சிறப்புக் கட்டுரைகள்

பாலாற்றை மீட்டெடுக்க இதுவே தருணம்

வ.செந்தில்குமார்

பசுமை வேலூர் இயக்கம் சார்பில் வேலூர் நகரின் இயற்கையைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக மரக்கன்று நடும் திட்டத்தை ஊக்கமளித்து வருகிறது. இதற்காக விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

பசுமை வேலூர் இயக்கத்தின் இரண்டாவது மிகப்பெரிய திட்டம் ‘கிளீன் பாலாறு’ எனப்படும் தூய்மை பாலாறு. தமிழக அரசு, பொதுப் பணித்துறை, மாவட்ட நிர்வாகம் உதவியுடன் கிளீன் பாலாறு திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டத்தில் பாலாறு பழைய பாலத்தில் தொடங்கி புதிய பாலம் வரை 28 லட்சம் சதுரடி பரப்பளவு பாலாறு சுத்தப்படுத்தப்பட்டது.

முதல் கட்ட பணிகள் நிறைவேற்றியபோது வேலூர் மக்கள் பாலாற்றை ஆச்சர்யமாக பார்த்துச் சென்றனர். தேங்கிய கழிவு நீர், மாநகராட்சி கொட்டி வந்த குப்பை, புதர்களாய் மண்டியிருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றியதால் சுமார் ஒரு லட்சம் மக்கள் கூடும் பிரம்மாண்ட கால்பந்து மைதானமாக பாலாறு காட்சியளித்தது.

இரண்டாவது கட்டமாக புதிய பாலத்தில் தொடங்கி சேண்பாக்கம் ரயில்வே பாலம் வரை 86 லட்சம் சதுரடி தூய்மைப்படுத்தப்பட்டது. மூன்றாவதாக பழைய பாலத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தூய்மையாக்கப்படவுள்ளது.

சவால்களுடன் தொடங்கிய இந்த பணி குறித்து பசுமை வேலூர் இயக்க தலைவர் ஜி.வி.செல்வம் கூறுகையில், ‘ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அடையாம் இருப்பது போல, வேலூர் மாவட்டத்தின் அடையாளம் பாலாறுதான். தன்னுடைய நிலையை இழந்துவிட்ட பாலாற்றை பாதுகாக்க வேண்டிய சரியான நேரம் இதுதான். பாலாற்றை அழகாக்கும் சிறிய முயற்சியை கிளீன் பாலாறு இயக்கம் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் உதவியுடன் தொடர்ந்து 6 மாதமாக நடைபெறும் இப்பணி முக்கிய கட்டத்தில் இருக்கிறது. பாலாற்றில் பறவைகள் கூடு கட்டி தங்கவும், மனிதர்களுக்கு நிழல் தரும் மரங்கள், வடக்கு, தெற்கு என இரண்டு கரைகளில் புல்வெளி பாதைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதை முனைப்புடன் செயல்படுத்த திட்டங்கள் வகுத்துள்ளோம்’என்றார்.

நவீன தொழில்நுட்பம்

பாலாற்றில் தினமும் 30 லட்சம் லிட்டர் கழிவு நீர் கலக்கிறது. இதில், ஒரு பகுதியை சுத்திகரித்து மரங்கள் வளர்க்க பயன்படுத்தப்படும். இதன்மூலம் குறைந்த வெப்பமும் கூடுதல் மழையும் வேலூருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த திட்டத்தை நிறைவேற்ற பசுமை வேலூர் இயக்கம் தயாராக இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி பாலாறு வறண்டுதான் காணப்படுகிறது. என்னதான் ஏரிகளை வெட்டியும், கரைகளை உயர்த்தி யும், பல தடுப்பணைகளை கட்டியும் வைத்திருந் தாலும் கர்நாடகத்தில் தொடங்கி தமிழகம் வரை வெள்ளம் ஓடும் அளவுக்கு தண்ணீர் வரத்து இல்லை. இருப்பினும் பாலாற்றின் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாக்க தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டியது அவசியம். கழிவுநீரால் மாசடைந்த ஆற்றை நவீன தொழில் நுட்பத்துடன் சீரமைக்க வேண்டும். இதன்மூலம் லாயக்கற்ற நிலத்தடி நீர் விவசாயத்துக்கு பயன்படும். ஆற்றில் விடப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

பாதுகாப்போம்..

நந்திதுர்கத்தில் பிறந்து கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தவழ்ந்து நிறைவாக தமிழகத்தில் ஓடிய பாலாற்றை உரிமையுடன் நாம் பெறுவதில் பல்வேறு தடைகள் இருக்கலாம். தோல் தொழிற்சாலைகளாலும், மணல் மாஃபியாக்களாலும் இன்று பொலிவிழந்து காணப்படலாம். இருப்பினும் பாலாறு என்பது வெறும் நதி அல்ல. அது மானுடம் தழைக்க கிடைத்த மாவரம். இதை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் அனைவருக்கும் பங்குண்டு. இதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. ஊர்கூடி தேர் இழுப்போம். ஒருநாள் பாலாற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடிவரும்.

கிருஷ்ணா- துங்கபத்திரா- பாலாறு

தமிழ்நாடு பசுமை பாதுகாப்பு மக்கள் இயக்க தலைவர் ஏ.சி.வெங்கடேசன் கூறும்போது, ‘ஆந்திர மாநில அரசு வரும் 2044-ம் ஆண்டுக்குள் கிருஷ்ணா, கோதாவரி, வம்சதாரா, நாகவலி ஆறுகளில் இருந்து 154 டிஎம்சி உபரி நீரை சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி செலவு மதிப்பிடப் பட்டுள்ளது. தென்னக நதிகள் இணைப்பு திட்டத்தில் கிருஷ்ணா-துங்கபத்திரா-பாலாறு இணைப்பு இடம்பெற்றுள்ளது. இதனை செயல் படுத்த ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்றார்.

சுரண்டப்படும் மணல் வளம்

பாலாறு கொடுத்த கொடைகளில் முக்கியமானது வளமான மணல் வளம். கர்நாடகம், ஆந்திர மாநிலத்தைவிட தமிழ்நாட்டில் ஓடும் பாலாற்றில் தான் அதிகப்படியாக மணல் படிந்துள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் தோரயமாக 60 முதல் 80 அடி ஆழத்துக்கு மணல் படர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக பாலாறு சேர்த்து வைத்த மணல் வளத்தை தொடர்ந்து சுரண்டி ஆற்றின் அடையாளத்தையே சிதைக்கின்றனர் மணல் மாஃபியாக்கள். கடந்த 10 ஆண்டுகளில் விதிகளை மீறி மணல் சுரண்டியதால் பாலாற்றின் அடியில் ஓடும் நிலத்தடி நீரோட்டம் வெகுவாக பாதித்துள்ளது என்கிறார்கள்.

காற்றில் பறக்கும் விதிகள்

பொதுப் பணித்துறை, தொழில் துறையின் அங்கமான கனிம வளத்துறை, வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத் துறை, தொழில்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதலுடன் மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் மதிப்பீடு தாக்கீட்டு ஆணையத்துக்கு (SEIAA-State Environmental Impact Assessment) மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்கிறார். நதி படுகையில் படர்ந்துள்ள மணல் பரப்பில் 1 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள SEIAA அனுமதி அளிக்கிறது. ஆனால், 1 மீட்டர் ஆழம் என்பதை 5 முதல் 15 மீட்டர் ஆழம் வரையும் மணல் அள்ளுவதை யாரும் கண்டுகொள்வதில்லை.

குவாரியை திறக்க முயற்சி

பள்ளிகொண்டா அடுத்துள்ள கந்தநேரி கழனிப்பாக்கம் பாலாற்றில் 2005 முதல் 2006-ம் ஆண்டு வரை மணல் குவாரி இயங்கியது. மூடப்பட்ட இந்த குவாரியை வேறு பாதை வழியாக திறக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளை போகும் இயற்கை வளத்தை தடுக்க போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் குரல் அரசு காதுகளில் கேட்பதே இல்லை. வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே செயல்படும் பூண்டி பாலாறு மணல் குவாரிதான் பெரியது. பாலாற்றில் இருந்து டிராக்டரில் ஏற்றப்பட்ட மணல் அருகில் இருக்கும் வயல்களில் அமைக்கப்பட்டுள்ள கிடங்கு களில் சேமிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் மணல் சுரண்டும் பணி நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் இரா.முல்லை தெரிவித்தார்.

பாலாற்றின் உப நதியான நீவா நதியுடன் கிருஷ்ணா நதி இணைக்கும் திட்டமும் உள்ளது. இதனால் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கு கிருஷ்ணா-பாலாறு இணைப்பு திட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது.

SCROLL FOR NEXT