தமிழ்நாட்டின் பால் உற்பத்தியாளர்கள் - வேறு யார்? விவசாயிகள்தான் - வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மனுக்கள் கொடுத்தாயிற்று, போராட்டம் செய்தாயிற்று, சாலைகளில் பாலைக் கொட்டிப் புலம்பியும் ஆயிற்று. ஒன்றுக்கும் வழியில்லை. என்றைக்கெல்லாம் நம் முடைய பால் பண்ணைகள் பாலைத் திருப்பிவிடும் என்று தெரியவில்லை. இதற்கு மேல் நஷ்டப்படுவதிலும் அர்த்தம் இல்லை. என்ன செய்வது? யோசிக்கிறார்கள்.
மகிழ்ச்சியுடன் இருந்த பால் உற்பத்தியாளர்கள்
எனக்கு 1980 காலகட்டம் ஞாபகத்துக்கு வருகிறது. இன்றைய நாட்களைவிட அன்றைக்குக் கிராமங்களில் கால்நடைகள் குறிப்பாக கறவை மாடுகள் அதிகம் இருந்த காலகட்டம் அது. திருமணமாகும் ஒவ்வொருவருக்கும் பால் மாடு சீதனமாகக் கொடுக்கும் நடைமுறை சிதையாத காலம் அது. ஆனால், அப்போது பாலுக்குத் தட்டுப்பாடுதான் இருந்ததே தவிர, பாலைத் தரையில் கொட்டும் அளவுக்கு மிதமிஞ்சிவிடவில்லை. இத்தனைக்கும் அன்று ஆவின் தவிர்த்துப் பிற பால் நிறுவனங்களும் அதிகமில்லை. பிறகு, எப்படி பால் உற்பத்தியாளர்கள் பாலை விற்று மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்?
அன்றைக்குப் பால் வியாபாரம் உள்ளூர் சந்தையின் ஆதிக்கத்தில் இருந்தது. பால் விற்பனை வணிக நிறுவனங்களிடம் இல்லாமல் கால்நடை வைத்திருப்போர் பால்காரர் - டீக்கடைக்காரர் ஆகியோரின் நேரடித் தொடர்புடையதாக இருந்தது. இவர்கள் ஒருவருக்கொருவர் நேரடியான அறிமுகத்தில் இருந்ததால் ஒருவரின் தேவையும், கஷ்டமும் இன்னொருவருக்குச் சுலபத்தில் தெரியும். “நாளை நான் வர மாட்டேன், நீங்கள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்” என்று பால் உற்பத்தியாளரிடம் பால்காரரும், பால்காரரிடம் டீக்கடைக்காரரும் முன் கூட்டியே தகவல் சொல்லி பால் வீணா காமல் தடுத்துவிடுவார்கள். அப்படியே பால் மிஞ்சிவிட்டாலும் அதனை மோராக் கியோ, தயிராக்கியோ, வெண்ணெய் - நெய்யாக்கியோ விற்றுவிடுவார்கள்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத் தின் கடைக்கோடியில் இருக்கிறது எங்கள் ஊரான நல்லூர். அப்போது கோதண்டபுரம் கடைவீதியில் இரண்டு டீக்கடைகள். நல்லூரில் இரண்டு டீக்கடைகள். மொத்தம் 1,400 ஓட்டுகள் உள்ள சின்ன ஊரில், நான்கு டீக்கடைகள், 200 கறவை மாடுகள் இருந்தன. எங்கள் வீட்டிலேயே ஐந்து எருமைகள் இருந்தன. அதில் மூன்று எப் போதும் கறவையில் இருக்கும். ஒரு மாடு நான்கு லிட்டர் வீதம் காலையில் 12 லிட்டரும், மாலையில் மூன்று லிட்டர் வீதம் ஒன்பது லிட்டர் வரையிலும் கறக்கும். இதை நான்கு டீக்கடைகளுக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்துவிடுவார் அம்மா.
அன்றாடம் காசாகிவிடும் பால்
டீக்கடைகளில் பால் கணக்கு இருப்ப தால், பால்காரர்களுக்கு இட்லி - வடை கணக்கு இருக்கும். பால் உற்பத்தியாளர் கள் அங்கு தாங்கள் சாப்பிடுவதோடு, அவர்கள் வயலில் வேலைசெய்யும் ஆட்களுக்கும் காலையில் இட்லி, மதியம் போண்டா, மாலையில் டீ, பன் ஆகியவற்றைக் கணக்கில் வாங்கிச் செல் வார்கள். மாலையில் இந்தக் கணக்குப் போக மீதியுள்ள பணம் கொடுக்கப்பட்டு, பால் கணக்குத் தீர்க்கப்படும். அந்தக் காசு பக்கத்திலுள்ள மளிகைக் கடையில் புண்ணாக்கு வாங்கவும் ஆலைகளில் தவிடு வாங்கவும் பயனாகும். ஆக, அன் றாடம் கறந்த பால் அன்றாடம் காசாகி விடும். டீக்கடைக்காரருக்கும் இப்படிப் பால் டீயாகி, டீ காசாகிவிடும்.
சரி, ஊரிலுள்ள 200 மாடுகளின் பாலும் இப்படி டீக்கடைகளிலேயே விற்று விடுமா? இல்லை. உள்ளூர் தேவை போக மீதிப் பால் பால்காரர்கள் வழியே வெளியூர்களுக்குச் செல்லும். அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பித்து பால்காரர்கள் தொடர்ந்து வருவார்கள். அருகிலுள்ள நகரங்களையும் இடையில் வழிப்படும் சிறு கிராமங்களையும் அவை அடையும்.
இந்தப் பால் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் எல்லோருக்குமே பால்தான் ஒரே வழி என்றாலும், அமாவாசை தினத் தன்று யாரும் பாலுக்குக் காசு வாங்குவது கிடையாது. ஒவ்வொரு அமாவாசை யிலும் பால் இலவசம் என்பது அனைவருக்குமான பொதுவிதி.
அன்று பொற்காலம்; இன்று…
ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய்க்கு விற்ற காலத்தில், இப்படிக் கஷ்டம் இல்லாமல் பொற்காலத்தில் இருந்தார் கள் பால் உற்பத்தியாளர்கள். ஆனால், இன்றைக்குப் பால் பொங்கோ பொங் கென்று பொங்குகிறது. ஆனால், சாலை யில் பாலை ஓடவிட்டுவிட்டு கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், இது பால் பண்ணைக்காரர்களின் பொற்காலம்!
ஒரு லிட்டர் பாலை ரூ. 20-க்கு வாங்கி, அதுபோல இரண்டு மடங்கு விலைக்கு மக்களுக்கு விற்கும் பால் பண்ணையாளர் களால் யாருக்கு லாபம்? அவர்களுக்குத் தான் லாபம். பால் உற்பத்தியாளர்களுக் கும் நஷ்டம், மக்களுக்கும் நஷ்டம்! இன்றைய சூழலில் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ. 25 வரை உற்பத்திச் செலவாகிறது. ஆனால், பெரும்பாலான தனியார் பால் பண்ணைக்காரர்கள் பாலுக்குக் கொடுக்கும் விலை அதிகபட்சம் ரூ. 24 தான். அதுவும் தற்போது கட்டுப்படியாக வில்லை என்று கூறி ரூ. 18-க்குக் கேட் கிறார்கள் இப்போது. இப்படி ரூ. 18-க்கு வாங்கும் பாலைத்தான் ஒரு லிட்டர் ரூ.40-க்கு விற்கிறார்கள்.
சமீபத்திய ஆய்வுகளின்படி, தமிழ் நாட்டில் மொத்தம் 25 லட்சம் கறவை மாடுகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அவற்றிலிருந்து நாளொன் றுக்கு 1.5 கோடி லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. அதில் 50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களின் நேரடி உப யோகம் - விநியோகத்துக்குச் செல்கிறது. மீதியுள்ள ஒரு கோடி லிட்டர் பால் சந்தைப்படுத்தப்படுகிறது. இதில் 30 லட்சம் லிட்டர் பால் ரூ. 28 எனும் விலைக்குப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக ஆவின் நிறுவனத்துக்குச் செல்கிறது. மீதி 70 லட்சம் லிட்டர் பால் ஏனையோரால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில்தான் இந்தச் சிக்கல்கள் எல்லாம்.
இதற்கான காரணங்களைக் கேட்டால், பால் நிறுவனங்களும் பால் பண்ணை யாளர்களும் பட்டியலிடலாம். ஒரு விவசாயியின் பார்வையில், பிரச்சினை தெளிவானது. உள்ளூர் சந்தையை நம்பி வாழ்வதற்கும் வெளியூர் சந்தையை நம்பி வாழ்வதற்கும் உள்ள வேறுபாடு இது. அவ்வளவுதான்!
கரு.முத்து,
தொடர்புக்கு: muthu.k@thehindutamil.co.in