சிறப்புக் கட்டுரைகள்

ஆண்மைமிக்க பெண்ணியவாதி

செய்திப்பிரிவு

ஷஹிதா

அடீச்சி எழுதிய ‘நாமெல்லாருமே பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’ கட்டுரை இப்படித்தான் முடிகிறது: ‘நான் அறிந்ததிலேயே, மிகச் சிறந்த பெண்ணியவாதி என் தமையன்தான். அவர் மிகவும் கருணையுள்ளவர். காண்பதற்கு வசீகரமாக இருப்பார். மிகவும் இனிமையானவர். மேலும், மிகவும் ஆண்மையுள்ளவர்.’

சீமமாண்டா எங்கோசி அடீச்சியை இப்படித்தான், இந்தக் கட்டுரையின் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டேன். அவரும் ஒரு ஆசிரியை என்ற அளவிலும், குதிகால் உயர்ந்த காலணிகளை அணிந்துகொள்வதிலும், உதட்டுச்சாயம் பூசிக்கொள்வதிலும், பெண்மையை வெளிப்படுத்தும் ஆடைகளை உடுத்திக்கொள்வதிலும் என்னைப் போலவே பிரியம் கொண்டவர் என்பதிலும், “நம் பெண்களை நாம் வேறு விதமாய் வளர்க்க வேண்டும், ஆண் பிள்ளைகளைக் கடினமானவர்களாக இருக்கப் பழக்காமல், வேறு விதமாக வளர்க்க வேண்டும்” என்று சொல்வதிலும் என்னில் பெரிய ஆளுமை செலுத்திவரும் பெண்மணியாக அடீச்சி இருக்கிறார்.

இப்போது எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது, பெண்ணடிமைத்தனம் எல்லாம் இன்னமும் உண்டா என்று கேட்கிறீர்களா? உங்களுக்குச் சொல்வதற்காகத்தான் எத்தனை எத்தனை உண்மைக் கதைகள் என்னிடத்தில்!

எங்கள் ஜமாஅத்தில் ஒரு விவாகரத்து வழக்கு. பெண் எங்களுக்கு நெருங்கின சொந்தம், அவளுடைய மாப்பிள்ளை, தலாக் வேண்டி, அவளுக்கு எதிராக அடுக்கின அத்தனை குற்றச்சாட்டுகளையும் மௌனமாக எதிர்கொண்டு, “உன் கணவன் விவாகரத்து வேண்டுகிறான், உன் பதில் என்ன?” என்று கேட்டதற்கு, “அவருக்குப் பிரியமானது எதுவோ அதையே எப்போதும் செய்தேன், இப்போதும் செய்கிறேன்” என்று பதில் சொன்ன காரணத்தால், அந்தக் கூட்டத்தையே உணர்ச்சிவசப்படச்செய்து, அதற்குப் பின் அந்த ஜமாஅத் சந்தித்த எல்லா தலாக் வழக்குகளிலும் பெண்களுக்கான இலக்கணமாகப் பேசப்பட்டாள். இப்படியான மங்கையருள் மாணிக்கங்களை வளர்க்கும் தாய்மார்களைத் தயார்படுத்தும் பணியும் செவ்வனே தொடர்ந்து செயலூக்கம் பெற்றுவருகிறது.

இங்கு பள்ளிப்படிப்பை முடித்ததும் பெண் மணம் முடிக்கப்படவில்லை என்றால், பட்டப்படிப்பு படித்த மணப் பெண்களுக்கான தேவை அவர்களுக்கு நெருங்கின சுற்றத்தில் பெருகிவிட்டது என்பது ஒன்றேதான் காரணம். குறிப்பாக, இனஜினீயரிங் படித்த பெண்களுக்கான டிமாண்ட் இப்போது சில வருடங்களாக மிக அதிக அளவில் பெருகியிருக்கிறது. வெறும் கலைக் கல்லூரிப் படிப்பல்ல அது என்பதாலும், மருத்துவத் துறை சார்ந்த படிப்பு என்றால், பெண்கள் நிச்சயம் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கியிருக்கப்போவதில்லை என்ற காரணத்தாலும். ஆண்மையச் சமூகத்தின், கூழுக்கும் மீசைக்குமான ஆசை நூறு சதவிகிதம் இதில் நிறைவேறுகிறது. அதோடும்கூட, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவளை வீட்டில் அடக்கி ஆள்வதைப் போல ஆண்மை வெளிப்பாட்டு ஆனந்தம் வேறெதில் இருக்கிறது?

எங்களுடைய கலாச்சாரத்திலும் வழக்கங்களிலும் இயன்ற வரையிலும் பேணுதலாய் இருக்க முயலும் அதேசமயம், பெண்களுக்கு எதிரான கண்மூடித்தனமான அடக்குமுறைகளையும், பொருளாதார சுதந்திரத்தைப் பெண் எக்காரணம் கொண்டும் பெற்றுவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருக்கும் எம் சமூக விதிகளைக் கடுமையாக விமர்சித்துக்கொள்கிறேன்.

அடீச்சியின் தமையனைப் போன்ற ஆண்மை மிக்க, பெண்ணியவாதியை என் வாழ்நாளில் நான் அறியவேயில்லை. ஒருவேளை, என் மகனிடம் என் மகளோ மருமகளோ அவனுடைய தோழியோ அப்படியொரு பெண்ணியவாதியைத் தெரிந்துகொள் வாளானால் அதையே என் வாழ்நாள் சாதனையாக எண்ணிப் பெருமைகொள்வேன்!

- ஷஹிதா, ‘அன்புள்ள ஏவாளுக்கு’ நாவலின் மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: shahikavi@gmail.com

SCROLL FOR NEXT