சிறப்புக் கட்டுரைகள்

சென்னை - கொலைகாரன்பேட்டை: கொலைக்குப் பெயர்போன ஊரா இது?

செய்திப்பிரிவு

சென்னை நகரில் உள்ள பல பகுதிகளின் தற்போதைய பெயர்களுக்கான காரணங்களைத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். சையத்கான்பேட்டை சைதாப்பேட்டையாக மாறியது. குரோம்பேட்டை என வழங்கப்படும் இடம் அங்கே க்ரோம் லெதர் தொழிற்சாலை தொடங்கப்பட்டதால் அப்பெயரைப் பெற்றது. தெய்வநாயக முதலியார் என்பவர் மிகுந்த செல்வமும் செல்வாக்கும் மிக்கவராக இருந்ததால், அவர் வசித்த ஊர் தெய்வநாயகம் பேட்டை என அழைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் தேனாம்பேட்டையாக மருவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

ஆனால், காரணமே சொல்ல முடியாத சில விசித்திரமான பெயர்களும் சென்னையில் உள்ளன. டுமீல் குப்பம், கொலைகாரன்பேட்டை போன்ற ஒரு சில பெயர்களுக்கான காரணங்களை அவ்வளவு தெளிவாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், உறுதிப்படுத்த முடியாத சில காரணங்கள் புழக்கத்தில் உள்ளன.

பெருநகரங்களின் சில இடங்களில், திடீரென்று மக்கள் திரளாக ஒரு இடத்தில் குடியேறி வாழத் துவங்குவர். மதுரையில் திடீர் நகர் என்பார்கள். சென்னையில் இவற்றை டுமீல் குப்பம் என்பார்கள். நகரங்களின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தப் பகுதிகளில் போதிய வாழ்வாதார வசதிகள் இருக்காது.

துப்பாக்கிக் குண்டுபோலத் திடீரென டுமீல் என்று கிளம்பும் ஊருக்கான பெயரைக்கூட ஒப்புக்கொண்டுவிடலாம். கொலைகாரன்பேட்டை என்னும் பெயரை எப்படிப் புரிந்துகொள்வது? அல்லி மலர்கள் நிறைந்த கேணியைக் கொண்ட ஊரான திரு அல்லிக்கேணிக்குப் பக்கத்தில், ராயர்களின் பேட்டையாக இருந்து ராயப்பேட்டையான ஊருக்குப் பக்கத்தில், இப்படி ஒரு ஊர். சென்னை ராயப்பேட்டை கௌடியா மடம் அருகில் உள்ள இரண்டு தெருக்களைக் குறிப்பிடும் சிறிய பகுதியின் பெயர்தான் கொலைகாரன்பேட்டை. இந்தப் பெயர்தான் அரசு கெஜட், வாக்காளர் பட்டியல், நகராட்சி வரி ஆவணங்கள் அனைத்திலும் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தெருக்களில் கொலைகாரர்கள் அதிகம் பேர் இருந்தார்களா? அதெல்லாம் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து குடியேறிய கல் தச்சர்கள், நகரின் ஆட்டுக்கல் அம்மிக்கல் தேவையை மட்டுமின்றி கட்டுமானத் தொழில்களுக்கு வேண்டிய பாறாங்கல், கருங்கல் ஆகியவற்றையும் விநியோகம் செய்தார்கள். இந்தக் காரணத்தினால் ‘கல் உடைக்கிறான் பேட்டை’ எனவும் ‘கல் -லொல்லர் பேட்டை’ எனவும் இப்பகுதி அழைக்கப்பட்டது. பொற்கொல்லர் போலக் கற்கொல்லர், கல்லொல்லர் என்று செந்தமிழில் வழங்கப்பட்டதாம். ‘கல் உடைக்கிறான் பேட்டை’ என்பது காலப்போக்கில் மருவிக் கொலைகாரன்பேட்டை ஆனதாகச் சொல்லப்படுகிறது.

கல்லுடைக்கிறான் அல்லது கல்லொல்லர் என்பது கொலைகாரனாக மாறுவதற்கான தர்க்கம் வலுவாக இல்லைதான். ஆனால், இந்தப் பகுதிக்கே பெயர் தருமளவுக்குக் கொலைகளும் இங்கே விழுந்ததாக எந்தப் பதிவும் இல்லை. ஆனால், கல் உடைக்கும் தொழில் நடந்ததற்கான சான்றுகள் உள்ளன.

SCROLL FOR NEXT