ஒருகாலத்தில் ஊருக்கொரு எண்ணெய் ஆட்டும் செக்கு ஆலை இருந்தது. விவசாயிகளிலேயே சிலர், செக்கு ஆட்டும் தொழிலைக் கூடுதல் வருமானத்துக்குரிய தொழிலாகக் கருதிச் செய்தனர். பொதுமக்களிடம் இடையில் ஏற்பட்ட எண்ணெய் நுகர்வுப்போக்கால் ஊரில் இருந்த செக்கு ஆலைகள் வழக்கொழிந்துபோயின. இன்று பழையபடி ஊர்தோறும் செக்கு ஆலைகள் உருவாகியிருக்கின்றன. ஆரோக்கியம் சார்ந்த மக்களின் சிந்தனைப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்குக் காரணம். வளர்ச்சி நிலையில் முன்னேறுகையில் புதிய வரவுகளை ஏற்பதும், புதிய பொருட்களால் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்துகொள்கிறபோது அவற்றைக் கைவிட்டுவிடுவதும் இயல்பானது. எண்ணெய் பற்றிய நுகர்வுப்போக்கும் அப்படித்தான்.
மல்லாட்டை எண்ணெய் (வேர்க்கடலையை எங்கள் பகுதியில் மல்லாட்டை என்பார்கள்; மணிலா கொட்டை என்பதன் மருவிய பெயர் மல்லாட்டை.) சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகி இதய அடைப்பை உருவாக்கும் என்ற கருத்து, கொஞ்ச நாளைக்கு முன்னர் நம்முடைய மருத்துவர்களாலேயே சொல்லப்பட்டது. அதைப் பிரதானப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் பலவகையான விளம்பரங்களைச் செய்தன. மருத்துவர்களின் அறிவுறுத்தல், விளம்பரங்களின் தாக்கம் உள்ளிட்டவற்றால் சந்தையில் விற்பனைக்கு வந்த புதிய எண்ணெய்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்தினார்கள்.
இப்போது செக்கு எண்ணெய் பற்றிய விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் பல வருகின்றன. செக்குகளில் ஆட்டிப் பெறப்படும் மல்லாட்டை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் அதன் விதைகளில் உள்ள உயிர்ச் சத்து அப்படியே இருக்கும் என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். செக்கு மூலம் எடுக்கப்படும் மல்லாட்டை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தினால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் குறைவதாக இப்போது மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். மரச்செக்கு அமைத்து எண்ணெய் எடுக்கும் தொழில், சென்னை போன்ற பெருநகரங்களில்கூட இப்போது நடைபெறுகிறது. பல காலமாக எண்ணெய் வணிகம் செய்துவரும் முன்னணி எண்ணெய் நிறுவனங்களும் ‘மரச்செக்கு எண்ணெய்’ என்று சொல்லி விற்பனைசெய்யத் தொடங்கிவிட்டன. புதிய இயற்கை விளைபொருள் விற்பனை அங்காடிகளின் தோற்றத்தையும் இதோடு இணைத்துப் பார்க்க வேண்டும். இன்று எல்லாக் கடைகளிலும் மரச்செக்கு எண்ணெய்கள் நம்மை வரவேற்கின்றன. உண்மையிலேயே அவை செக்கு எண்ணெய்தானா என்று கண்காணிக்க வேண்டிய கடமை, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு இருக்கிறது. ஏமாற்றுவது தனிநபராயினும் நிறுவனமாயினும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊருக்குச் சென்று சென்னை திரும்பி வரும்போதெல்லாம் எண்ணெய் கொண்டுவருவது என்னுடைய வழக்கம். சிறிய பைகளில் எண்ணெய் கொண்டுவருவதற்கு அரசுப் பேருந்துகளில் சுமைக்கட்டணம் வசூலித்ததில்லை. மின்சாதனப் பொருட்களுக்கு மட்டும்தான் தனி டிக்கெட் போடுவார்கள். இப்போது ஊருக்குச் சென்று சென்னை திரும்புபவர்களின் பைகளில் நாட்டுச் செக்கு எண்ணெய்யும் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. ஆனால், அதற்குச் சுமைக்கட்டணம் கொடுக்க வேண்டும் என்று நடத்துநர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். மக்களிடம் ஏற்பட்டுள்ள உணவு சார்ந்த விழிப்புணர்வை அரசு பாராட்ட வேண்டாம், எண்ணெய்க்குச் சுமைக்கட்டணம் விதித்துத் தண்டம் வசூலிப்பதையாவது தவிர்க்கலாமே?
- இரா.வெங்கடேசன், தொடர்புக்கு: iravenkatesan@gmail.com