சிறப்புக் கட்டுரைகள்

உலக நாடுகள் முயன்றுபார்க்க ஒரு சமூக ரயில்

செய்திப்பிரிவு

ஜூரி

பிரிட்டனின் தலைநகர் லண்டனிலிருந்து வேல்ஸ் பகுதியில் பயணிக்கும் சமூக ரயிலில் செல்வது அலாதியான இன்பம் அளிப்பதுடன் சமூகங்களையும் இணைக்கிறது. ஒற்றை ரயில் பெட்டியில் கிராமப்புறங்கள் வழியாக ரயிலில் செல்லும்போது கிடைக்கும் இன்பம் சொல்லிமாளாது. எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்களை ஒதுக்கித்தள்ளக்கூடிய அளவுக்கு நன்னம்பிக்கையை விதைக்கும் பயண அனுபவம் இது.

ஷ்ரூஸ்பரி முதல் ஸ்வான்சீ வரையில் 120 கிமீ தொலைவுக்கு ஒரே ரயில் பாதையில் செல்லும் ஒற்றைப் பெட்டிதான் இந்த ரயில். இது ஆறு குகைகளையும் இரண்டு சாலைப் பாலங்களையும் கடக்கிறது. இந்த ரயிலுக்கு 29 நிறுத்தங்கள். அதில் பயணிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப நிற்கப்பட வேண்டிய நிறுத்தங்கள் 16. பயணிப்பவர்கள் நடத்துநரிடம் முன்னதாகவே சொல்லி தங்கள் நிலையத்தில் இறங்கிக்கொள்ள வேண்டும். ஏற விரும்புகிறவர்கள் நடைமேடையில் நின்று கையை அசைத்து ஓட்டுநரின் கவனத்தை ஈர்த்து ரயிலை நிறுத்திக்கொள்ளலாம். சில நிலையங்கள் ஆளரவமற்று இருக்கும்.

இந்த ரயில் சேவையை நிறுத்த முடியாது. ஏனென்றால், பிரிட்டனின் நாடாளுமன்றம் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தொகுதியை இது மூன்று இடங்களில் தொட்டுச்செல்கிறது என்கிறார்கள். வார நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் நான்கு நடைகள் செல்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு முறை மட்டுமே. நடப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், பதின்பருவ இளைஞர்கள், சொந்தமாக கார் வைத்துக்கொள்ளாமல் இருக்கும் நடுத்தர மற்றும் எளிய பிரிவினர் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்த ரயில் செல்லும் பாதையில் வசிப்பவர்கள் ரயிலின் நடையை மேலும் கூட்ட வேண்டும் என்கின்றனர். ரயில் பெட்டி தயாரித்து நீண்ட நாட்களாகிவிட்டதால் புதிய பெட்டி வேண்டும் என்பது அடுத்த கோரிக்கை. இந்தப் பழைய ரயிலில் இலவச வைஃபை வசதிகூட உண்டு! சந்தைப் பொருளாதார நியதிகளுக்குக் கட்டுப்படாத இந்த ரயில் சேவை இன்னமும் எதற்கு என்று வலதுசாரிகள் கேட்கக்கூடும். வழியில் உள்ள நிலையங்களில் ஊழியர்களே இல்லாமல் தன்னார்வத் தொண்டர்களை வைத்து ஒரு ரயில் சேவையா என்று இடதுசாரிகள் பொருமக்கூடும். இந்த சேவை இந்தப் பாதைக்கு அருகில் வசிப்பவர்களுக்கு அவசியம் தேவை என்பதையே இதன் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பு சொல்கிற சேதி. இந்த ரயில் பாதையும் ரயில் நிலையக் கட்டிடங்களும் அரசுக்குச் சொந்தமானவை. சேவையை நடத்துவதோ வேல்ஸ் ரயில் சேவை நிறுவனம். உலகின் பிற நாடுகளிலும் இதைப் போன்ற சமூக ரயில் சேவையை முயன்றுபார்க்கலாம்.

தோட்டக்காரர்கள், சிறு வியாபாரிகள், சிறு தொழிலதிபர்கள், மாணவர்கள், எளியவர்கள் இதை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ரயில் நிலையங்களைத் தன்னார்வத் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் பராமரிக்கின்றனர். மலர்ப் போர்வை போர்த்தியதைப் போன்ற நடைமேடைகள், பூசி மெழுகிய சுத்தமான தரை, தகவல்களைத் தெரிவிக்கும் கம்பீரமான அறிவிப்புப் பலகைகள், உட்கார்ந்து ஓய்வெடுக்க ஏதுவான சிறப்பான சாய்வு இருக்கைகள் என்று ரயில் நிலையம் எல்லா ஒழுங்குகளோடும் இருக்கிறது. லாபநோக்கமின்றி ரயில் சேவை தொடர்கிறது. அரசுக்கும் அதிக செலவில்லை; மக்களுக்கும் மானியச் சுமை இல்லை. லாண்டோவரி என்ற இடத்தில் சமூக காபி கிளப்கூட நடைமேடையிலேயே இருக்கிறது. சமூக ரயில் சேவை என்ற புதிய நடைமுறைக்கு நல்ல இலக்கணம் இது.

SCROLL FOR NEXT