சிறப்புக் கட்டுரைகள்

360: பாலினப் பாகுபாடில்லாத பொம்மைகள் - ஒரு ஆக்கபூர்வமான முன்னெடுப்பு

செய்திப்பிரிவு

இந்தப் புத்தாண்டுக்குப் பாலின வேறுபாடில்லாத பொம்மைகளைக் கொண்டுவந்துள்ளது ‘மேட்டல்’ நிறுவனம். ஆண் குழந்தை என்றால் வீடு கட்டும் பிளாக்குகள், துப்பாக்கிகள், ரயில், பஸ், கார் போன்றவற்றையும், பெண் குழந்தை என்றால் இளவரசி போன்ற பொம்மைகளையும் வாங்கித்தருவது நம் இயல்பாக இருக்கிறது. பிங்க் நிறம் என்றால், அது பெண் குழந்தைகளுக்கானது என்பது வேறு. ஆண் குழந்தைக்கு முடிவெடுக்கும் ஆற்றல், உடல் வலு, வீரம், தன்னம்பிக்கையை வளர்க்கும் பொம்மைகளும், பெண் குழந்தைகளுக்கு அழகுணர்ச்சி, தாய்மை ஆகியவற்றை இளவயதிலேயே ஊட்டும் பொம்மைகளும் வழங்கப்படுகின்றன.

இதனால், பெண் குழந்தைகள் இயல்பாகவே ஆண்களுக்குக் கட்டுப்படவும் டீச்சர், நர்ஸ் போன்ற பணிகளுக்கு மட்டுமே தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் உளவியல்ரீதியாகத் தயார்படுத்தப்படுகின்றனர். பெண்களைச் சீண்டுவது, பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவது போன்றவற்றுக்கு இந்தப் பாலின உணர்த்தல்களும் காரணம் என்பதால் முதன்முறையாக எந்தப் பாலினம் என்று அடையாளம் காண முடியாத அல்லது பொதுப் பாலின பொம்மைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. நாம் எளிதாகக் கடந்துபோகும் பல்வேறு சின்னச் சின்ன விஷயங்களில்தான் பாகுபாடுகள் ஊட்டப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு முன்னெடுப்புகளைக் கையில் எடுக்க வேண்டும்.


சமையல் புரட்சி

ஒடிஷா மாநிலத்திலேயே மிகவும் பின்தங்கியதும், பழங்குடிகள் அதிகம் வசிப்பதுமான கந்தமால் மாவட்டத்தில் சமையல் புரட்சி நடக்கிறது. வெறும் அரிசிச் சோறு, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வேகவைத்த உருளைக்கிழங்கையே பெரிய விருந்தாக இதுவரை சாப்பிட்டுவந்தவர்கள், காய்கறிகளையும் கீரைகளையும் சிறுதானியங்களையும் சமைத்துச் சாப்பிடப் பழகிவருகின்றனர். கோண்டு என்று அழைக்கப்படும் இந்தப் பழங்குடி மக்களுக்கு வாழைப்பழம், வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு போன்றவை சாப்பிடத்தகுந்தவை என்பதே தெரிந்திருக்கவில்லை. ஊட்டச்சத்துத் துறையினரும், மகளிர் நலத் துறையினரும், மாவட்ட ஆட்சியரக அதிகாரிகளும் முகாமிட்டு, எதையெல்லாம் சாப்பிடலாம் என்று கூறியபோது இவர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

எல்லோர் வீடுகளிலும் கோழி வளர்க்கிறார்கள். ஆனால், கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதில்லை. நகருக்குச் சென்று குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர். கோழிக்கறி, ஆட்டுக்கறியைப் பண்டிகை நாட்களில் மட்டும் சாப்பிடுவது வழக்கம். அதை விடுங்கள், வீடுகளில் பசு, எருமைகள் வளர்த்துவந்தாலும் இவர்கள் பால் சாப்பிடுவதில்லை. பாலிலிருந்து வெண்ணெய், நெய், மோர், தயிர் தயாரிக்கலாம் என்பதும் தெரியவில்லை. இப்போது காய்கறிகளையும் கீரைகளையும் நவதானியங்களையும் சமைத்துச் சாப்பிடப் பழகிக்கொண்ட பிறகு, சராசரியாக நடுத்தர வயதுப் பெண்கள் 5 கிலோ எடை கூடியிருக்கின்றனர். இந்த இயக்கத்தை இப்போது மாநிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

பார்த்த ஞாபகம் இல்லையோ?

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நூற்றுக்கணக்கான முகங்களை நினைவில்கொள்ளும் ஆற்றல் உண்டு. பலருக்கு முகங்கள் நினைவில் இருப்பதே இல்லை. சிலர், சமயத்தில் “ரொம்ப நேரமாக இங்கியே இருக்கீங்களே என்ன வேண்டும்?” என்று கேட்டு மனைவியிடமே கூட வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன? ஆராயாமல் விடுவார்களா? எவருக்குக் கருணையும், அடுத்தவர்கள் மீது அக்கறையும் இருக்கிறதோ அவர்கள் முகங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பார்களாம். நான்கு இடங்களுக்குப் போய் நாற்பது பேரிடம் பேசிப்பழகும் வாய் சாலாக்கு உள்ளவர்களுக்கும் முகங்கள் நினைவில் இருக்கும்.

யாருடனும் பேச விரும்பாமல் அல்லது கூச்சப்படும் மௌடீகர்களுக்குத்தான் முகங்களை அடையாளம் காணும் திறமை குறைவு. அதுமட்டுமல்லாமல், பதற்றம் அல்லது பயத்துடன் இருப்பவர்களுக்கு அல்லது அம்மாதிரியான சூழலில் ஒருவரைப் பார்த்தவருக்கு முகம் சரியாக நினைவுக்கு வராது என்கிறார்கள். நம்மைச் சுயபரிசீலனைக்கு உட்படுத்துகிறது இந்த ஆய்வு.

SCROLL FOR NEXT