மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்
அமெரிக்கத் தலைவர் ட்ரம்ப் உலகத் தலைவராக இல்லாமல் உள்நாட்டுத் தலைவராகச் சுருங்கிவிட்டார். எனவே, தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரே தலைவர் ஜெர்மனியின் மெர்க்கெல்தான் என்று ஐரோப்பா நினைக்கிறது. ஏற்கெனவே சரிந்துவந்த பொருளாதாரம் இப்போது முற்றாகப் படுத்துவிட்டது. 1953-ல் ஜெர்மனி கடன் சுமையால் தத்தளித்தபோது அதைப் பிற ஐரோப்பிய நாடுகள் ரத்துசெய்ததையும், ஜெர்மனி ஒன்றுபட உதவியதையும் நினைவுபடுத்தியுள்ளார்கள் பிற நாடுகளின் தலைவர்கள். கூடவே, தங்களுக்குக் கொடுத்த கடன்களை ஜெர்மனி ரத்துசெய்துவிட்டு புதிய கடனைத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தனக்கு சிகிச்சை தரும் டாக்டருக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தெரியவந்ததால் தானும் தனித்திருக்க வேண்டிய நிலைக்கு மெர்க்கெல் ஆளானது ஐரோப்பியத் தலைவர்களை வெகுவாகவே கவலையடையச் செய்திருக்கிறது. எனினும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு முடிந்த உதவிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் மெர்க்கெல்.
வனங்களை எப்படிக் காக்கிறார்கள்?
கரோனா காரணமாக நாடே முடங்கிவிட்ட நிலையில் காடுகளுக்கு என்ன காவல் என்று பலரும் நினைக்கலாம். இப்போதுதான் காவல் அவசியமாகிறது. வேட்டையாடிகள், விலங்கு வியாபாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள், வன வளங்களைத் திருட நினைப்போர், காடுகளில் பொழுதுபோக்க நினைப்போர் ஆகியோரைத் தடுப்பது கூடுதல் பொறுப்பாகிறது. இந்திய வனத் துறையில் முழு நேரப் பணியில் உள்ளவர்களுடன் அன்றாடக் கூலிக்கு வேலைக்கு வைத்துக்கொள்ளப்படுகிறவர்களும் உண்டு. சமூக இடைவெளி காரணமாக அவர்களில் பலர் வேலைக்கு வர மாட்டார்கள். எஞ்சிய வன ஊழியர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை அவரவர் இடங்களுக்கே சென்று வழங்குவது சவாலான வேலை. செயற்கைக்கோள்கள், ஆங்காங்கே காடுகளில் பொருத்தப்படும் கேமராக்கள், ஊழியர்களுக்குத் தரப்படும் தகவல் தொடர்புச் சாதனங்களின் உதவியுடன்தான் கண்காணிக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் சுமார் 21.67% காடுகள். இதில் அரிய விலங்குகளுக்குக் காப்புக்காடுகள் உண்டு. நகரங்களின் எந்த வசதிகளும் இல்லாத, பெரும் சவாலான சூழலிலேயே வனத் துறையினர் காடுகளைக் காவல்காக்கின்றனர்.
ஆப்பிரிக்காவின் நடமாடும் பரிசோதனை நிலையங்கள்
கரோனாவால் அமெரிக்காவே திண்டாடும்போது ஆப்பிரிக்கா எப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பானது. கடுமையாகப் போராடுகிறது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ‘தொற்றுநோய்க்கு அதிகம் பேர் பலியாகிவிடக் கூடாது’ என்ற அக்கறையோடு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஏனைய ஆப்பிரிக்க நாடுகள் கவனிக்கின்றன. அன்றாடம் 30,000 பேரைப் பரிசோதிக்க மட்டுமே வசதியுள்ள நிலையில், 67 நடமாடும் சோதனை நிலையங்கள் வழியே பரவலான பரிசோதனைக்கு அரசு முனைவது நல்ல முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.