சிறப்புக் கட்டுரைகள்

விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மருத்துவர்களின் கடமைதான்!- அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா பேட்டி

கே.கே.மகேஷ்

கரோனா பற்றிய அறிவை ஜனரஞ்சகப்படுத்துவதிலும், தவறான தகவல்களை உடனுக்குடன் மறுத்து எழுதுவதிலும் முக்கியப் பங்காற்றிவருகிறார் அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. ஜனவரியிலிருந்தே கரோனா குறித்து மக்களின் மொழியில் பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறார். இதுபோன்ற நேரத்தில் உண்மையான தகவல்களை அறிந்துகொள்வதன் அவசியத்தை அவருடைய பதிவுகள் சொல்கின்றன. அவருடன் பேசினேன்…

ஸ்டெதஸ்கோப்புக்கு இணையாகப் பேனாவைப் பயன்படுத்துகிற மருத்துவர் நீங்கள். எப்படி எழுத்துக்குள் வந்தீர்கள்?

அரிதான நோய்க்குறியுள்ள நோயாளிகள் பற்றி ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்தேன். 2012-ல் அரசுப் பணியும், தினமும் நூற்றுக்கணக்கான பாமர மக்களைச் சந்திக்கிற வாய்ப்பும் கிடைத்தது. கொள்ளைநோய்கள், தொற்றா நோய்கள் குறித்து எழுதினேன். அப்படித்தான் எழுத வந்தது.

கரோனா குறித்து எப்போதிலிருந்து எழுதிவருகிறீர்கள்?

கரோனாவின் பெயரைக் கேள்விப்பட்டதுமே, அதைப் பற்றி வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். என்றாலும், சீனாவில் ஒன்றரைக் கோடி மக்கள்தொகை கொண்ட நகரத்தைத் திடீரென்று அடைத்ததும் இது பெரும் பிரச்சினைக்குரிய நோய் என்று தோன்றியது. அன்றைய தினமே (ஜனவரி 23) கரோனா பற்றி முதல் பதிவு எழுதினேன். சீனாவில் என்ன நடக்கிறது? அறிவியல் ஆராய்ச்சிகளும், உலக சுகாதார நிறுவனமும் என்ன சொல்கின்றன? அந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மூடநம்பிக்கைகளை ஒழித்தல் என்று தொடர்ந்து எழுதினேன். இந்த 3 மாதங்களில் 300 பதிவுகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன்.

உங்கள் எழுத்தில் சாதாரண மக்களுக்கும் புரிய வேண்டும் என்கிற மெனக்கெடல் தெரிகிறது. நேரம் எப்படிக் கிடைக்கிறது?

மருத்துவக் கட்டுரைகளையும் ஆய்வுகளையும் வாசிக்கிறபோது நான் கரோனாவைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்கிறேன் இல்லையா? அதற்காகத்தான் படிக்கிறேன். கூடுதலாக, 15 நிமிடம் செலவழித்து ஃபேஸ்புக்கில் சுருக்கமாகச் சொல்கிறேன். அவ்வளவுதான். எப்போதும் உண்மைக்கு நெருக்கத்தில் இருக்க வேண்டும், படிக்கிறவர்களுக்கு அதில் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல; நோயைப் பற்றி மக்களுக்கு அவர்கள் மொழியில் சொல்வதும் மருத்துவர்களின் கடமை என்றே நம்புகிறேன்

இன்றைய தேதியில் நோய்த்தொற்றின் வேகம், நாம் அதை எதிர்கொள்கிற விதம் பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழக சுகாதாரத் துறை வலிமையான கட்டமைப்பை உடையது. தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் 3 நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது. இப்போது அந்த வேகம் குறைந்து, 7 நாட்களாகி இருப்பது ஆரோக்கியமானது. இன்றுவரையில் சமூகத்தொற்று எனும் பேரபாயத்துக்குள் நாம் போகவில்லை. கடந்த இரண்டு மாதமாக அதிகம் தொற்று ஏற்படாத சிங்கப்பூரில் இப்போது திடீரென்று ஒரே நாளில் 700, 800 என்று வருகின்றன. எனவே, இன்னும் 3 மாதங்களுக்கு நாம் எச்சரிக்கை உணர்வோடுதான் இருக்க வேண்டும். கை கழுவுவதையும், முகக்கவசம் அணிவதையும் நாம் ஒரு அன்றாடச் செயலாகவே மாற்றிக்கொள்ளலாம். அதேநேரத்தில், கரோனா மனித குலத்தையே அழித்துவிடும் என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. போலியோ, பெரியம்மைபோல கரோனாவும் ஒழிக்கப்படும் வரையில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தாலே போதும்.

மருத்துவர்களின் உடல் அடக்கத்துக்குக் கிளம்புகிற எதிர்ப்பு பற்றி?

மனதை ரொம்பவே பாதிக்கிறது. கடந்த ஞாயிறன்று ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு முடியவில்லை என்று வீட்டுக்கே வந்துவிட்டார். லுங்கி, பனியனுடன் இருந்தேன். அவருக்கோ குழந்தைக்கோ கரோனா தொற்றிருக்க வாய்ப்புள்ளது என்பதற்காக விரட்ட முடியுமா? மேலும், இறந்தவர் இருமவோ தும்மவோ மூச்சுவிடவோ போவதில்லை. இறந்த உடலில் வைரஸ் பெருகுவதும் நின்றுவிடுகிறது. உடலையும் பாதுகாப்பாக பேக் செய்துதான் அனுப்புகிறோம். 8 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட உடலிலிருந்து வைரஸ் வெளியே பரவுவதற்கோ 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரிக்கிற உடலிலிருந்து வைரஸ் தப்பிப்பதற்கோ வாய்ப்பே கிடையாது. எனவே, இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் தொடரக் கூடாது.

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

SCROLL FOR NEXT