சிறப்புக் கட்டுரைகள்

நிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

கரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுப் பத்து நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே தனியார் நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பணியாளர்களை நீக்கவும் ஊதியத்தைக் குறைக்கவும் தொடங்கியிருக்கின்றன. இது அநீதியானது.

உலகப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இதே நிலைமைதான். அதேசமயம், நாம் சரிவில்தான் இருக்கிறோம்; அழிவில் இல்லை. இழப்பை ஈடுகட்ட, மறைமுகச் செலவுகளைக் குறைக்கத்தான் வேண்டும். ஏன் ஊதியக் குறைப்பைக் கையில் எடுக்கிறார்கள்?

சென்னையிலுள்ள ஒரு பொதுத் துறை நிறுவனத்தின், 2018-19-க்கான நிதியறிக்கை இது: மொத்த வருவாய்: ரூ.52,570 கோடி; மொத்த செலவு ரூ.52,968 கோடி; இழப்பு – ரூ.398 கோடி. நேரடிச் செலவுகள் - மூலப் பொருள் ரூ.39,634 கோடி; கலால் வரி – ரூ.10,863 கோடி; மொத்தம் – ரூ.50,497 கோடி. ஊழியர் பலன் – ரூ.461 கோடி (0.88%). இதர செலவுகள் – ரூ.688 கோடி. இதர செலவுகள் உள்ளிட்ட மறைமுகச் செலவுகள் – ரூ.2,471 கோடி. ‘இதர செலவுகள்’ ரூ.688 கோடியாக இருக்கும்போது ஆண்டுக்கான இழப்பு ரூ.398 கோடியாக இருக்கிறது. வருவாய் இழப்புக்கு வழிவகுப்பதே, இந்த ‘இதர செலவுகள்’தான். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் தரும் நிறுவனம் அது. அப்படியும் ஊழியர்களுக்கான மொத்தப் பலனும் மொத்தச் செலவில் வெறும் 0.88%தான்.

தனியார் துறை உதாரணத்துக்கு இந்தியாவின் முக்கியமான ஒரு மோட்டார் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அதன் இரண்டாண்டு வரவு-செலவுக் கணக்கு இது. 2017-18 ஆண்டின் மொத்த வருவாய் ரூ.4,016 கோடி, ஊதியம் ரூ.227 கோடி (5.65%); 2018-19 ஆண்டின் மொத்த வருவாய் ரூ.4,387 கோடி, ஊதியம் ரூ.203 கோடி (4.6%). இதுவும் நல்ல ஊதியம் வழங்கும் நிறுவனம்தான். ஆனாலும், ஊழியருக்கான கணக்கும் மொத்தக் கணக்கில் வெறும் 4.6%தான்.

ஒரு நிறுவனத்தின் மிகப் பெரிய சொத்து அதன் ஊழியர்கள். இக்கட்டான காலகட்டத்தில் இதுநாள் வரை நிறுவனத்துக்காகவே ஓடிவந்த அதன் ஊழியர்களைச் சில மாதங்களுக்கேனும் நிறுவனங்கள் தாங்கிப்பிடிக்க வேண்டும். ஓர் ஆண்டின் வருவாய் இழப்பை ஒட்டுமொத்த முதலீட்டுக்கும் நேர்ந்த இழப்பாக நிறுவனங்கள் பார்க்கக் கூடாது. இது ஊழியர்கள் நலன் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல; இப்போது நாட்டின் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதும் ஆகும்.

தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

SCROLL FOR NEXT