சிறப்புக் கட்டுரைகள்

நேர்மறை செய்திகள் இதழியலுக்கு நல்லது!

செய்திப்பிரிவு

டேவிட் புரூக்ஸ்

‘மாற்றத்தைக் கொண்டுவர முடியும்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமெரிக்க இதழியல் பெரும்பாலும் இயங்குகிறது என்று என் சகா டேவிட் போர்ன்ஸ்டெயின் கூறுவார். எங்கே தவறு என்று இதழாளர்களாகிய நாம் சுட்டிக்காட்டினால் உலகம் அதைத் திருத்திக்கொண்டுவிடும் என்றே அமெரிக்க இதழியலாளர்கள் கருதுகின்றனர். எனவே, நம் தொழிலின் அங்கமாக மற்றவர்களின் தவறுகளை அம்பலப்படுத்துகிறோம், பிரச்சினைகள் மீது வெளிச்சங்களைப் பாய்ச்சுகிறோம், மோதல்களை அடையாளம் காட்டுகிறோம்.

ஆனால், இது சில சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் மக்கள் தங்களை அதிகாரமற்றவர்களாக நினைக்க வைக்கிறோம், அவர்களை மனச்சோர்வுக்கு உள்ளாக்குகிறோம். தொடர்ந்து இதுபோன்ற அதிரடி செய்திகளையே வாசிக்கும் மக்கள், உண்மையிலேயே மனச்சோர்வில் ஆழ்ந்துவிடுகின்றனர். எதிர்காலம் குறித்து அச்சப்படுகின்றனர்.

‘தி டைம்ஸ்’ பத்திரிகைக்கு எழுதும் போர்ன்ஸ்டெயின், மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறும் இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறார். பிரச்சினைகளை அம்பலப்படுத்த வேண்டும், அதேசமயம் அந்தப் பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது என்பதையும் சொல்லித்தர வேண்டும் என்கிறார். தீர்வுகளுக்காக அலைவது இருக்கிறதே, அது பிரச்சினைகளே பரவாயில்லை என்ற அளவுக்கு நம்மைப் பரபரப்பில் ஆழ்த்திவிடுகின்றன. சமூகக் குறைபாடுகளைச் சரியாக்குவதையும், சமூகத்தை வளர்த்தெடுப்பதையும் செய்தியாக அளிக்க முடியாது என்றும், அது மக்களைக் கவராது என்றும் பல பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர். அந்த நினைப்பு தவறானது.

வசீகரமிக்க ஆளுமைகள்

கடந்த ஓராண்டை சமூக சேவையில் ஈடுபடுவோருடன் செலவழித்தேன். 275 சமூக சேவகர்கள் சமீபத்தில் வாஷிங்டன் நகரில் மாநாட்டின்போது சந்தித்தனர். ‘மக்களை நெருக்கமான வலைப்பின்னலாக இணையுங்கள்’ என்பது அந்த மாநாட்டின் நோக்கமும் பெயருமாக இருந்தது. அங்கே நான் சந்தித்தவர்கள் வசீகரமும் ஆளுமையும் மிக்கவர்கள். சார்லஸ் பெர்ரி என்பவர் 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். சிகாகோவில் மக்களுக்கு சுகாதார வசதிகளை அளித்துவருகிறார். டைலான் டெடி ராணுவத்தில் பணிபுரிந்தவர். இராக்கில் பணியாற்றியிருக்கிறார். மிகவும் பயங்கரமான காட்சிகளை நேரில் பார்த்ததால் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளானவர். தன்னைப் போல ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்காக நியூஆர்லியான்ஸில் சமூகக் குடியிருப்புகளைக் கட்டியிருக்கிறார். சாரா அட்கின்ஸ் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தபோது, குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக்கொண்ட கணவரைப் பார்த்து அதிர்ந்தார். இப்போது அப்பளாச்சியன் ஓஹியோ என்ற ஊரில் இலவச மருந்தகம் நடத்திவருகிறார்.

டெக்சாஸ் நகரில் பணிபுரியும் பாஞ்சோ ஆர்குலஸ், தண்டுவட பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களுக்குப் பணி நேரத்தில் உதவும் சேவையைச் செய்கிறார். அவர்களுக்கு டயாபர்களை மாற்றிவிடுகிறார், சக்கர நாற்காலிகளைக் கொண்டுவந்து வைக்கிறார், கழிப்பறைக்குச் செல்லவும் உணவகம் செல்லவும் கண்ணியத்துடன் வாழவும் உதவுகிறார். பாஞ்சோவும் அவரைப் போன்றவர்களும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கும்போது, நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் இந்தத் தகவல்கள், ஏன் பிற வாசகர்களையும் ஈர்க்காது, ஏன் இவற்றையெல்லாம் கட்டுரைகளாகத் தரக் கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

தற்கொலைக்காரனை மீட்ட பெண்

அனைவருக்கும் தெரிந்தவர் அந்த ஆராய்ச்சியாளர். அவர் சிறுமியாக இருந்தபோது மற்றவர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார். அப்போது தனக்கேற்பட்ட மன உணர்வுகளை மறக்காத அவர், இம்மாதிரியான தருணங்களைக் குழந்தைகள் எந்த மனநிலையுடன் எதிர்கொள்கிறார்கள் அல்லது அதற்குப் பிறகு எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று ஆராய்ந்தார்.

தெற்கு கரோலினாவிலிருந்து வந்த ஒரு பெண், வாழ்க்கையில் தனக்கு மிகவும் பிடித்தவர்களை ஒவ்வொரு தருணங்களில் இழந்திருக்கிறார். அதனால், தனிமையில் வாடியிருக்கிறார். ஒருநாள் பாலத்தைக் கடக்கும்போது, அதன் கைப்பிடிச் சுவர் மீது ஏறி நின்றுகொண்டு ஆற்றில் குதிக்க ஒருவர் தயாராகிவருவதைப் பார்த்தார். மெள்ள அவரை நெருங்கி, தற்கொலை முயற்சியைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை. அப்படியானால் நீங்கள் ஆற்றில் குதியுங்கள், உங்களுக்குப் பின்னால் நானும் குதிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே சுவரில் ஏறி நின்றவர் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டார். இப்படி ஒவ்வொருவர் பேசியதும் உணர்ச்சிகரமாக இருந்தது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுடன் எப்படிப் பேசுவது, அவர்களுடைய மனங்களை எப்படி மாற்றுவது என்று நன்கு தெரிந்தவர்களாகவே அனைவரும் இருந்தனர். புதியவரோடு உறவை ஏற்படுத்திக்கொள்வதில் அவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருந்தனர்.

கறுப்பர்கள் கோபப்படலாம்

இம்மாதிரியான மாநாட்டுக்கு வரும் கறுப்பர்கள்கூட தங்களுடைய கோபத்தைக் காட்டும் வகையில் வார்த்தைகளைக் கொட்டிப் பேசலாம். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிலர் அப்படித்தான் பேசினர். அவர்களது பேச்சில் அனல் பறந்தது, தர்மசங்கடத்தில் நெளிய வேண்டியிருந்தது, இருந்தும், மனத் தடைகளை உடைத்துக்கொண்டு அவர்களுடன் மேலும் நெருக்கமாகச் செல்ல முடிந்தது. ஒரு சமூகத்தை உருவாக்குவது எப்படி என்று அந்த மாநாட்டில் பலவிதமான கருத்துகள் வெளிப்பட்டன. அயல் வீட்டார் என்பவர்கள் நாம் வாழும் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவர்கள். நான் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை. பிரச்சினைகள் தானாகவே வெளிப்படட்டும் என்று அனுமதிக்கிறேன். பிரச்சினைகளால் ஏற்படும் காயங்கள் மாயமாகத் தானாகவே ஆறிவிடுவதையும் மதிக்கிறேன். இதுவரை செய்திராத ஒன்றைச் செய்யவே ஒவ்வொரு முறையும் முயல்கிறோம்.

பிற சமூகத்தவரோடு கூடி வாழ்வதே அமெரிக்க வாழ்க்கை முறையின் மையம் என்று அலெக்சிஸ் டி டோகிவிலி தெரிவிக்கிறார். செய்தி ஊடகங்களில் பணியாற்றும் நாம் இதற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. சமூக மாற்றத்தை ஏற்படுத்துவோரை நாம் அதிகம் கவனிப்பதில்லை. இவர்கள் பழகுவதற்கு சாந்தமானவர்களாகக்கூட இருக்க மாட்டார்கள். எந்தவித பாவனையும் அற்றவர்கள், நேர்மையானவர்கள், சில வேளைகளில் கசப்பான கருத்துகளை முகத்துக்கு நேராகக்கூடத் தெரிவித்துவிடுவார்கள்.
நம் வாழ்க்கையில் 10% அளவுக்கே முக்கியத்துவம் வாய்ந்தவற்றுக்காக, நம் உழைப்பில் 90% நேரத்தைச் செலவிடுகிறோம்; வாழ்க்கையின் 90% அளவை ஆக்கிரமிக்கும் விஷயத்துக்கு நம் நேரத்தில் 10% மட்டுமே செலவிடுகிறோம். இது எப்படி சமூக நலனுக்கு உதவியாகிவிடும்?

© தி நியூயார்க் டைம்ஸ்,

தமிழில்: ஜூரி

SCROLL FOR NEXT