சிறப்புக் கட்டுரைகள்

எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு: தேர்தெடுக்கப்பட்ட எழுத்துகள்

செய்திப்பிரிவு

ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி: சில குறிப்புகள்

…ஸ்ரீ பாரதியார் புதுச்சேரியினின்றும் வந்த பின்பு பழைய பாரதியின் உருவமே இல்லை. ஒரு வங்காளி போன்ற உருவுடனும் காணப்பட்டார். அதற்கானபடி தலைப்பாகையும் பிளவும் பொருந்தியிருந்தது. அவரது நடையும் கோலமும் யாவுமே மாறின. எல்லாம் புதுவிதமாக இருந்தது. ஒரு பிரம்ம ஞானி போன்றும் காணப்பட்டார். அவரைப் பார்த்தாலே உற்சாகம் தோன்றிவிடும். எவ்வித கர்வமும் இல்லை. அவர் படிப்பை அவர் அறியார். சிறுகுழந்தை போன்றும் இருப்பார்.

தமக்கென்று ஒரு பெருமையை அவர் வைத்துக்கொள்ளவில்லை. எந்த இடத்தில் அவரை உட்காரவைத்துப் பாடச்சொன்னாலும் உடனே ஆனந்தத்துடன் பாட ஆரம்பித்துவிடுவார். அவர் பாடுங்கால்கூட இருந்து கேட்ட பாக்கியம் நமக்கு உண்டு. அவர் பாடுகையில் அந்தப் பாட்டின் அத்தனை ரசங்களும் அவரது வதனத்தில் தத்ரூபமாய்த் தோன்றும், ஜ்வலிக்கும். எவரையும் லக்ஷ்யம் பண்ணுகிற சிந்தை அவருக்கில்லை. எல்லோருக்கும் வணங்கிய உடம்பாகத் தாழ்ந்து பணிந்து நடந்துகொள்வார். ஏதேனும் நெஞ்சில் எண்ணம் குடிகொண்டுவிட்டால் ராஜபுத்திர வீரனாய்விடுவார். விரிக்கிற் பெருகும்.

- சுதேசமித்திரன், 17.9.1921

பழங்காலத்துப் பத்திரிகைக்காரர்கள்

…பழங்காலத்தில் ஒரு வேடிக்கையான சங்கதி என்னவென்றாலோ, பத்திரிகை என்றாலே அதைப் படித்துப் பார்க்க வேணும் என்கிற ஒரு புத்தி உண்டாகாமைதான்! என்னவோ பேப்பராம், அது யாருக்கு வேணும் என்கிற அலக்ஷியமே அதிகம். இந்த நிலையிலே அத்தி பூத்தது போல் சில புத்திசாலிகள் ஆங்காங்குத் தோன்றி மின்மினியாய் மின்னிக்கொண்டிருந்தார்கள். பத்திரிகைக்காரர்கள் இவர்களை வசப்படுத்தி இவர்களை நம்பிக்கொண்டே தங்களின் பத்திரிகையைத் தொடங்க - நடத்த வேண்டியிருந்தது!

இதிலே ஒரு கும்மாகுத்து என்னவெனில் சில நாளைக்கு - மாதத்துக்கு - இந்தப் புத்திசாலிகட்குப் பத்திரிகையை முன்பணமின்றி அனுப்பிக்கொண்டே காலந்தள்ள வேண்டும். அதன் பிறகு பத்திராதிபர் சந்தா அனுப்பும்படி பரிதாபப் பாட்டுகள் பத்திரிகையில் பாடவேணும்! இதற்குப் பிறகு சிலர் நல்ல மனதுடன் சந்தாக் காசை யனுப்பிவித்துவிடுவார்கள். பல நஞ்சான் குஞ்சான்களோ பத்திரிகைக்காரருக்குத் தர வேண்டிய பணத்துக்கு சொக்காய்த் தைத்துப் போட்டுக்கொள்வார்கள்; பலசரக்குக் கடையில் சாமான் வாங்கிவிடுவார்கள்; அல்லது வருஷா வருஷம் போடும் மாங்காய் ஊறுகாய்ச் செலவுக்கு உதவட்டுமென்று நிறுத்திக்கொள்வார்கள்!

- அமிர்த குணபோதினி, மார்ச் 1929

ஜில்லா பத்திரிகையின் சிலாக்கியம்

நமது திரிச்சிராப்பள்ளிக்கும் பத்திரிகைக்கும் பொருத்தமேயில்லையென்ற அபகீர்த்தி நெடுங் காலமாகவுள்ளது. எத்தனையோ பத்திரிகைகள் இந் நகரில் தோன்றி ஆதரிப்பாரின்றி மறைந்துபோயின. திரிசிரபுரத் தமிழ்ச்செல்வன், அமிர்தவசனி, செந்தமிழ்ச் செல்வம், திருச்சி மித்திரன், திருச்சி நேசன்,

லோக வர்த்தமானி, பணம், வார வர்த்தமானி, பஞ்சாயத்து,  வாணி விலாஸினி, பிரசண்ட மகாவிகடன், இந்தியத் தாய், விஜயா, தொழிலாளி, சமரஸம், விவசாயம் - இன்னும் எத்தனையோ பத்திரிகைகள் பிறந்து மறைந்தன. 1904-ம் வருஷத்தில் இங்கு தோன்றிய பிரஜாநுகூலன் பத்திரிகையொன்று

மட்டும் இன்னும் உயிருடன் உலாவிவருகின்றது. நமது நகரவாசிகட்குப் பத்திரிகாபிமானம் இல்லை யென்று கூறிவிடுவதற்கில்லை. வெளியூர்களினின்றும் எத்தனையோ பத்திரிகைகள் இங்கு வந்து நமது நகரவாசிகளின் கரங்களை அலங்கரிக்கின்றன. தங்களின் சொந்த ஊர்ப் பத்திரிகையை ஆதரிக்க வேண்டுமென்ற சிரத்தை இனியேனும் உண்டாக வேண்டுமென்று பகவானைப் பிரார்த்திக்கின்றோம்.

- நகரதூதன், 20 ஆகஸ்ட் 1933

| ஆக.17 - எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவின் 80-வது பிறந்தநாள் |

SCROLL FOR NEXT