புதிய நாயகர்கள்
நெருக்கடியான காலகட்டத்தில்தான் அறியாத இடத்திலிருந்து புதிய நாயகர்கள் முளைப்பார்கள். தற்போதைய கரோனா காலகட்டத்தில் அப்படியான இடம் நோக்கி நகர்ந்திருப்பவர்கள் தொற்றுநோயியலாளர்களும் வைரஸியலாளர்களும். உண்மையைக் கடந்த காலகட்டத்தில் வாழும் நமக்கு கரோனா குறித்த தகவல்களில் எது உண்மை, எது பொய் என்று புரிய வைப்பவர்கள் இவர்கள்தான். என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று இவர்கள்தான் அரசுகளை வழிநடத்துகிறார்கள். அமெரிக்காவில் டாக்டர் ஆந்தனி ஃபாச்சி, இத்தாலியில் டாக்டர் மாஸிமோ காலி, பேராசிரியர் ஸோடிரியோஸ் ஸியோட்ராஸ், ஜெர்மனியில் டாக்டர் கிறிஸ்டியன் ட்ரோஸ்டன், ஸ்பெயினில் டாக்டர் ஃபெர்னாண்டோ சிமோன், பிரிட்டனில் நீல் ஃபெர்குஸன்… இவர்கள் அடிக்கடி ஊடகங்களில் தோன்றி உண்மை நிலவரங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் தருவதால் மக்கள் இப்போது இவர்களைத்தான் கொண்டாடுகிறார்கள். இதில் பரிதாபம் என்னவென்றால் ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ சிமோன், பிரிட்டனின் நீல் ஃபெர்குஸன் இருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
சிறைகளுக்குள் கரோனா
பெரும்பாலான நாடுகளின் சிறைகள் மிகவும் நெரிசலானவை. கரோனா போன்ற தொற்றுநோய்கள் சிறைச்சாலைகளில் புகுந்தால் அங்குள்ள கைதிகளை எளிதில் சூறையாடிவிடும். இதை உணர்ந்த ஜெர்மனி சாதாரண குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவித்தது. தொடர்ந்து பல நாடுகள் இதே முடிவை எடுத்தன. அது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதை அத்தகைய முடிவை எடுக்காத அமெரிக்க அனுபவம் நிரூபிக்கிறது. நியூயார்க்கில் உள்ள ரைக்கர்ஸ் ஐலேண்டு சிறையில் மட்டும் 200 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் சில மாநிலங்கள் குறிப்பிட்ட அளவில் கைதிகளை விடுவிக்கும் முடிவை எடுத்தாலும், பல மாநிலங்கள் இன்னும் மௌனம் காக்கின்றன. ஒன்றிய அரசு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும்!
சோதனைகளை விரிவுபடுத்த கேரளப் பாதை
பரவலான சோதனையின் வழியாகவே கரோனாவைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்பது மிக முக்கியமான உத்தியாகச் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், மக்கள்தொகை மிக அதிகம் கொண்ட நம் நாட்டில் அதற்கான செலவும் நேரமும் பெரும் சவாலாக இருந்துவந்தது. இப்போது நமக்கு கேரளம் வழிகாட்டுகிறது. மிகக் குறைந்த செலவில், பெருந்திரளான மக்களிடம் சோதனை நடத்துவதற்கான வழிமுறையை கேரளம் கண்டறிந்திருக்கிறது. ஃபோன்பூத் போன்ற சிறிய அமைப்பு. அதற்குள் மாதிரிகளைச் சேகரிப்பவர் இருக்கிறார். அவருக்கும் மாதிரிகளைத் தருபவருக்குமான தொடர்பு தடுக்கப்பட்டிருக்கிறது. கூண்டுக்கு வெளியே நீண்டிருக்கும் கையுறை வழியாகவே மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. அதற்காக முதலில் கையுறையிலும் அதைச் சுற்றியிருக்கும் இடத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. ஒருவரிடம் மாதிரிகளைச் சேகரித்த பிறகு மீண்டும் கிருமிநாசினியால் அந்த இடம் சுத்தம்செய்யப்படுகிறது. பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியாமலேயே பாதுகாப்பான முறையில் மாதிரிகளைச் சேகரித்துவிட முடியும் என்பது இதன் குறிப்பிடத்தக்க அம்சம். இதற்குத் தனியே ஆய்வுக்கூடம் போன்ற கட்டமைப்பு எதுவும் தேவையில்லை என்பது இன்னொரு பலம். தமிழகமும் இப்போது இதைத் தொடங்கியிருப்பது நல்ல விஷயம்; மாநிலமெங்கும் இதை விரிவுபடுத்த வேண்டும்.