கரோனா தாக்குதலின் பிரதான இலக்கு சுவாச மண்டலம்தான். தொற்றுக்கு ஆளான மூன்று பேரில் ஒருவர் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். மூளையால் சுவாசத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வென்டிலேட்டரிலிருந்து அளிக்கப்படும் கூடுதல் அழுத்தம் ரத்த ஓட்டத்துக்கு ஆக்ஸிஜனை அளிப்பதோடு, நுரையீரலில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றவும் உதவுகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் வென்டிலேட்டர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. எனவே, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடும் வென்டிலேட்டர் படுக்கைகளைத் தயாரிப்பதிலும் வாங்கிக் குவிப்பதிலும் தீவிரம் காட்டுகின்றன.
கரோனா வைரஸால் தாக்கப்பட்டு சுவாசப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள ஒருவருக்கு 21 நாட்கள் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கும். இந்த வென்டிலேட்டர் உதவி கிடைத்தால் பலர் உயிர் தப்பிவிடுவார்கள். இந்தியாவில் வைரஸ் தாக்குதல் கடுமையாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக 40 லட்சம் வென்டிலேட்டர் படுக்கைகள் தேவைப்படும் என்று கணிக்கிறார்கள் மருத்துவத் துறையினர். ஆனால், இப்போது இருப்பவை எவ்வளவு தெரியுமா? வெறும் 40 ஆயிரம். அதுவும் அரசு மருத்துவமனைகளில் உள்ள இருப்பு 8,432 மட்டுமே. வல்லரசுக் கனவில் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் இந்திய அரசு, சுகாதாரத் துறை மீது காட்டியிருக்கும் அக்கறை இவ்வளவுதான். கேரளம் போன்ற மாநிலங்கள் கொஞ்சம் அக்கறையோடு நாட்டிலேயே அதிகபட்சமாக வாங்கி வைத்திருந்தாலும், அங்கும்கூட எண்ணிக்கை வெறும் 5,000+ மட்டுமே. நகரங்கள் என்று கொண்டால் மும்பையில் 800+ இருக்கின்றன. தமிழ்நாட்டின் மொத்தக் கணக்கே வெறும் 1,500+ என்கிறார்கள்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்களில் 75% வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்தியாவில் தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களுக்கு ரூ.7 லட்சம்; வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படுபவற்றுக்கு ரூ.11-18 லட்சம் ஆகிறது. உலகளாவிய நோய்ப்பரவல் இருப்பதால், இறக்குமதிக்கு இனி வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே, இந்தியாவிலேயே வென்டிலேட்டர் தயாரிப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் கடந்த மாதம் தயாரிக்கப்பட்டுள்ள மொத்த வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2,700 மட்டுமே. இந்தியாவின் மொத்த உற்பத்தித் திறன் என்று பார்த்தாலுமேகூட மாதம் ஒன்றுக்கு 5,000+ மட்டுமே. இதற்கும் முக்கிய உதிரி பாகங்கள் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டாக வேண்டும் என்கிறார்கள். விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதுவும் எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை.
இதற்கிடையில், சுகாதாரத் துறை அமைச்சகம், பொதுத் துறை நிறுவனங்களிடம் 10,000 வென்டிலேட்டர்களைத் தயாரிக்கவும் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் 30,000 வென்டிலேட்டர்களைத் தயாரிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது. வென்டிலேட்டர்கள் போதிய அளவில் கிடைக்காத சூழலில் அவசரத் தேவைகளை சமாளிப்பதற்காக வென்டிலேட்டரை முன்மாதிரியாகக் கொண்ட சுவாசக் கருவிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை இறங்கியுள்ளது. மாருதி, ஹுண்டாய் போன்ற நிறுவனங்களும் இப்போது களத்தில் இறங்குவது தொடர்பில் பேசுகின்றன. என்றாலும், எல்லாமே யானைப் பசிக்கு சோளப்பொரிதான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.