சிறப்புக் கட்டுரைகள்

360: உடல் பருமன் ஆரோக்கியமா?

செய்திப்பிரிவு

உடல் பருமன் ஆரோக்கியமா?

உடல் பருமனுடன் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதய நோயில் ஆரம்பித்துப் பல நோய்களும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், உடல் பருமன் கொண்ட சிலர் விதிவிலக்காக ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்பது அறிவியலாளர்களே வியக்கும் விஷயம்.

ஆனால், தற்போது இதற்கான விடையைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆரோக்கியமாக இருக்கும் உடல் பருமன் கொண்டவர்களின் கொழுப்பில் ரத்தக் குழாய்கள் வளர்வதே இதற்குக் காரணம் என்பது எலியை வைத்து செய்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

எலியின் ரத்த நாளங்களைச் சூழ்ந்திருக்கும் உணர்வேற்பி செல்லான ஐ.ஜி.எஃப்.1-ஆர்-ஐ நீக்கிவிட்டு, அதிகக் கொழுப்பான உணவுகளை அந்த எலிக்குத் தந்திருக்கின்றனர். அப்போது எலியின் கொழுப்பில் புதிய ரத்தக் குழாய்கள் வளர்வதைக் கண்டறிந்திருக்கிறார்கள். இது இதய நோய், ரத்தவோட்டம் தொடர்பான நோய் போன்றவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இதனால், உடல் பருமனுடன் இருப்பதுதான் ஆரோக்கியம் என்று தவறாக முடிவெடுத்துவிட வேண்டாம். இது விதிவிலக்கான சிலருக்கு மட்டுமே பொருந்தும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் கட்டுப்பாடான உணவு முறையுமே நம்மை உடல் பருமனால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சத்துணவு இனியார் கையில்?

அசாமில் சத்துணவுப் பணியாளர்கள் வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக சத்துணவுத் தயாரிப்பு அவர்கள் கையில் இருந்த நிலையில், தற்போது அவர்களிடமிருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

மையப்படுத்தப்பட்ட அமைப்பு ஒன்றிடம் சமையலுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதனால், அசாமில் உள்ள 1.2 லட்சம் சத்துணவுப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

‘அந்தப் பணியாளர்களின் வேலைக்கு எந்த ஆபத்தும் இல்லை; இதுவரை உணவு தயாரித்த அவர்கள் இனிமேல் உணவு பரிமாறுவார்கள்’ என்று அலட்சியமாகப் பதில் சொல்கிறது மாநில அரசு. சத்துணவு ஊழியர்களுக்கு மாதம் வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? வெறும் ஆயிரம் ரூபாய்தான்.

இந்த சொற்பத் தொகைக்கும் ஆபத்து வந்துவிட்டதால் அடுத்து பட்டினிப் போராட்டத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், மையப்படுத்தப்பட்ட அமைப்பு தூரத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து உணவு தயாரித்துக் கொண்டுவருவதால், உணவு சீக்கிரம் கெட்டுப்போய்விடுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

பத்தாயிரம் பறவைகள் மரணம்!

ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரத்திலிருந்து 80 கிமீ தூரத்தில் இருக்கும் சாம்பார் ஏரி இந்தியாவின் மிகப் பெரிய உப்புநீர் ஏரியாகும். இந்த ஏரியைச் சுற்றிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து கிடப்பது சமீபத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இன்றுவரை அந்தப் பறவைகளின் மரணத்துக்குக் காரணம் இதுதான் என்று எதையும் உறுதியாகக் கூற முடியவில்லை. சிலர் ஏவியன் பொட்டுலிஸம் என்ற நோயைக் காரணமாகக் கூறுகிறார்கள்.

ஒருவித பாக்டீரியாவால் ஏற்படும் நோய் இது. அப்படியே இருந்தாலும் இறந்த பறவைகளைக் கொத்தித் தின்னும் காகங்களுக்கு ஏதும் ஆகவில்லையே என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. பறவைகள் ஏரியில் இருக்கும்போது மின்னல் தாக்கி, அதனால் ஏற்பட்ட மின்சாரத்தினால் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வேறு சிலர் அந்த ஏரியில் தோண்டப்படும் துளைக் கிணறுகளில் உள்ள மின்கம்பிகளில் கசிவு ஏற்பட்டு பறவைகள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். பறவைகளின் மரணத்தைச் சூழ்ந்த மர்மம் இன்னும் விலகியபாடில்லை.

SCROLL FOR NEXT