சிறப்புக் கட்டுரைகள்

பொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்!

முகம்மது ரியாஸ்

முகம்மது ரியாஸ்

வேலையில்லாப் பட்டதாரி என்ற பதம் இன்று பொறியியல் மாணவர்களுக்கான அடையாளமாக மாறியுள்ளது. அவர்களின் வேலையின்மை குறித்துப் பேசப்படும் ஒவ்வொரு சமயத்திலும், ‘இப்போதுள்ள மாணவர்களுக்குப் பொறியியலின் அடிப்படையே தெரியவில்லை. அவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?’ என்பது தவறாமல் குறிப்பிடப்படுகிறது.

இக்கூற்று, அதன் நேரடி அர்த்தத்தில் மாணவர்களின் போதாமையைச் சுட்டக்கூடியதாக இருந்தாலும், உண்மையான அர்த்தத்தில் அவர்களது கல்லூரியையும், அவர்களுக்குப் பயிற்றுவித்த பேராசிரியர்களின் திறனையும் சேர்த்தே கேள்விக்குள்ளாக்குகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான கூட்டமைப்பு (ஏஐசிடிஇ) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இனி, பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிய வேண்டும் எனில், எம்இ அல்லது எம்டெக் தகுதி மட்டும் போதாது. கூடுதலாக, ஒரு வருட ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்திருக்க வேண்டும். அதேபோல், தற்போதைய உதவிப் பேராசிரியர்கள் பதவி உயர்வு பெற வேண்டும் என்றாலும், இந்தப் பயிற்சியை நிறைவுசெய்திருக்க வேண்டும். 2017-லேயே இதற்கான விதை போடப்பட்டாயிற்று. 2018-ல் இதுதொடர்பான வரைவு வெளியிடப்பட்டது. இந்நிலையில், அடுத்த வருடம் முதல் இந்தப் புதிய விதிமுறை அமலுக்கு வரவிருப்பதாக ஏஐசிடிஇ தலைவர் தெரிவித்திருக்கிறார்.

ஏன் இந்தப் புதிய திட்டம்?

‘தற்போதைய ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் முறை குறித்து போதிய பயிற்சி இல்லை. உலக அளவில் கல்வி முறை முற்றிலும் நவீனமாக மாறிவருகிறது. அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சியளிப்பது அவசியம்’ என்கிறது ஏஐசிடிஇ. வாஸ்தவம்தான். பிற நாடுகளில் ஆசிரியர் பணிக்கான விதிமுறைகள் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டவை.

அங்கு ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்றால், அதற்கான தகுதித் தேர்வுகள் மிகக் கடினமானவை. அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு என்று தனிப் பயிற்சி ஏதும் கிடையாது. அவ்வகையில் ஏஐசிடிஇ-யின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

ஆனால், ஒரு கேள்வி - பேராசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்கு அக்கறை காட்டும் அதேவேளையில், அவர்களுக்கான குறைந்தபட்ச நியாயங்கள் கிடைக்கின்றனவா என்பது குறித்து ஏன் ஏஐசிடிஇ யோசிப்பதில்லை? நான் பணியாற்றிய தனியார் பொறியியல் கல்லூரியில் எங்கள் துறைத் தலைவரின் வயது 40. கிட்டத்தட்ட 13 வருட அனுபவம் கொண்டவர்.

அவருக்கான ஊதியம் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள். 70,000? 50,000? அவருடைய மாதாந்திர ஊதியம் ரூ.23,000. எனில், புதிதாகப் பணியில் சேர்பவருக்கு எவ்வளவு வழங்கப்படும்? ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.12,000. வருடத்தில் மூன்று மாதங்கள் அந்த ஊதியத்துக்கும் உத்தரவாதம் இல்லை. ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் அவர் சார்பாக 5 மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க வேண்டும்.

இல்லையென்றால், மூன்று மாத ஊதியம் கிடையாது. இதுதான் யதார்த்தம். இந்த ஊதியமே வருமா, வராதா என்ற நிச்சயமின்மையில் இருக்கும், பிழைப்புக்காக மாணவர்களைத் தேடி அலையும் ஆசிரியர்களிடமிருந்து எப்படிப்பட்ட தரத்திலான மாணவர்களை எதிர்பார்க்க முடியும்? முறையாக, ஏஐசிடிஇ விதிமுறைகளின்படி உதவிப் பேராசிரியர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சமாக ரூ.55,000 வழங்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், ஒருசில தனியார் கல்லூரிகளைத் தவிர்த்தும் வேறு எந்தக் கல்லூரிகளும் இந்த ஊதியத்தை வழங்குவதில்லை. ஏஐசிடிஇ நிர்ணயித்த ஊதியத்தை வழங்கும் கல்லூரிகள்தான் முன்னணிக் கல்லூரிகளாக இருந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பீட்டளவில் அங்கு பயின்றுவரும் மாணவர்களின் கல்வித் தரம் மேம்பட்டதாக இருக்கிறது. அப்படியென்றால், மீதமுள்ள கல்லூரிகளில் ஏன் முறையான ஊதியம் சாத்தியப்படவில்லை?

என்னதான் நடக்கிறது?

பொறியியல் படிப்பின் சிறப்பான காலகட்டமாக 2005 முதல் 2010 வரை குறிப்பிட முடியும். மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சியின் ஊடாகவே பொறியியல் படிப்பின் மீதான மோகமும் வளர்ந்தது. இக்காலகட்டத்தில் படிப்பு முடித்து வெளிவந்தவர்கள் நல்ல ஊதியத்தில் வேலை பெற்றனர். படிப்பு என்றால் அது பொறியியல் மட்டும்தான் என்ற சூழல் உருவானது. 2007-2008ல் மொத்தமாக 247 பொறியியல் கல்லூரிகள்தான் தமிழ்நாட்டில் இருந்தன. ஆனால், 2010-2011ல் அது 431 ஆக உயர்ந்தது. இரண்டே வருடங்களில் 184 கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கம் வேறு என்னவாக இருக்க முடியும்?

பல கல்லூரிகளில் எவ்வித அடிப்படை வசதிகளையும் காண முடியாது. அங்கு சேர்ந்த மாணவர்களெல்லாம் அடிப்படைத் தொழில்நுட்ப அறிவுகூட இல்லாமல் பட்டம் பெற்று வெளிவரத் தொடங்கினர். இப்படியான கல்லூரிகளின் பெருக்கத்துக்குப் பிறகே, மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் போக்கு உருவானது. ஆசிரியர்களின் ஊதியம் மேலும் குறைக்கப்பட்டது. அதற்கேற்ப அடிப்படைத் திறனே இல்லாத முதுகலைப் பட்டதாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதன் நீட்சியாக, பொறியியல் கல்லூரி ஆசிரியர் என்ற பணியே எந்த மதிப்புமற்ற கொத்தடிமைப் பணியாக மாற்றப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, கல்லூரி ஆசிரியர்கள் அவர்களது கல்லூரி நிர்வாகத்தால் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்; தற்கொலை வரை நீள்கிறது. கடந்த வருட சாட்சி வசந்தவாணன். இதன் விளைவு, நாம் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் கல்வித் தரம் குறைதல் மட்டுமல்ல; மாணவர்களின் நடத்தை மிகமிக மோசமான அளவில் மாறிவருகிறது. வகுப்பறையிலேயே போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது தற்போது மிக இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ‘கல்வி வியாபாரம் ஆகிவிட்டது’ என்பதெல்லாம் பழைய சொல்லாடல். இன்று நடப்பது வியாபாரம்கூட அல்ல, மோசடி.

அரசு என்ன செய்ய வேண்டும்?

வணிக நோக்கினாலான பொறியியல் கல்லூரிகளின் பெருக்கமும், அதைத் தொடர்ந்து நாம் சந்தித்துவரும் பிரச்சினைகளும் நாம் எதிர்பாராத அளவுக்குச் சிக்கலானவையாக உருவெடுத்துள்ளன. புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடங்கி, கல்லூரி நிர்வாகம், பணி நியமனம், ஊதியம், அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள போதாமை, மாணவர்களின் மோசமான போக்கு எனக் கல்லூரி தொடர்பாக நிகழ்ந்துவரும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கும் இந்திய அளவில் ஏஐசிடிஇயும் தமிழக அளவில் அண்ணா பல்கலைக்கழகமும் முகங்கொடுக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஏஐசிடிஇயின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்யாமல் வேறு எந்த மாற்றங்கள் கொண்டுவந்தாலும் உரிய பயன் சாத்தியமில்லை. எனவே, முதலில் அவர்களுக்கான குறைந்தபட்ச நியாயத்தையாவது உறுதிசெய்யுங்கள். அதன் பிறகே நீங்கள் அவர்களுக்குக் கட்டளையிடும் தார்மீக உரிமையைப் பெறுகிறீர்கள்.

- முகம்மது ரியாஸ்,
தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

SCROLL FOR NEXT