சிறப்புக் கட்டுரைகள்

முல்லை பெரியாறு 120: கேரளத்தின் நெருக்குதலால் 136 அடியாக நீர்மட்டம் குறைப்பு

ஆர்.செளந்தர், எஸ்.ஸ்ரீனிவாசகன்

பெரியாறு அணை நீரால் தென் மாவட்டங்களில் பாசனம் செழித்தது. 1922, 1924, 1943 ஆகிய ஆண்டுகளில் அணை நிரம்பி கேரளப் பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்நிலையில் பெரியாறு அணை தண்ணீர் மூலம் நீர்மின் உற்பத்தி செய்யும் தமிழகத்தின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது கேரள அரசு.

சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராஜர் மேற்கொண்ட முயற்சியால் 1958 அக்டோபர் 12-ல் மின் திட்டம் தொடங்கியது. இதற்காகப் போர்பே அணையிலிருந்து தலா 400 கனஅடி தண்ணீரைக் கொண்டு வரும் 4 குழாய்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தண்ணீர் லோயர் கேம்ப்பிலுள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்த 4 டர்பைன்களில் விழச் செய்து, 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதைக் கேரள அரசால் சகிக்க முடியவில்லை.

இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து சுமார் 48 கி.மீ. தூரத்தில் 555 அடி உயரம், 1,200 அடி நீளத்தில் இடுக்கி அணையை 1973-ல் கேரளா கட்டியது. இதன் கொள்ளளவு 70 டிஎம்சி.க்கும் அதிகம். பெரியாறு அணையைப் போல் 7 மடங்கு பெரியது. இடுக்கி அணை மூலம் 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் நீர் மின் நிலையமும் கட்டப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்குத் தண்ணீர் அணைக்கு வராததால் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் அணையை இவ்வளவு செலவு செய்து ஏன் கட்ட வேண்டும் என அம்மாநிலத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பெரியாறு அணையின் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டு செல்ல கேரளா திட்டமிட்டது. இதற்குப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கவிடாமல் செய்வதற்கான காரியத்தில் ஈடுபட்டது.

இதன்படி, 1979-ல் பெரியாறு அணை பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாகக் கேரள பத்திரிகை ஒன்றில் தவறான தகவலை வெளியிடச் செய்தது. 152 அடிவரை தண்ணீரைத் தேக்கினால் அணை உடைந்து, கேரளாவில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிடும் எனத் தவறான தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டு மக்களிடம் பீதி கிளப்பப்பட்டது. கேரள அரசியல்வாதிகளும் இப்பிரச்சி னையைப் பெரிதாக்கினர். இதை நம்பிய அம்மாநில மக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். கேரளத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதோடு உயிரிழப்பும் ஏற்பட்டது. போராட்டம் பெரிய அளவில் நடந்ததால் இரு மாநில உறவுகளிலும் விரிசல் ஏற்படும் நிலை உருவானது. அணை பலமாக இருப்பதாகவும், வெள்ளம் ஏற்பட்டால் எவ்விதப் பாதிப்பும் கேரளாவுக்கு ஏற்படாது என அறிவியல் பூர்வமாகத் தமிழக அரசு ஆதாரங்களை எடுத்துக்கூறியும் எடுபடவில்லை.

நீர்மட்டம் 136 அடியானது

அணையை ஆய்வு செய்ய மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் கே.சி.தாமஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1979-ம் ஆண்டு நவ. 23-ம் தேதி பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின்போது அணை பலமாக இருப்பதை தாமஸ் உறுதி செய்தார். 1979 நவம்பர் 25-ல் திருவனந்தபுரத்தில் இருமாநில அரசுகள் சார்பில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அணை பலப்படுத்துவது அவசியம் எனக்கூறிய தாமஸ், 3 கட்டமாகப் பலப்படுத்தும் பணி முடியும் வரை அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. கேரள அரசு நெருக்கடி மற்றும் வற்புறுத்தல் காரணமாக நீர்மட்டத்தை குறைக்கக் குழு தலைவரால் முடிவு செய்யப்பட்டுக் கையெழுத்திடப்பட்டது.

இதையடுத்து நீர்மட்டம் 136 அடிக்கும் மேல் உயர்ந்தால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வகையில், மதகுகள் உயர்த்தப்பட்டன. இதனால் தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது. இது திட்டமிட்டுப் பொய் பிரச்சாரம் செய்த கேரளத்துக்கும் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் மிகப்பெரிய வெற்றியாக அது அமைந்தது.

தமிழகத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு

136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 டிஎம்சி தண்ணீரைத் தமிழகம் இழந்தது. இதனால் செழிப்பாகி வந்த விவசாய நிலங்களில் தரிசாக மாறிய நிலப்பரப்பு மட்டும் 38 ஆயிரம் ஏக்கர். இரு போகச் சாகுபடியில் இருந்து ஒருபோகச் சாகுபடியான நிலம் 26 ஆயிரம் ஏக்கர். ஆற்றுநீரை நம்பி சாகுபடி நடந்த நிலையில், நீர்வரத்து இல்லாததால் ஆழ்குழாய் சாகுபடிக்கு மாறிய நிலம் 58 ஆயிரம் ஏக்கர். ஆற்றில் நீரோட்டம் குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு எனப் பல பிரச்சினைகளால் 5 மாவட்டத்தினர் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.

விவசாய உற்பத்தி இழப்பு 1979-ம் ஆண்டு மதிப்பின்படி ஆண்டுக்கு ரூ.55 கோடி. மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடி. தமிழகத்துக்கு 1980-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இழப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

- முல்லை மலரும்...

SCROLL FOR NEXT