சிறப்புக் கட்டுரைகள்

ராஜதானி எக்ஸ்பிரஸ்: யாசகம் குற்றமல்ல

ஷங்கர்

ஜம்மு-காஷ்மீரில் பிச்சை எடுப்பதைக் குற்றமாக்கும் சட்டங்களுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு கவனிக்க வைக்கிறது. 1958-ல் பிச்சையெடுப்பதற்கு எதிராக பம்பாயில் அமல்படுத்தப்பட்ட சட்டம், பின்னர் இதர மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

வழக்கத்துக்கு மாறான வாழ்க்கையை, வாழ்நிலையைத் தேர்ந்தெடுக்கும் மக்களைக் குற்றவாளிகளாக்கும் ‘குற்றப் பழங்குடிச் சட்டம்’ போன்றது இது என்று ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல், பிச்சைக்கு எதிரான சட்டங்களை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளார். மனித கௌரவம், சமத்துவம், சுதந்திரத்துக்கு எதிரானவை என்றும் இதுபோன்ற சட்டங்களைப் பற்றி கருத்து கூறியுள்ளார்.

யாசகத்தை இந்தியச் சட்டங்கள் எப்படிப் பார்க்கின்றன?

வாழ்வாதாரத்துக்கு அடிப்படை எதுவுமின்றி ஆங்காங்கே திரிவதும் பொது இடங்களில் இருப்பதும் உணவை மற்றவர்களிடமிருந்து தானமாகப் பெறுவதும் பிச்சை என்று வரையறுக்கப்படுகிறது. இப்படியாக, பிச்சை எடுக்கும் செயலைக் குற்றப்படுத்துவதற்கு அப்பால், அலைந்து திரியும் மக்களையும், பிச்சையெடுக்கலாம் என்று கருதக்கூடியவர்களையும் குற்றப்படுத்துவதாக அது மாறிவிட்டது. ஏழைகளாகவோ ஏதிலிகளாகவோ தெரியும் தனிநபர்களைப் பொது இடங்களிலிருந்து அப்புறப்படுத்தித் தூய்மைப்படுத்தும் வேலையையே இதுபோன்ற சட்டங்கள் செய்கின்றன.

இப்படியாக, ‘பிச்சை’யெடுக்கும் நிலையில் ஒருவரைக் கண்டால், அவரை வாரன்ட் இல்லாமல் கைதுசெய்து ‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்ல’த்துக்கு அனுப்பலாம். அவரே இரண்டாவது முறையும் பிடிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கப்படலாம் என்ற நிலைமை உருவானது.

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிச்சைக்கு எதிரான சட்டங்களின்படி, பிச்சையெடுப்பவர்கள் போலீஸாரால் பிடிக்கப்பட்ட பின்னர், மொட்டை அடித்து, அவர்கள் அணியும் உடைகளை அகற்றித் தூய்மைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

இப்படியான நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பிச்சையெடுப்பதற்கு எதிரான சட்டங்களை எதிர்த்து சுஹைல் ரஷித் பட் என்பவர் பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அவரது மனுவுக்கு எதிராக வாதிட்ட அரசுத் தரப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாக்க இந்தச் சட்டம் தேவை என்று வாதிட்டது. பிச்சைக்காரர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பதாலும், ஒருங்கிணைக்கப்பட்ட பிச்சை வணிகத்தைச் செய்பவர்களைக் கண்டறிவதற்காகவும் இந்தச் சட்டங்கள் அவசியம் என்றும் வாதிட்டது.

“யாசகம் கேட்பதும் வீடற்றவராக இருப்பதும் மோசமான வறுமையின் அறிகுறிகளாகும். சமூக அடிப்படையில் உருவான ஒரு வலையில் அகப்பட்டுவிட்ட மனிதரே பிச்சைக்காரராக அவதாரம் எடுக்கிறார். அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படையான வசதிகளைக் கொடுக்க இயலாமல் அரசு தோல்வியடைந்ததன் சாட்சியம் இது. பிச்சையெடுப்பது என்பது, யாசகம் கேட்பதன் வழியாக ஒரு மனிதர் தனது நிலையை இன்னொருவருக்கு அமைதியான வழியில் சொல்லி உதவியை நாடுவதாகும்” என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்துடன் இந்தியாவில் நாடோடிகளாகத் தங்களது வாழ்க்கையைத் தொடரும் இனத்து மக்களான குஜ்ஜார்கள், பகர்வால்களின் இயற்கையான நடமாட்டங்களையும் வாழ்வாதாரப் பணிகளையும் இதுபோன்ற சட்டங்கள் குற்றப்படுத்தும் என்றும் கூறியுள்ளது. வறுமையைக் குற்றப்படுத்துவதன் மூலம் பிச்சைக்கு எதிரான சட்டம் என்பது அடிப்படை மனித மாண்பை மீறுகிறது என்றும் நீதிபதிகள் கீதா மிட்டலும் ராஜேஷ் மிண்டலும் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT