தாமிரபரணி நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியான பொதிகை மலையை தமிழகம் வழியாக தற்போது அடைய முடியாது. கேரளம் வழியாகதான் செல்ல முடியும். கடல் மட்டத்திலிருந்து 6,122 அடி உயரத்தில் இருக்கிறது பொதிகை மலை. கேரளம் தொடங்கி தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை விரியும் ஆனைமலை வனத்தின் ஒரு பகுதிதான் பொதிகை மலை. இதனை அகத்தியர் மலை என்றும் அசம்பு மலை என்றும் அழைக்கிறார்கள்.
தாமிரபரணியின் மிக முக்கியமான நீர்ப்பிடிப்பு பகுதியான ஐந்தலைப் பொதிகை (ஐந்து தலை) இங்கிருக்கிறது. ஐந்து சிகரங்களை கொண்ட உயரமான மலை என்பதே அதன் பெயர்க் காரணம். பொதிகையின் உச்சியை அகத்தியர் மொட்டை என்றும் அழைக்கிறார்கள். மலையின் மேற்கு பகுதியில் திருவனந்தபுரமும் கிழக்குப் பகுதியில் திருநெல்வேலியும் இருக்கின்றன.
பொதிகை மலையின் உச்சியில் கேரள அரசு அகத்தியர் சிலையை நிறுவியுள்ளது. இதை நிறுவுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் சிலை யைக் கொண்டு சென்றது. அதன் பின்பு அகத் தியரை தரிசிப்பதற்காக முக்கியஸ்தர்கள் ஹெலி காப்டரில் வந்தபோது சிலை இருக்கும் இடம் தெரியாதபடி மேகக் கூட்டங்கள் மறைத்தன. பல முறை முயன்றும் ஹெலிகாப்டரில் அங்கு செல்ல முடியவில்லை. பின்பு இருநாட்கள் நடந்து சென்று தான் அகத்தியரை தரிசித்தார்கள். அவரை தரிசிக் கும் புனித யாத்திரைக்காக பல்வேறு கட்டுப்பாடு களுடன் மக்களை அங்கே அனுமதிக்கிறது கேரள அரசு. அப்படிதான் நாமும் சென்றோம்.
எப்படி செல்ல வேண்டும்?
திருவனந்தபுரத்துக்கு முன்பாக இருக்கிறது பாலோடு. கேரளத்தின் சிறு நகரம். அங்கிருந்து நன்னியோடு, விதுரா கலுங்கு, விதுரா தேவியோடு வரை பேருந்து உண்டு. இதன் பின்பு சொந்தமாக வாகனம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கிறது கேரள வனத்துறையின் காணிதலம் சோதனைச் சாவடி. இங்கிருந்து வனத்துக்குள் செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஒரு நபருக்கு ரூ. 2,500 கட்டணம். தனி நபராகவோ அல்லது இருவர் மூவராகவோ செல்ல முடியாது. குறைந்தது பத்து பேர் சேர்ந்தால் மட்டுமே ஒரு குழுவாக அனுமதிக்கிறார்கள். ஒரு குழுவுக்கு வழித்துணையாக வேட்டைத் தடுப்பு காவலர்கள் இருவர் வருகிறார்கள். பழங்குடியினரான காணி இன மக்கள் அவர்கள்.
பிளாஸ்டிக் பைகள், கண்ணாடி பாட்டில்கள், மது புட்டிகள், சிகரெட் இவை எல்லாம் கண்டிப்பாக தடை செய்யப்பட்ட பொருட்கள். அப்படியான பொருட்களை இருப்பது தெரிந்தாலே அவற்றை பறிமுதல் செய்வதுடன் அவற்றைக் கொண்டு வந்த நபர்களையும் திருப்பி அனுப்பி விடுவார்கள்.
காணி தலத்திலிருந்து வனம் தொடங்குகிறது. இங்கிருந்து போனக்காடு என்கிற வனத்துக்கு செல்ல வேண்டும். கடும் மலைப்பாதை அது. ஒருபக்கம் பெரும் பள்ளத்தாக்கு. வழியில் வருகிறது குருசடி வனம். இங்கே பழங்குடியினரான காணிகள் வசிக்கிறார்கள். காணிகளின் கலாச்சாரம் சுவாரஸ்யமானது. அதை பின்பு பார்ப்போம். இரண்டு மணி நேரப் பயணத்தில் வந்தது போனக்காடு வனம். இந்த பகுதியை போனக்காடு முகாம்-1 என்கிறார்கள். இங்கிருந்துதான் அடர் வனம் தொடங்குகிறது.
‘யானை மணக்குது’
இதற்கு மேல் வாகனம் செல்லாது. வனத்துக்குள் நடந்துதான் செல்ல முடியும். இறங்கி நடக்கத் தொடங்கினோம். வழியில் ஏராளமான சிற்றோடைகள், அருவிகள் சலசலக்கின்றன. ஆங்காங்கே சதுப்பு நிலக் காடுகள். சில இடங்களில் பகலும் இரவு போல காட்சியளித்தது வனம். சூரியக் கதிர்கள் உட்புகாத பசுமை மாறா சோலைக்காடுகள் அவை. இவை எல்லாம் தாமிரபரணியின் நீர் பிடிப்பு பகுதிகள். வழியில் வருகிறது யானைக்காடு. இங்கு யானைகள் அதிகம் வசிப்பதால் யானைக்காடு என்று அழைக்கிறார்கள். இங்கே தனியாக வீற்றிருக்கிறார் பிள்ளையார். இதனை தங்கைமச்சன் கோயில் என்கிறார்கள். பிள்ளையாரை வழிபட்டு சென்றால் யானைகள் தாக்காது என்பது மக்களின் நம்பிக்கை.
தாமிரபரணி நீர்பிடிப்புப்பகுதியான ஐந்தலை பொதிகை. | படம்: கா.அபிசு விக்னேசு
யானைக்காட்டில் உலா வரும் யானைக் கூட்டம்.
வனத்துக்குள் யானை உருவத்துக்கு பெரும் பாறைகள் நிறைந்திருக்கின்றன. ‘பாறைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம், அதன் பின்னால் யானைகள் மறைந்து நின்றிருக்கலாம்’ என்று எச்சரித்தார்கள் காவலர்கள். இங்கே மக்களின் பாதுகாப்புக்காக வனப் பாதையின் இரு பக்கத்திலும் யானைகள் கடக்காத வகையில் நீளமாக அகழிகளை வெட்டி வைத்திருக்கிறது கேரள வனத்துறை. அப்படி இருந்தும் இங்கே யானை தாக்கி இறந்துபோனவர்கள் உண்டு என்றார்கள்.
தொலைவில் யானைகளின் பிளிறலை கேட்க முடிந்தது. வழியெங்கும் யானை சாணம். அந்தப் பகுதியில் மட்டும் வனத்தில் வித்தியாசமான மணம் கமிழ்ந்தது. ‘யானை மணக்குது’ என்று சிரித்தார் காவலர்.
இணை சேர தயாராகும்போது பெண் யானையிடம் இருந்து எழும் பிரத்யேக மணம் அது. இதனை உணர்ந்து ஆண் யானை, பெண் யானையுடன் இணை சேரும். இந்த மணம் எழாதபோது பெண் யானையின் விருப்பம் இல்லாதபோது ஒருபோதும் ஆண் யானை இணை சேராது. யானைக்கே உரிய குணம் அது.
காலடிச் சத்தம் கேட்டு புதர்களிலிருந்து தெறித்து ஓடுகின்றன புள்ளி மான்கள். மான் வகையில் இங்கு புள்ளி மான்கள், கடமான்கள், அரிய வகை சருகு மான்கள் வசிக்கின்றன. புலி, சிறுத்தை, அரிய வகை மரநாய்கள், நீர் நாய்கள், கரடிகள், ராஜ நாகங்கள், மலைப் பாம்புகள் இங்குள்ளன. தூரத்தில் ‘ஹோ’ என பேரிரைச்சல் கேட்டது. ‘போனோ’ நீர்வீழ்ச்சி என்றார் காவலர். எல்லாம் தாமிரபரணிக்கான தண்ணீர்தான்.
(தவழ்வாள் தாமிரபரணி)