பேச்சுரிமைக்குக் கிடைத்த வெற்றி
திரேந்திர கே ஜாவின் ‘ஷேடோ ஆர்மீஸ்: ஃப்ரிஞ் ஆர்கனைசேஷன்ஸ் அண்டு ஃபுட் சோல்ஜர்ஸ் ஆஃப் இந்துத்துவா’ (தமிழில், ‘நிழல் ராணுவங்கள்: இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்’- எதிர் வெளியீடு) என்ற புத்தகம்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. இதன் ஆங்கிலப் பதிப்பை வெளியிட்ட ‘ஜகர்நாட்’ பதிப்பகத்தின் மீதும், ஆசிரியர் திரேந்திர கே ஜாவின் மீதும் சனாதன் சான்ஸ்தா என்ற தீவிர இந்துத்துவ அமைப்பு வழக்குத் தொடுத்திருந்தது. ரூ.10 கோடி நஷ்டஈடும் கோரியிருந்தது. இந்த வழக்கை கோவா நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்திருக்கிறது. இதைக் கருத்துச் சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ‘ஜகர்நாட்’ பதிப்பகத்தின் பதிப்பாளர் சிக்கி சர்க்கார் தெரிவித்திருக்கிறார். “உண்மைதான் அவதூறு வழக்குக்கு எதிரான கவசம். இந்த வழக்கில் நீதியும் உண்மையும் வென்றுவிட்டன” என்று நூலாசிரியர் திரேந்திர கே ஜா கூறியிருக்கிறார்.
கஞ்சா... மருந்தா - போதை மருந்தா?
கஞ்சாவுக்கு மருத்துவக் குணம் இருக்கிறதா, இல்லையா? இது குறித்து உலகெங்கும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் அறிவியலாளர்களுக்கு இடையிலேயே திட்டவட்டமான கருத்தொற்றுமை கிடையாது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 34 நாடுகளில் கஞ்சாவின் மருத்துவப் பயன்பாட்டுக்கு அனுமதி இருக்கிறது. சிசிலித் தீவில் நோயாளிகளுக்கு கஞ்சா இலவசமாகவே வழங்கப்படுகிறது. கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் இந்தியாவில் போதை மருந்துத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை இருக்கிறது. இந்தத் தடையானது கஞ்சாவின் பிசினுக்கும் பூக்களுக்கும்தான்; கஞ்சாவின் இலைகளுக்கும் விதைகளுக்கும் அல்ல. இதைக் கொண்டுதான் மருத்துவத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கஞ்சாவை மருத்துவத்துக்காகப் பயன்படுத்தும் முதல் ஆயுர்வேத மருத்துவ நிலையம் கடந்த ஜனவரியில் பெங்களூருவில் திறக்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி மருத்துவப் பயன்பாட்டுக்காகக் கஞ்சாவை அனுமதிக்க வேண்டும் என்று பலரும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதில் சிக்கல் என்னவென்றால், மருத்துவத்துக்காக அனுமதித்தால், நம் ஆட்கள் அதை போதையாக மாற்றிவிடுவார்கள் என்பதுதான்.