ரூபாய் நோட்டுகளால் கரோனா பரவுமா?
இந்தியாவில் 10,875 கோடி ரூபாய் நோட்டுகளும் 12,000 கோடி நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன. கரோனா இதன் வழி பரவுமா? இந்தக் கேள்வி பலருக்கும் உள்ளது. ரூபாய் நோட்டுகள் வழி கரோனா பரவும் என்று இதுவரையிலான எந்த வகை நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவும் சொல்லவில்லை; ஆகையால், உலக சுகாதார நிறுவனமும் இதுகுறித்து எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. ஆனால், வெவ்வேறு காலகட்டங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் வேறு சில கிருமிகள் ரூபாய் நோட்டுகளில் இருப்பதைக் கடந்த காலங்களில் நிரூபித்திருக்கின்றன. அப்படியென்றால் ரூபாய் நோட்டுகளை எப்படி அணுகுவது? அச்சமே வேண்டாம். ரூபாய் நோட்டுகளைக் கையாண்ட பிறகு, ஒருமுறை சோப்பு போட்டு கை கழுவி விடுங்கள். இது உங்கள் அச்சத்திலிருந்து உங்களை விடுவித்துவிடும்.
மூன்று மாதங்களுக்கு ஜனநெரிசல் தவிர்ப்பு தேவை
இந்தியாவில் தனிமனித இடைவெளிக்கான இப்போதைய நடவடிக்கைகள் மூன்று மாதங்களேனும் நீடிக்க வேண்டும் என்கிறது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு இப்போது 21 நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்திருக்கிறது. இதோடு, அடுத்து ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 28 நாட்கள், மீண்டும் ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு 16 நாட்கள், பிறகு மற்றொரு ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு 49 நாட்கள் இதே போன்ற ஜனநெருக்கத் தவிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிறது இந்த ஆய்வு. இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆர்) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த ஆலோசனையை அனுப்பியிருக்கிறது. இப்படிச் செய்தாலும்கூட கிருமிகளை முற்றாக ஒழித்துவிட முடியாது; அதேசமயம், நோய் பரவுவதைத் தடுக்கவும் உயிரிழப்புகளைக் குறைக்கவும் முடியும். அதற்குள் சுகாதாரத் துறை தேவைப்படும் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுவிடும்; தடுப்பு மருந்துகள் வந்துவிடலாம்; எப்படியும் வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்கிறார்கள்.மூன்று மாதங்களுக்கு ஜனநெரிசல்
தவிர்ப்பு தேவை
புத்துயிர்ப்பு பெறுமா தொலைத்தொடர்பு நிறுவனங்கள்?
அரசுக்குத் தர வேண்டிய கட்டண நிலுவை, உரிமக் கட்டணம் ஆகியவற்றாலும் கடுமையான வணிகப் போட்டியாலும் திணறிவந்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இப்போது ஊரடங்கு நடவடிக்கையால் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஊரடங்கு அறிவித்த நாளிலேயே எல்லாத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய தளங்களையும் தகவல்தொடர்பு மையங்களையும் வலுப்படுத்தின. ஆனாலும், மக்கள் வீடுகளிலேயே உள்ள இந்நாட்களில் நிறைவான சேவையை அவற்றால் தர முடியவில்லை. சிறுநகரங்கள், கிராமங்களில் இணைய சேவை மிக மோசம். இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் எத்தகைய வீச்சுக்குத் தயாராக வேண்டும் என்பதை இந்நாட்கள் சுட்டுகின்றன. அரசும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இது தொடர்பில் கலந்து பேச வேண்டும்.