அதை ஆ.ஆ.க. தக்கவைத்துகொள்ள வேண்டும்.

- க. திருநாவுக்கரசு, சமூக-இலக்கிய விமர்சகர், kthiru1968@gmail.com

SCROLL FOR NEXT