அழகான பாண தீர்த்தம் அருவி ஆபத்து நிறைந்தது. எப்போது வெள்ளம் வரும் என்றுச் சொல்ல முடியாது. பொதி கையின் அடைமழை சில நிமிடங்களில் பாண தீர்த்தத்தை முழ்கடித்துவிடும். அதில் இறந்தவர்கள் ஏராளம்.
மேலணை கட்டப்படாத காலகட்ட மான 1925-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி வ.வே.சு.அய்யரையும் அவரது மகள் சுபத்ராவையும் வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் இருவருமே இறந்துப் போனார்கள். இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கிய 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கல்யாண தீர்த்தம் அருவி அருகே 8.8.1957-ல் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் ‘வ.வே.சு. அய்யர் ஞாப கார்த்த’ மண்டபத்தை திறந்து வைத்தார்.
தாமிரபரணியில் முதல் கழிவு
பாண தீர்த்தத்தை வான தீர்த்தம் என்றும் அழைக்கிறார்கள். ராமன் தனது தந்தை தசரதனுக்கு இங்கே திதி செய்ததாக சொல்கிறது புராணம். தடைக்கு முன்பு வரை ஆடி அமாவாசைக்கு மக்கள் இங்கே வந்து முன்னோர்களுக்கு திதி செய்து வந்தனர். பாண தீர்த்தத்துக்கு கீழே இருக்கிறது பாபநாசம் (காரையாறு) மேல் அணை. கீழே இறங்கினால் சொரிமுத்து அய்யனார் கோயில். ஆடி அமாவாசைக்கு முன்னதாக தொடர்ந்து 10 நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் இங்கு வந்து தங்குகிறார்கள். மனிதர்களின் மொத்தக் கழிவும் ஆற்றில் கலக்கிறது. நதி முதன் முதலாக மாசுபடுவது இங்கேதான்.
முன்பு ஏராளமான பிளாஸ்டிக் குப்பை கள், பாட்டில், துணிகள் ஆற்றில் வீசப்பட்டன. சமீப காலமாக வனத்துறை யினரின் தீவிர நடவடிக்கையால் கழிவு கள் கொட்டுவது கட்டுப்படுத்தப்பட்டிருக் கிறது. தொடர்ந்து சேர்வலாற்றை கடந்தால் கீழணை. அதற்கு கீழே இருக்கிறது கல்யாண தீர்த்தம் அருவி. இங்கே சிவன் கோயில் இருக்கிறது. இதற்கும் கீழேதான் அகத்தியர் அருவி. அடுத்து தலையணை என்கிற கோடை மேலழகியான் அணைக்கட்டு இருக்கிறது. இதில் வடக்கு கால்வாயில் 325 ஏக்கர் குளத்துப் பாசனம் உட்பட மொத்தம் 2,260 ஏக்கர் நிலமும், தெற்கு கால்வாயில் நேரடியாக 870 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன.
தலையணை தொடர்பாக இந்தப் பகுதி மக்களிடம் ஒரு செவிவழிக் கதை நிலவுகிறது. ஒரு காலத்தில் பாண்டிய மன்னனுக்கும் எதிரிகளுக்கும் சண்டை மூண்டபோது சிறுவனாக இருந்த பாண்டிய மன்னன் களக்காட்டிலிருக்கும் கோட்டையில் ஒளிந்துக் கொண் டான். அங்கேயும் எதிரிகள் சூழ்ந்துக் கொள்ள தனது தலையை தானே அறுத்துக்கொண்டு தாமிரபரணியில் விழுந்தான். அவனது தலை ஒதுங்கிய இடம் தலையணை என்றும், முண்டம் ஒதுங்கிய இடம் முண்டந்துறை என்றும் பெயர் பெற்றது என்கிறார்கள். இதற்கு கீழே பாபநாசம் சிவன் கோயில் இருக்கிறது. இங்கே நதியில் முன்னோர் களுக்கு திதி செய்கிறார்கள். இதுவரை வடக்கு நோக்கி பயணித்த நதி, இங்கே தான் கிழக்கு நோக்கி திரும்புகிறது.
தரைக்கு இறங்குகிறாள் தாமிரபரணி
பாபநாசம் கடந்தால் விக்கிரமசிங்க புரம். இதுவரை குறிஞ்சியிலும் முல்லையிலும் பாய்ந்த தாமிரபரணி, மருதத்துக்குள் நுழைகிறாள். இங்கே தனியார் ஆலை உள்ளது. தாமிரபரணி நதியில் முதன்முதலில் ரசாயணக் கழிவுகள் கலப்பது இங்கேதான். வழிநெடுக நெல், கரும்பு, வாழை என பசுமை படர்ந்திருக்கிறது. பாம்புகள் போல ஊர்ந்துச் செல்கின்றன கால்வாய்கள். நதியின் ஒருபக்கம் அம்பாசமுத்திரம், மறுபக்கம் கல்லிடைக்குறிச்சி. இங்கே நதியுண்ணி அணைக்கட்டு இருக்கிறது. இங்கிருந்து கன்னடியன் கால்வாய் தொடங்குகிறது.
பிரபல நெல் வகைகளான ‘அம்பை 16’, ‘அம்பை 36’ உருவானதும் இங்கே தான். கல்லிடைக்குறிச்சிக்கு முன்பாக ஆலடியூரில் தாமிரபரணியுடன் மணி முத்தாறு கலக்கிறது. கல்லிடைக் குறிச்சியின் அக்ரஹாரத்து குடியி ருப்புகள் அழகானவை. வீட்டுக் கொல்லைகளை செல்லமாக உரசிக் கொண்டு ஓடுகிறது கன்னடியன் கால் வாய். அடுத்து வருகிறது மஞ்சலாறு அணைக்கட்டு. இங்கிருந்துதான் வறட்சி பகுதியான நாங்குநேரிக்கு தாமிர பரணி யின் தண்ணீரைக் கொண்டுச் செல்லும் வெள்ள நீர் கால்வாய் தொடங்கப்பட்டு, திட்டம் தொங்கலில் நிற்கிறது.
மறுகரையில் இருக்கிறது திருப்புடை மருதூர். வரலாற்று சிறப்பு மிக்க ஊர். இங்கே கருணை (கடனா) நதி, ராம (வராக) நதி ஆகியவை தாமிரபரணியுடன் இணைகின்றன. நதிக்கரையில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமாண்டமான நாறும்பூநாத சுவாமி கோயில் உள்ளது. கோயிலின் ஐந்து அடுக்கு கோபுரங்களில் மீரல் வகை சிற்பங்கள், மரச்சிற்பங்கள் இருக்கின்றன. கோயிலில் மருதமரம், நெட்டிலிங்கம் மரம், இலுப்பை மரங்கள் பிரமாண்டமாக வளர்ந்திருக்கின்றன. இந்த மரங்களுக்கு ஜனவரி முதல் ஜூன் வரை ஆஸ்திரேலியா, கனடா நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வருகின்றன. இதனை திருப்புடைமருதூர் பறவைகள் காப்ப கமாக வனத்துறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து முக்கூடல், அரியநாயகி புரம், சேரன்மகாதேவி வழியாக தாமிர பரணி பயணிக்கிறாள். இங்கும் உள்ள தனி யார் ஆலைகளாலும் நதியில் ரசாயனக் கழிவுகள் கலக்கின்றன. தமிழகத்தில் கும்பகோணத்துக்கு அடுத்தபடியாக பெரிய கோயில் நகரம் (42 கோயில்கள்) சேரன்மகாதேவி. இதன் வரலாற்றுப் பெயர் சதுர்வேதி மங்கலம்.
இங்கிருந்த பரத்வாஜ் ஆசிரமத்தில் இரட்டை குவளை முறை இருந்ததை கண்டித்து, நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பெரியார், காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்த இடம்தான் சேரன்மகாதேவி.
பத்தமடை பாய்
சேரன்மகாதேவிக்கு மறுகரையில் இருக்கிறது கோடகநல்லூர் (கோடைக்கு உகந்த நல்லூர்). அடுத்து, பத்தமடை. உலகப்புகழ் பெற்ற பத்தமடை பாய் இங்கே தயாராகிறது. தாமிரபரணி கரையில் விளையும் ஒருவகையான நாணலை ஏழு நாட்கள் ஓடும் தண்ணீரில் ஊற வைத்து பாயை நெய்கிறார்கள். எலிசபெத் மகாராணி தொடங்கி நடிகர் ரஜினிகாந்த் வரை பத்தமடை பாயை பரிசாக பெற்றிருக்கிறார்கள்.
அடுத்து கரிசூழ்ந்தமங்கலம், பழவூர் அணைக்கட்டு (பாளையங்கால்வாய்), மேலச்சேவல், திருநெல்வேலி (சுத்த மல்லி) அணைக்கட்டு வழியாக திருநெல்வேலி நகரை வந்தடைகிறாள் தாமிரபரணி!
(தவழ்வாள் தாமிரபரணி)