ஆ.ச.சேதுராமலிங்கம் என்ற எஸ்.எஸ்.ஆர்.லிங்கம் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் ஆத்மார்த்தமான வாசிப்பில் கரைத்தவர். ஜனவரி 16 அன்று தனது 94-வது வயதில் காலமானார். 7 ஆண் மக்கள், 2 பெண் மக்கள், 17 பேரன் பேத்திகள், ஒரு கொள்ளுப் பேத்தி என நிறைவான வாழ்வு அவருடையது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், பலசரக்குக்கடை நடத்திவந்தார். பல்வேறு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைக் கலைஞர்களோடு நெருங்கிப் பழகியவர். தனது வாழ்நாளில் சுமார் 27,600 புத்தகங்கள் வாசித்திருக்கிறார் என்பது வாசகர்களுக்குப் பெரும் உற்சாகமூட்டக்கூடிய தகவல். ‘கதைசொல்லி’ இதழின் உதவி ஆசிரியரான ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ், வாழ்க்கையே வாசிப்புக்காக அர்ப்பணித்துக்கொண்ட லிங்கத்தின் பேச்சுகளை எழுத்துகளாகவும் காணொலிகளாவும் ஆவணப்படுத்தியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள்...
வாசிக்கும் பழக்கம் இல்லை என்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்: சித்திரமும் கைப்பழக்கம் என்பதைப் போல வாசிப்பும் ஒரு பழக்கம்தான். ஒருமுறை நாம் வாசிப்பின் சுவையை உணர்ந்துவிட்டால் அது நம்மை விடாது.
முதலில் ‘அணில்’, ‘அம்புலி மாமா’ போன்ற அந்தக் காலத்தில் வந்த சிறுவர் இதழ்கள் படிப்புக்கு உறுதுணையாக இருந்தன. பின்பு, ஜே.ஆர்.ரங்கராசு, வடுவூர் துரைசாமியின் நாவல்கள், வை.மு.கோதை நாயகியின் நூல்களைப் படித்தேன். நாரண.துரைக்கண்ணன், வ.ராமசாமி, சாமி சிதம்பரனார், டி.எஸ்.சொக்கலிங்கம், சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா, சீனிவாசன், ந.சிதம்பர சுப்பிரமணியம், கு.ப.ரா., புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம், சங்கு சீனிவாசன், திருலோக சீதாராம், ஆர்.திருஞானசம்பந்தம், சண்முகசுந்தரம், இளங்கோவன், மௌனி உள்ளிட்ட எழுத்தாளர்கள் என் ரசனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்கள்.
மகாகவி பாரதி எனது சுதந்திர தாகத்துக்கு மூலகாரணமாக இருந்தார். பள்ளி விட்டு வந்தவுடன் பத்து மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு ஊர்வலம் நடத்தும்போது பாரதி கவிதைகளைப் பாடினோம். எனக்கு யாரும் இலக்கியம் சொல்லித்தரவில்லை; பாரதியே எனது வழிகாட்டி. பாரதியின் கவிதைகளை எப்போது வாசித்தாலும் அவை புதிய ஒளி தருகின்றன. எனது நூலகத்தில் மகாகவி பாரதி பற்றி 300 ஆய்வு நூல்கள் உள்ளன. எனக்கு 10 வயது இருந்தபோது நான் எடுத்து வாசித்த முதல் நூல் மகாகவி பாரதியாரின் புத்தகம்.
சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், வரலாற்று நூல்கள், பயண நூல்கள், தத்துவ நூல்கள் எல்லாவற்றிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. தமிழில் புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி, ந.சிதம்பர சுப்பிரமணியம், வ.ரா., ஆர்.சண்முகசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, நாகராஜா, அம்பை, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், பூமணி, பிரபஞ்சன், கி.ராஜநாராயணன், சோ.தர்மன், சுந்தர ராமசாமி, நா.பார்த்தசாரதி, அகிலன், விந்தன், சிட்டி பொ.கோ. சுந்தரராஜன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தி, எம்.வி.வி., கரிச்சான் குஞ்சு போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைச் சேகரித்துவைத்திருக்கிறேன். வீட்டில் என்னுடைய பெரும் சொத்து இவைதாம்.
வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது ஒரு தவம். நம் நெஞ்சில் எரியும் அணையாச்சுடர். மனிதர்களும் வாழ்க்கையும் எனக்கு ஏராளமான அனுபவங்களையும் தந்துள்ளனர். அதற்கு நிகரான அனுபவங்களைத் தந்தது புத்தகங்கள். ஒரு புத்தகம் என்னை மாற்றுகிறது. அதுவே வழிகாட்டியாகவும் ஆகிறது. எனக்கு ஒரு எழுத்தாளரைப் பிடித்துவிட்டது என்றால், அவர் எழுதிய அத்தனை நூல்களையும் வாங்கி வாசிப்பது பழக்கம். ஒரு எழுத்தாளர் எழுதும் எழுத்து சமூக முன்னேற்றத்துக்குப் பயன்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களை வாசிப்பதில் அர்த்தம் இல்லை!