இந்தியாவில் முதன்முதலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு மாணவி. சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தவர் கரோனோ தாக்குதல் காரணமாக அந்த நகரம் முடக்கப்படுவதற்கு முன்னதாக இந்தியா திரும்பினார். தொண்டைப் புண், இருமலால் பாதிக்கப்பட்டவர் ஒருவேளை கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்துக்கு உள்ளானார்.
திருச்சூர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற பிறகு அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. முற்றிலும் குணமாகி முழு ஆரோக்கியத்தோடு வீடு திரும்பியவர் இப்போது மக்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பவராக மாறியிருக்கிறார் என்பதுதான் நல்ல செய்தி. ஆனால், இதற்கு இடையிலேயே அவரைப் பற்றி ஏராளமான வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவிவிட்டன.
அவரது பெயர், புகைப்படம், தந்தையின் தொழில் போன்றவற்றையெல்லாம் பரப்பி ஆளுக்கொன்றாகக் கதை கட்டி பயமுறுத்த அவருடைய குடும்பம் பாதிக்கப்பட்டது. ‘இப்போது அதையெல்லாம் கடந்து வந்துவிட்டேன்’ என்று அந்த மாணவி சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: ‘யார் வேண்டுமானாலும் ஒரு நோயால் பாதிக்கப்படலாம்; பாதிக்கப்பட்டோரைப் பற்றிப் பேசும்போது நம் வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி அணுகுவோம் என்கிற அக்கறையோடு அணுகுங்கள். அன்பான வார்த்தைகளும் மிகச் சிறந்த மருத்துவர்கள்!’
நார்வேயில் அதிகரிக்கும் வீட்டில் இருந்தபடி பணியாற்றுதல்!
நார்வே போன்ற நாடுகளில் நோய் பாதிப்புக்குள்ளாகும் ஊழியர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அதிகம். முதலாவதாக வேலை அளிக்கும் நிறுவனமே மருத்துவச் செலவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கும். அடுத்து, ஊழியர் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பும் வரைக்கும் ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பைத் தேவையான அளவுக்கு நிறுவனமே அளிக்கும்.
அடுத்து, ஒருவேளை ஊழியர் நோய்ப் பாதிப்பு காரணமாக வேலையிழக்கும்பட்சத்தில் அரசாங்கமும் மீண்டும் அவருக்கு வேலை கிடைக்கும் காலகட்டம் வரை பல்வேறு விதங்களில் உதவும். கரோனா பதற்றத்துக்குப் பிறகு நார்வேயில் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடி பணியாற்றச் சொல்லிவிட்டன. நார்வேவைத் தொடர்ந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இந்தப் போக்கு அதிகரித்துவருகிறது. மக்களும் நிலைமையின் தீவிரம் உணர்ந்து வீட்டை விட்டு வெளியே போவதைத் தவிர்க்கிறார்கள்.
பிரெஞ்சுக்காரர்களின் முத்தச் சங்கடம்!
கரோனா வைரஸ் சீனாவைத் தாண்டி, ஐரோப்பாவையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இத்தாலி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது அண்டை நாடான பிரான்ஸைக் கடுமையான பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குத் தடை என்பது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரான்ஸ் அறிவித்திருக்கிறது.
ஆரோக்கியத்தில் மிகுந்த விழிப்புணர்வும் அக்கறையும் கொண்டவர்களான பிரெஞ்சுக்காரர்கள் அரசாங்கத்தை முந்திக்கொண்டு செயலாற்றுகிறார்கள். மராத்தான் போட்டி, தொழில்துறைக் கண்காட்சி தொடங்கி பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் வரை எல்லாவற்றையும் கால வரையறையின்றி ஒத்திப்போட்டிருக்கிறார்கள்.
ஒரு விஷயம்தான் அவர்களைப் படுத்துகிறது. பிரெஞ்சு முகமன். கன்னத்தோடு கன்னம் உரசியபடி முத்தமிடுவது பிரெஞ்சு முகமனின் ஓர் அங்கம். அது தவிர்க்கப்பட வேண்டியதாகியிருக்கிறது. காதலர்களின் கொண்டாட்ட நகரமான பாரீஸில் காதலர்கள் முத்தமிட்டபடி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களே ஒவ்வொரு நாளும் லட்சங்களைத் தாண்டும். ஆளாளுக்கு முகமூடியோடு திரிவதால் இப்போது முத்தங்களின் எண்ணிகையும் குறைகிறது.