இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றை மட்டுமல்ல, தேசிய அரசியலின் எதிர்கால நிறத்தையும் பருவநிலையையும்கூட மாற்றிய தொலைக்காட்சித் தொடர் ‘ராமாயண்’. தூர்தர்ஷனில் 1987-ல் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகத் தொடங்கியது. பழமையின் சாயல் ஏறிப்போயிருந்த ராமாயணம், அதன் பிறகு நவீன மின்னணுத் தொழில்நுட்ப அவதாரம் எடுத்தது.
சினிமா இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் கொடிகட்டிப் பறந்த ராமானந்த் சாகர், ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது, ‘ராமாயண்’ கதைத்தொடருக்கான முதல் உந்துதலைப் பெற்றார். அங்கு, சாலையோர கஃபே ஒன்றில் வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சினிமாவைப் பார்த்தபோது, தொலைக்காட்சி வடிவத்தின் மாயம் உடனடியாக அவரை ஈர்த்தது. ‘நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன். தொலைக்காட்சிக்குப் போகப்போகிறேன். மரியாதையின் இலக்கணமான ராமனின் கதையை எடுக்கப்போகிறேன். அதுதான் இனி என் வாழ்க்கையின் லட்சியம்’ என்று தனது மகனிடம் அவர் பகிர்ந்துகொண்டது அப்போதுதான்.
சினிமா புகழின் உச்சத்தில் இருந்த ராமானந்த் சாகரின் இந்த முடிவை அவரது சகாக்களும் நண்பர்களும் தற்கொலை முயற்சியாகப் பார்த்தனர். ஒரு புராணக் கதையைப் போய் இந்தக் காலத்தில் யார் பார்க்கப்போகிறார்கள் என்று நினைத்தனர். ராமானந்த் சாகர் தன் முயற்சியை விடவில்லை. சாகரின் இந்த முடிவுக்குக் காரணம், அப்போதைய பாலிவுட் திரையுலகில் அதிகரிக்கத் தொடங்கியிருந்த நிழல் உலகினரின் ஆதிக்கம் என்றும் சொல்லப்படுகிறது. தூர்தர்ஷனில் அதற்கு முன்பே ஒளிபரப்பாகி வெற்றிபெற்ற விக்ரமாதித்ய-வேதாளக் கதையான ‘விக்ரம் அவுர் பேடால்’-ல் நடித்த நடிகர்கள், நடிகைகளையே ராமாயணுக்கும் ராமானந்த் சாகர் ஒப்பந்தம் செய்தார். அருண் கோவில் ராமனானார். தீபிகா சிக்காலியா சீதையானார். தாராசிங் அனுமன் ஆனார்.
முதலில், தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் மதரீதியானது என்று சொல்லி ராமாயணத்தை ஒளிபரப்புவதற்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை. தூர்தர்ஷன் அதிகாரிகளோ ராமாயணம் என்பது ஒரு சிறந்த ஒழுக்கமுள்ள மனிதனின் கதை என்று வாதாடினார்கள். அப்போது தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த வி.என்.காட்கில், இந்தக் காவியத்தை ஒளிபரப்புவதன் மூலம் இந்துத்வ சக்திகளுக்கு எழுச்சியும் பாஜகவுக்கு ஆதரவும் பெருகும் என்று உணர்ந்து அனுமதியளிக்க மறுத்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களை ஒளிபரப்புவதன் மூலம் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பெருமையையும் காட்ட முடியும் என்று ராஜீவ் காந்தி சாதகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
1986-ம் ஆண்டு இறுதியில் வி.என்.காட்கில் வேறொரு அமைச்சரவைக்கு மாற்றப்பட்டார். ஒருவழியாக, 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி கிடைத்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘ராமாயண்’, இரண்டாவது வாரத்திலேயே இந்திய வீடுகளில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. 65 கோடி பார்வையாளர்களை ஈர்த்த ராமாயண், 55 நாடுகளில் வீடியோ கேசட்களாகத் தொடர்ந்து பார்க்கப்பட்டுக்கொண்டே இருந்தது. சுமார் ஒரு கோடி வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சிகள் இருந்த காலம் அது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வடமாநிலங்களில் ராமாயணம் ஒவ்வொரு ஞாயிறும் ஒளிபரப்பப்பட்டபோது, தங்களது வீட்டுக்குக் கடவுள்கள் வந்த அனுபவத்தை அடைந்ததாக தூர்தர்ஷனுக்குக் கடிதங்கள் வரத் தொடங்கின.
“ராமானந்த் சாகர், ராமாயணத்தை எடுத்ததும், தூர்தர்ஷனில் அது வெளியாகி அமோக ஆதரவைப் பெற்றதும் திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல” என்கிறார் அவரது மகன் ப்ரேம் சாகர். தற்போது அவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ப்ரம் பர்சாத் டூ ராமாயண்’ புத்தகம் பரபரப்பாகப் பேசப்படுகிறது!
- ஷங்கர்