உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்களும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் அமெரிக்காவின் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ‘குவாண்ட்டிடேட்டிவ் பயோசயன்சஸ் இன்ஸ்ட்டிடியூட் கரோனாவைரஸ் ரிசர்ச் குரூப்’பின் அணுகுமுறை வேறுபட்ட ஒன்றாகும். மற்றவர்கள் கரோனாவைத் தாக்கியழிக்கக்கூடிய மருந்துகளைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
இவர்களோ, மனித செல்களில் உள்ள புரதத்துக்குப் பாதுகாப்புக் கவசமாகச் செயல்படக்கூடிய மருந்துகளைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஏனெனில், கரோனா உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் நம் செல்களில் உள்ள புரதங்களையே நம்பியிருக்கிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க உதவுபவை என்று ஏற்கெனவே உள்ள 50 மருந்துகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டிருக்கின்றனர். இந்த மருந்துகளில் பலவும் புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுபவையாகும்.
நியூயார்க்கின் சினாய் மலை மருத்துவமனையிலும் பாரிஸில் பாஸ்ட்டர் நிறுவனத்திலும் உள்ள அறிவியலாளர்கள் இந்த மருந்துகளை ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அறிவியலாளர்கள் இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் காலமெடுக்கக்கூடிய இந்த ஆராய்ச்சிகளை ஒருசில வாரங்களில் அவர்கள் முடித்திருப்பது மலைக்க வைக்கிறது.
வயதானவர்களைத்தான் தொற்றுகிறதா கரோனா?
கரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக ஏராளமான வதந்திகள், மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ‘இளைஞர்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை; வயதானவர்களே பீடிக்கப்படுகிறார்கள்!’ அப்படியா? அமெரிக்க அனுபவம் இல்லை என்கிறது.
சுமார் 2,500 நோயாளிகளை வரிசைப்படுத்தியதில் 38% நோயாளிகள் 20 முதலாக 54 வயதுக்கு உட்பட்டவர்கள். இன்னும் சொல்லப்போனால், சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். “வயதானவர்கள் கூடுதலான அபாயத்தை எதிர்கொள்கிறார்கள் என்றாலும், இளைஞர்களும் அபாய வளையத்துக்கு வெளியே இல்லை” என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.
ஒவ்வொரு பரப்பிலும் கரோனா
கரோனா வைரஸ் ஒவ்வொரு பரப்பிலும் ஒவ்வொரு நேரம் வரை நீடிக்கக்கூடியது. பொருட்களைப் பொதியும் அட்டையில் (கார்ட்போர்ட்) ஒரு நாளைக்குள் கரோனா வைரஸ் சிதைவடைந்துவிடும். ஒருவர் தும்மிய அல்லது இருமிய பிறகு காற்றில் அரை மணி நேரம் வரை அந்தரத்தில் இருக்கக்கூடியது கரோனா. அதன் பிறகுதான் ஒரு பரப்பின் மீது சென்று படியும். பிளாஸ்டிக் பொருட்களிலும் எஃகு பொருட்களிலும்தான் அதிக நேரம் கரோனா வைரஸ் இருக்கும். மூன்று நாட்கள் வரை அவற்றில் உயிரோடு இருக்கும். தாமிரத்தாலான பரப்பில் நான்கு மணிநேரம் கரோனா உயிருடன் இருக்கும். ஆகவே பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றால் ஆன பரப்புகளை முடிந்தவரை தொடாமல் இருப்பது கரோனா தொற்றிலிருந்து தப்பிக்க உதவும்.
ஆறடிதான் நல்லது
ஜெர்மனியில் 70% மக்களுக்கு கரோனா தொற்றுவதற்கு வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் ஜெர்மனிய பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல் கூறியிருந்தார். வயது வந்தோரில் உலக அளவில் 20-60% வரை பாதிப்புக்குள்ளாக்கும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியலாளர் மார்க் லிப்ஸிட்ஸ் அச்சுறுத்துகிறார்.
கரோனாவுக்குத் தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் சமூகரீதியிலான தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பது பொதுமக்களின் கடப்பாடு. அப்போதுதான் நோய்ப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். கூடுமான வரை வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். அப்படி வெளியில் செல்ல நேரிடும்போதும் மற்றவர்களுக்கு அருகே நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
மற்றவர்களிடமிருந்து ஆறடித் தொலைவைப் பராமரிப்பது பாதுகாப்பானது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்தியா போன்ற மக்கள்தொகை அடர்த்தி அதிகமான நாட்டில் ஆறடி தொலைவை அனுசரித்தல் அவ்வளவு எளிதில்லை. என்றாலும், கரோனாவை வெற்றிகொள்ள வேண்டுமென்றால் நாம் இதைச் செய்துதான் ஆக வேண்டும்.