அந்தச் சம்பவம் நடந்தபோது, பல்கலைக்கழக மாணவராக இருந்த சுனாவோ சுபோய்க்கு வயது 20. ‘பூமியிலேயே நரகத்தில் வாழ்வது’என்பதற்கு இணையாக வேறொரு பயங்கரமான சம்பவத்தை அவரால் குறிப்பிட முடியாது. 70 ஆண்டுகளாகத் தனது முகத்தில் அவர் சுமக்கும் தழும்புகளே இதற்குச் சாட்சி. எனினும், அணுகுண்டுப் போர் பயங்கரத்தின் சாட்சியாகத் தான் இருந்ததை நினைவுகூர, ஒரு கருப்பு-வெள்ளைப் புகைப்படத்தை எடுத்துக்காட்டுகிறார் சுபோய். அதில் மொட்டைத் தலையுடன் கேமராவின் திசைக்கு எதிராக வேறெங்கோ பார்த்தபடி இருக்கும் இளைஞரைச் சுட்டிக்காட்டுகிறார்.
“அது நான்தான். ஏதேனும் மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எந்த வித சிகிச்சையும் கிடைக்கவில்லை. உணவு, தண்ணீர் எதுவுமில்லை. முடிவு நெருங்கிவிட்டது என்றே நான் நினைத்தேன்” என்கிறார்.
புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ஹிரோஷிமாவில் உள்ள மியுக்கி ப்ரிட்ஜ் பகுதி. 1945 ஆகஸ்ட் 6-ல் ‘எனோலா கே’ எனும் அமெரிக்காவின் பி-29 போர் விமானம் 15 கிலோ டன் எடை கொண்ட அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது வீசிய பின்னர், மூன்று மணி நேரம் கழித்து எடுக்கப்பட்ட படம் அது. சுமார் 60,000 முதல் 80,000 பேர் உடனடியாகக் கொல்லப்பட்டனர்; சில மாதங்களில் பலி எண்ணிக்கை 1,40,000 ஆக உயர்ந்தது.
அந்த நாளில் ஹிரோஷிமாவில் எடுக்கப்பட்ட மிகச் சில புகைப்படங்களில் எஞ்சியிருக்கும் படங்களில் அதுவும் ஒன்று. அப்படத்தில் வேறு பலருடன் சாலையில் அமர்ந்திருக்கிறார் சுபோய். நொறுங்கிப்போன கட்டிடங்களின் திசையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார்கள் அனைவரும். மறுபக்கம், காயமடைந்த பள்ளிக் குழந்தைகளின் வலியைக் குறைக்க அவர்களின் காயங்களின் மீது சமையல் எண்ணெயை ஊற்றுகிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.
“தங்கள் அனுபவத்தைப் பற்றிப் பேசவும் அணு ஆயுதத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடரவும் தேவையான பலத்தை என்னைப் போன்றவர்கள் இழந்துவருகிறார்கள்” என்கிறார் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியரான சுபோய். அணு ஆயுதப் போரின் பயங்கரம் பற்றி எச்சரிக்க உலகம் முழுவதும் பயணம் செய்திருப்பவர் அவர்.
‘ஹிபாகுஷா’
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சு சம்பவங்களில் உயிர் பிழைத்தவர்கள் என்று பதிவுசெய்யப்பட்ட 1,83,000 பேரின் சராசரி வயது, முதன் முறையாகக் கடந்த மாதம் 80 ஆக உயர்ந்திருக்கிறது. ஆகஸ்ட் 6 அன்று காலை நடந்த அச்சம்பவம் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பாக ‘ஹிபாகுஷா’என்ற பெயரில் அழைக்கப்படும் அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நினைவுகள் உண்டு.
ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டதையும் அதைத் தொடர்ந்து 10 மீட்டர் தொலைவில் காற்றில் தான் தூக்கி வீசப்பட்டதையும் நினைவுகூருகிறார் சுபோய். நினைவு திரும்பியபோது தனது உடலின் பெரும்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்ததையும், வெடிப்பின் வேகத்தில் தனது சட்டையின் கைப் பகுதியும் கால்சட்டையின் ஒரு பகுதியும் பிய்த்துக்கொண்டு சென்றிருந்ததும் அவருக்குத் தெரியவந்தது. “எனது கைகளில் கடுமையான தீக்காயங்கள் இருந்தன. என் கைவிரல்களிலிருந்து ஏதோ வழிந்ததுபோல் இருந்தது” என்கிறார் சுபோய். அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டு வீச்சுகளில் உயிர் தப்பியவர்களுக்கான தேசிய அளவிலான அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவின் துணைத் தலைவர் அவர்.
“எனது முதுகு கடுமையாக வலித்தது. எனினும், என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை. வழக்கமான, ஆனால் பெரிய அளவிலான வெடிகுண்டு என் அருகில் வெடித்தது என்று கருதினேன். ஆனால், வெடித்தது அணுகுண்டு என்றும் எனது உடலில் கதிர்வீச்சு பாய்ந்திருக்கிறது என்றும் எனக்குத் தெரியாது. 100 மீட்டர் தொலைவுக்குக்கூட எதுவும் தெரியாத வகையில் அத்தனை புகை மண்டியிருந்தது. எனினும், பூமியின் நரகத்துக்குள் நுழைந்துவிட்டேன் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. எங்கும் கருகிய உடல்கள் கிடந்தன. சதை கருகிய வாடை எங்கும் பரவியிருந்தது” என்கிறார் சுபோய்.
இரண்டு புற்றுநோய்கள்
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் ஒரு மாதத்துக்கும் மேலாகச் சுயநினைவின்றி இருந்தார். அவருக்கு நினைவு திரும்பியபோது போரில் ஜப்பான் தோற்றிருந்தது. அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. அதன்பிறகு 11 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சுபோய். மூன்று முறை அவர் இறக்கும் தறுவாய்க்குச் சென்றதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டு புற்றுநோய்களுக்காகவும் பல்வேறு நோய்களுக்காகவும் பல மருந்துகளை அவர் உட்கொள்கிறார். அந்த இரண்டு புற்றுநோய்களும் கதிரியக்கத்தின் மூலம் தனக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
வட கொரியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து அணு ஆயுத மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அணுகுண்டு வீச்சில் தப்பியவர்களின் சாட்சியங்கள் வரலாற்று ஆவணங்களாகக் கருதப்படும் நிலையில், தாங்கள் அனுபவித்தவை தங்களுடன் மறைந்துவிடக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
“அணு ஆயுதங்களுக்கு எதிராக ‘ஹிபாகுஷா’ சமூகம் தொடர்ந்து பேசிவந்தால், அதை மற்றவர்களும் பின்பற்றுவார்கள். எனவேதான், நாங்கள் உடல்ரீதியாகச் செயல்படும் காலம் வரை நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்” என்கிறார் அந்த அமைப்பின் அதிகாரியான ஹிரோஷி ஷிமிசு. சம்பவத்தின்போது அவருக்கு மூன்று வயது. ஹிரோஷிமாவில் அவரது வீட்டிலிருந்து 1.6 கி.மீ. தொலைவில் அணுகுண்டு வெடித்தது.
அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர்களில் சிலர் வசிக்கும் மேற்கு டோக்கியோ அருகில் உள்ள சிறிய நகரமான குனிட்டாச்சி மற்றும் ஹிரோஷிமா நகரங்களின் அமைப்புகள், இச்சம்பவத்தால் நேரடியாகப் பாதிக்கப்படாதவர்கள் மற்றும் அணுகுண்டால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லாதவர்களிடம் இவர்களின் அனுபவங்களைக் கதை சொல்லும் வகுப்புகள் மூலம் தக்கவைக்க முயற்சி செய்கின்றன.
தளராத உறுதி
இச்சம்பவத்தில் உயிர் தப்பிய 84 வயதான பெண் ஒருவர், கடந்த மாதம் ‘ஸ்கைப்’ மூலம் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர்களில் சிலர், சமீபத்தில் ஜப்பானியத் தொண்டு நிறுவனத்தின் கப்பலான ‘பீஸ் போட்’டில், 24 நாடுகளுக்கு அமைதி கோரும் பயணம் மேற்கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கணக்குப்படி, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசப்பட்ட சம்பவங்கள் ஏற்படுத்திய பாதிப்பில் இறந்தவர்கள் என்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,000-ஐத் தாண்டியது(ஹிரோஷிமாவில் 2,92,325 நாகசாகியில் 1,65,409). ஹிரோஷிமாவுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது. ஆகஸ்ட் 15-ல் ஜப்பான் சரணடைவதாக பேரரசர் ஹிரோஹூட்டோ அறிவித்தார்.
“போராட்டத்தைத் தொடர என்னிடம் சக்தி இல்லை. நான் சாவுக்காகப் பயப்படவில்லை. ஆனால், அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் என்ற முறையில், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றிய நினைவுகளை முன்னெடுத்துச் செல்வது எனது கடமை” என்கிறார் ஹிரோகோ ஹடாகேயமா. ஹிரோஷிமா சம்பவத்தின்போது அவருக்கு ஆறு வயது.
ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமா அமைதிப் பூங்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வார் சுபோய். அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களுக்கு வழிகாட்ட, அன்று மாலை, மோடோயாசு நதி மீது விளக்கை மிதக்கவிடுவார். அணுகுண்டு வெடிப்பின்போது ஏற்பட்ட வெப்பத்திலிருந்து தப்பிக்க அந்த நதியைத்தான் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தினர்.
அணு ஆயுதத்துக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிவரும் சுபோய், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்துப் பேசுவார். போருக்குப் பிந்தைய அமைதி முயற்சியை ஷின்சோ அபே குலைக்கிறார் என்று குற்றம்சாட்டுபவர் சுபோய். “தனது பதவியைப் பயன்படுத்தி அணு ஆயுத உலகை விட்டொழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொள்வேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை அணு ஆயுதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன்” என்கிறார் சுபோய்.
© ‘தி கார்டியன்’,தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
இன்று ஹிரோஷிமாவின் 70-வது நினைவுதினம்