சிறப்புக் கட்டுரைகள்

பெண் பார்வை: மார்கச்சை அணியா தினத்தின் உண்மையான நோக்கத்தை அறிந்திருக்கிறோமா? 

செய்திப்பிரிவு

நவீனா

ரவிக்கை அணியாமல், ஊசிக்கட்டம் போட்ட சுங்குடிச் சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டி, முற்றிலும் உடல் வளைந்து முழுவதும் கூன் விழுந்த நிலையில், இரண்டு கைகளையும் தரையில் பதித்து, ஏறத்தாழ வீதிகளில் தவழ்ந்துவரும் மரியாயிப் பாட்டியை எனது கிராமத்து வீதிகளில் இன்றும் பார்க்கலாம்.

ஒருமுறை, “ஏ பாட்டி, நீ என்ன ஊருக்குள்ள ரவிக்க போடாம செக்ஸியா சுத்திகிட்டுத் திரியிற?” என்று வம்பிழுக்க, தலையை மட்டும் தூக்கிப் பார்த்தபடி, “அடியே, ஒனக்கு என்ன மத்தியானமா இருக்கா? ஓந்தாத்தாவே போய்ச் சேர்ந்துட்டாரு, இனி ரவிக்க போட்டா ஊரு என்னைய சிரிப்பா சிரிக்காது?” என்றார். ‘நோ பிரா டே’ ஒன்றும் தமிழ்க் கலாச்சாரத்துக்குப் புதிதல்ல என்று நைச்சியமாகச் சொல்லிக்கொள்ள இங்கு நிறைய மரியாயி பாட்டிகள் இருக்கிறார்கள்.

மார்பகப் புனரமைப்பு அறுவைசிகிச்சை குறித்த விழிப்புணர்வு தினம் (Breast Reconstruction Awareness Day) என்பதன் சுருக்கமே ‘பிரா’ தினத்தின் நீட்சியாக அக்டோபர் 13-ம் நாள் மார்கச்சை அணியா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, மார்கச்சை அணியா தினமானது, இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது மற்றும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சார உத்தியாகவே மேலைநாடுகளில் கருதப்படுகிறது.

காலச் சுழற்சியில் வேண்டியதும் வேண்டாததாய்ப் போகும் என்பதற்கு ஏற்ப, தமிழகம் மார்கச்சை அணிவது தொடர்பான சச்சரவின் இரு முகங்களையும் பார்த்திருக்கிறது, மார்கச்சை அணிவது பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை. சுமார் நான்கு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த இந்த அடக்குமுறையை அழித்து எழுதிய தோள்சீலைப் போராட்டம், 37 ஆண்டுகாலம் நீண்டது.

இதை வரலாற்றாசிரியர் சாமுவேல் மேற்றீர், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அணிந்துவந்த ‘மேல்முண்டு’ எனும் மார்கச்சையை, அனைத்து இனத்தவரும் அணிவதற்கான உரிமைப் போராட்டம் என்கிறார். ‘சீலை’ என்பது பெண்கள் அணியக்கூடிய உடை வகைமைகளுக்குப் பொதுப் பெயராக வழங்கிவந்ததையும் சுட்டுகிறார்.

பெரும்பான்மையான சமூகங்களில் கணவனை இழந்த பெண்களின் தலைமுடியை மழித்து, அவர்கள் ரவிக்கையும் மார்கச்சையும் அணிவதைத் தடை செய்திருந்தனர். இளம் கைம்பெண்களுக்குக்கூட இதிலிருந்து விதிவிலக்கில்லை. 1856-ல் விதவைகள் மறுமணச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரே கைம்பெண்கள் உடைரீதியாக ஒடுக்கப்படும் அபத்தங்கள் குறையத் தொடங்கின. முன்பு, எதன்பொருட்டு பெண்கள் உரிமை கோரினார்களோ, அதன் சிறப்புகளையே இப்போது மறுதலிக்கின்றனர்.

மார்கச்சை அணியா தினம் கொண்டாடும் அதேவேளையில், கட்டாயம் மார்கச்சை அணிய வேண்டிய தருணங்களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது மார்பகங்களில் காயம் ஏற்படாமல் பாதுகாக்கவும், குழந்தைகளுக்குப் பாலூட்டும் காலங்களில் பால்கட்டு மற்றும் பால் வெளியேறி வீணாவதைத் தடுப்பதற்காகவும் கட்டாயம் மார்கச்சை அணிய அறிவுறுத்தப்படுகின்றனர்.

பெரும் போராட்டப் பின்னணியிலிருந்து வந்த மார்கச்சை இன்று வெறும் அழகு சாதனப் பொருளாகச் சுருங்கிவிட்டது வேதனைதான். சௌகரியம், பயன்பாடு, உடலமைப்பு சார்ந்த வகைகளைவிட மூச்சுமுட்ட வைக்கும் மார்கச்சைகளையே இன்றைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மேலும், இத்தகைய தினங்களைக் கொண்டாடுவது சார்ந்த புரிதல்களும் பெரும்பாலானவர்களிடம் இல்லாததால், அந்தத் தினங்களின் குறிக்கோள்களும் திசைதிருப்பப்படுகின்றன. தவறு எங்கு நிகழ்கிறது என்கிற தெளிவுதான் இப்போது பெண்களுக்கு அவசியம். அந்தத் தெளிவு சார்ந்து இத்தகைய தினங்கள் கொண்டாடப்படும்போதுதான் அதன் நோக்கங்களும் வெற்றியடையும்.

- நவீனா, ‘லிலித்தும் ஆதாமும்’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writernaveena@gmail.com

SCROLL FOR NEXT