சிறப்புக் கட்டுரைகள்

ஊரடங்கும் முக்கியம், பரிவும் முக்கியம்!

ஆசை

கரோனா நடவடிக்கைகளில் தமிழக அரசு செய்த மிகப் பெரும் தவறுகளில் ஒன்று, அது ஊரடங்குக்கு மட்டுமே கவனம் கொடுத்து பிற முன்னேற்பாடுகளைக் கோட்டைவிட்டதுதான். தமிழக அரசு மார்ச் 31 வரை ஊரடங்கை அறிவித்தபோதே நோயாளிகள் பலரும் கலவரம் அடைந்தார்கள். குறிப்பாக, டயாலிஸிஸ் செய்துகொள்பவர்கள், காசநோயாளிகள், உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டு அதற்காகத் தினமும் மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் போன்றோரின் நிலைமை மிகவும் கவலைக்குரியதானது.

டயாலிஸிஸ் செய்துகொள்ளச் செல்வதற்கு 108-ஐ அழைத்தால் போதும்; நாங்களே கூட்டிச்செல்வோம் என்று அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் தினசரி டயாலிஸிஸ் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல். இத்தனை பேரையும் அழைத்துச் செல்லுமளவுக்கு அவசரச் சிகிச்சை ஊர்தி நம்மிடம் இருக்கிறதா? கூடவே, இவர்களில் கணிசமானோர் தனியார் மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் டயாலிஸிஸ் செய்துகொள்பவர்கள். இப்போது பல தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டதையடுத்து அங்கே டயாலிஸிஸ் செய்துகொள்வோரின் நிலை கேள்விக்குரியதாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் டயாலிஸிஸ் செய்துகொண்டுவந்த ஒருவரை போலீஸ் தாக்கியதாக எழுத்தாளர் இமையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இது ஒருபுறம் என்றால் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டோரின் நிலை இன்னொருபுறம். குறிப்பாக, சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டோர் மாதம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகளைச் சாப்பிட வேண்டிவரும். வசதியுள்ளோருக்குச் சரி, வசதி இல்லாதோருக்கு அரசு மருத்துவமனைகளே ஒரே தீர்வு. தற்போதைய அசாதாரண சூழலால் இரண்டு தரப்பினருக்கும் மாத்திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் மருந்து பெறுவோர் வேறு மாவட்டத்தில் இருந்தாலும் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில்தான் மருந்து பெறும் சூழல் இருந்துவருகிறது. இதுகுறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விசாரித்தோம். தங்களிடம் உள்ள அரசாணையை அருகில் உள்ள மருத்துவமனைக் கல்லூரிகளில் காட்டி மருந்து பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். இதுகுறித்து நோயாளிகளுக்கு உரிய தகவல் சேராததால் பெரும் குழப்பமே நிலவுகிறது.

காசநோயாளிகள் படும் பாடும் சொல்லி மாளாதது. இதுபோல சிறிதும் பெரிதுமாகப் பெருமளவிலானவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அறுவைச் சிகிச்சைக்காகக் காத்துக்கொண்டிருந்த பலரும் இப்போது வீட்டில் அடைந்திருக்கிறார்கள். உயிர் பயம் அவர்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு மிக முக்கியமானதுதான். அதேவேளையில், உயிர் காக்கும் மருந்துகள் வாங்கச் செல்வோருக்கான வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும். கரோனாவால் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், இதர காரணங்களால் ஏற்படும் சேதாரமும் அதிக அளவில் இருக்கிறது. இதற்கெல்லாம் அரசு முகங்கொடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT